த. தே. கூ. சார்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற குருகுலராஜா அவர்களுடனான ஒரு செவ்வித. தே. கூ. சார்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற குருகுலராஜா அவர்களுடனான ஒரு செவ்வி

வடமாகாண சபைக்கான தேர்தல் நெருங்கி வருகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்கு படித்தவர்கள், மக்களுக்கு கடந்த காலங்களில் காத்திரமான சேவையாற்றியவர்கள், கடந்தகால எழுச்சியிலும் வீழ்ச்சியிலும் மக்களுடன் மக்களாக இருந்தவர்கள் எனப்பலரை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற திரு குருகுலராஜா அவர்களுடனான ஒரு செவ்வி.

கே: தேர்தல் முன்னெடுப்புக்கள் தீவிரமடைந்துள்ள இந்த நேரத்தில் வணக்கம் லண்டன் இணையம் சார்பாக உங்களுடன் இந்த சந்திப்பு அமைகின்றது. வணக்கம் குருகுலராஜா சேர், உங்களுடைய தேர்தல் பணிகள் எந்த அளவில் இருக்கின்றன?

வணக்கம் லண்டனுக்கு, எனது நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக. எனது தேர்தல் பணிகள் மிகவும் முனைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் திரு.அரியரத்தினம். திரு.பசுபதிப்பிள்ளை ஆகிய இருவரும் என்னுடன் இணைந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி மண்ணின் மைந்தன் கௌரவ பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் முழு அளவிலான பங்களிப்புடன் எமது தேர்தல் பிரச்சாரப்பணிகளைச் செய்து வருகின்றோம். கிராமம் கிராமமாக நடைபவனியில் சென்று ஒவ்வொரு வாசற்படியிலும் மக்களைச் சந்திக்கின்றோம். இவ்வாறு சந்திப்பதனால் மக்களுடைய அன்றாட பிரச்சனைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் பயப்பீதியையும் எம்மால் அறியக்கூடியதாக உள்ளது. தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் எம் மூவருக்கும் இது ஒரு புதிய அனுபவமாக இருந்தபோதிலும் கடந்த இரண்டு வாரங்களாக கொழுத்தும் வெய்யிலிலும் நாள்முழுவதும் எமது பிரச்சாரத்தைச் செய்யக்கூடிய உற்சாகம் எங்கள் மத்தியில் உண்டு.

557897_659207344107499_1332021394_n

கே: வடமாகான சபைக்கான 4 ஆசனங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தெரிவாக இருக்கின்றது இதில் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான மக்கள் ஆதரவு பற்றி கூறமுடியுமா?

இத்தேர்தலில் நான்கு அங்கத்தவர்கள் கிளிநொச்சியிலிருந்து மாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். மக்களுடைய ஆதரவு எங்கள் கட்சிக்கு மேலோங்கியுள்ளது என்பதை மக்களைச் சந்திக்கும்போது அறியக்கூடியதாக உள்ளது. தமிழரசுக் கட்சியிலிருந்து போட்டியிடும் எம் மூவருக்கும் மக்கள் முழுமையாக ஆதரவு வழங்குவார்கள் என்பது உறுதி.

கே: வட மாகாணத்தில் நீண்ட காலமாக தேர்தல்கள் நடைபெறாமல் இருந்தமை யாவரும் அறிந்தது, 2009 ம் ஆண்டுக்குப்பின் பொதுத்தேர்தலும் பின் உள்ளூராட்சித் தேர்தலும் நடைபெற்று இப்போது மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. நடைபெற இருக்கின்ற இந்த தேர்தல் மக்கள் மத்தியில் எவ்வளவு தூரம் வரவேற்பைப் பெற்றுள்ளது?

அண்மைக்காலமாக நடைபெற்ற தேர்தல்களிலே மக்கள் தங்களது வாக்குகளை வழங்குவதில் தயக்கம் காட்டியுள்ளனர். 60 – 65 சதவீதமான வாக்காளர்களே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று தேர்தலில் வாக்களித்துள்ளனர். ஆனால் இம்முறை மக்கள் விழிப்புணர்வு பெற்றவர்களாக மாறியுள்ளார்கள். தேர்தலில் வாக்களிப்பதற்கு ஆர்வமாக உள்ளார்கள். கிராமங்களுக்கு நாம் சென்று பரப்புரை செய்கின்றபோது இத்தேர்தல் பற்றி மக்கள் அறிந்தவர்களாக உள்ளமையை அறியக்கூடியதாக உள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தல்களை விட கூடிய வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்கச் செல்வார்கள் என்ற நம்பிக்கை எம்மிடையே உள்ளது.

