நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் ஈழத்தமிழர் பாதுகாப்பை உறுதிப்படுத்துமா?நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் ஈழத்தமிழர் பாதுகாப்பை உறுதிப்படுத்துமா?

இலங்கை வந்தடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை 7 நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பதோடு வடக்குக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்போடு காத்திருந்த நவிப்பிள்ளையின் இந்த விஜயத்தினை சிங்கள கடும்போக்கு சக்திகள் சற்று மிகையாக கருத்துக்களை தெரிவித்து  வருகின்ற போதிலும் இலங்கை அரசு பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

navi_01

கொழும்பு வந்தடைந்ததும் பத்திரிகையாளர்களை சந்தித்த போது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவரும் வரை தனது இலங்கைக்கான பயணத்தை தாமதப்படுத்தியதாகவும் மற்றும் தான் இலங்கையை விமர்சிப்பதற்கு வரவில்லை மனித உரிமைகள் பற்றி ஆராய்வதற்காக வந்துள்ளதாக கூறியமை இலங்கை அரசு மீது ஒரு விதமான மெத்தனப் போக்கை கடைப்பிடிக்க உள்ளதாக தெரிகின்றது.

2009 ம் ஆண்டு பேரவலத்துக்குப்பின் இலங்கைக்கு வருகை தந்த ஐ நா செயலர் பாங் கி மூன், வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களிற்கு பூமாலையும் பூச்செண்டுமாக வருகை தந்தபோது முள் வேலிக்குப்பின்னால் லட்சக்கனக்கான மக்கள் ஏக்கத்துடன் பார்த்து நின்றார்கள்.  ஐ நா செயலர் வருகை தந்து நான்கு வருடங்கள் ஆகின்றன ஆனால் இன்றும் பல தமிழர்கள் நலன்புரி நிலையங்கள் என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

தனது வடக்குப் பயணத்தின் போது மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள், யாழ்ப்பாணத்தின் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்திக்கவுள்ளார். வடக்கில் தேர்தல் நடைபெற உள்ள இந்த நேரத்தில் இவரது பயணம் அமைவதால் அரசியல் கட்சிகள் தமக்கு சாதகமாகவே பயன்படுத்த முயற்சிக்கின்றன. ஆயினும் மனித உரிமைகளை மீறிய பல அரசியல் கட்சிகள் சற்று தள்ளி நிற்கலாம். அவர்களுக்கு நவிபிள்ளை ஒரு வேண்டாத விருந்தாளியாக இருக்கலாம்.

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம், சமகால அரசியல் நிலைமைகள், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தனது பயணத்தின் போது விரிவாக ஆராயவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர், அது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஏற்கனவே இலங்கை விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள், பிரேரணைகள் மற்றும் அவற்றின் மீதான வாக்கெடுப்புக்கள் அனைத்தும் இதுவரை தமிழர் பக்கத்தில் எதுவித பலனையோ அல்லது பாதுகாப்பையோ பெற்றுத்தரவில்லை. நவிபிள்ளை சமர்ப்பிக்கின்ற இந்த அறிக்கையும் ஐ நா அலுவலகத்தில் தூங்கப்போகின்றதா அல்லது தமிழர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

– வந்தியத்தேவன் –

ஆசிரியர்