கே: மாகாண சபைக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே காணப்படுகின்ற நிலையில், இத் தேர்தலில் த. தே. கூ வெற்றிபெற்றால் தமிழ் மக்களுக்கு எவ்வாறான உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியும்?

சகலரும் அறிந்தபடி மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களே மாகாணசபைக்கு உண்டு என்பதை நாமும் அறிவோம். ஆனால் 2/3 பெரும்பான்மையான அங்கத்தவர்களால் நாம் வடமாகாணசபையை உருவாக்கினால் எமது பெரும்பான்மைக்கூடாக பல புதிய சட்டவாக்கங்களை சபையிலே எம்மால் பிரேரிக்க முடியும். இதனால் சபையைக் கட்டுப்படுத்தும் ஆளுநருக்கு நெருக்கீடுகளையும் அழுத்தங்களையும் கொடுக்கமுடியும். இவ்வாறு செய்வதனால் மாகாண சபைகளிடமிருந்து பறிக்கப்பட்டள்ள அதிகாரங்களை நாம் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வழிமுறையை உருவாக்கிக் கொள்ளமுடியும். இதன் மூலம் உரிமைகளை இழந்த மக்களுக்கு அவற்றை வழங்குவதற்கான சட்டவாக்கங்களை மாகாணசபையிலே நாங்கள் பிரேரித்து இழந்த உரிமைகள் சிலவற்றை மக்களுக்கு வழங்கமுடியும்.

DSC03798-600x450

கே: 13 வது  திருத்தச்சட்டத்தை இல்லாது செய்வதற்கான குரல்கள் பெரும்பான்மை இன அமைப்புக்களிடம் இருந்து எழுந்துள்ள நிலையில், அதனை த. தே. கூ எவ்வாறு எதிகொள்ள இருக்கின்றது?

தமிழ்தேசிய கூட்டமைப்பு 2/3 பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் பட்சத்தில் “13ஆவது திருத்தத்திற்கப்பால்’’ என்ற தொனியில் அரசாங்கத்துடன் நாம் மோதிக்கொள்ளக்கூடிய நிலைப்பாட்டில் இருப்போம். இதுபோக பெரும்பான்மை அதிகாரத்தை நாம் பெற்றுக்கொள்வதன் மூலம் அண்டை நாடான இந்தியாவின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் பெரும்பான்மை இன அமைப்புக்களுக்கு சவாலான பல நடவடிக்கைகளைச் செய்யக்கூடியதாக இருக்கும்.

கே: த. தே. கூ இத்தேர்தலில் வெற்றி பெற்றால் காணி மற்றும் போலீஸ் அதிகாரங்களை பெறுவதில் எவ்வாறான அழுத்தங்களை மதிய அரசுக்கு கொடுக்கக்கூடியதாக இருக்கும்?

இத்தேர்தலில் நாம் வெற்றிபெற்றால் காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பெறுவதற்கு பலத்த அழுத்தங்களை அரசிற்குக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். பெரும்பான்மை எம்மிடமிருப்பதனால் அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்டு காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பெறுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆளுநரை மாற்றும்படி அரசிற்குத் தொடர் அழுத்தங்களை எம்மால் வழங்கக்கூடியதாக இருக்கும்.

DSC03751-600x450

கே: இந்திய அனுசரணையுடன் அறிமுகப்படுத்திய மாகாணசபை முறைமையில் தமிழர் தாயகமென்ற அடிப்படையில் இணைக்கப்பட்ட வட கிழக்கு மாகாணத்தை இன்று பிரிக்கப்பட்ட நிலையில் தேர்தல் எதிர்கொள்ளப்படுகின்றது,  இது தமிழர்களின் குரலை நலிவடையச்  செய்யும் என எதிர்பார்க்கிறீர்களா?

வடக்கு கிழக்குப் பிரிக்கப்பட்ட நிலையில் தேர்தல் எதிர்கொள்ளப்பட்டாலும் இது தமிழர்களின் குரலை நலிவடையச் செய்யும் என நான் எதிர்பார்க்கவில்லை. வடமாகாணசபையும், கிழக்கு மாகாணசபையும் தனித்தனியாக முடிவெடுத்து தாம் இணைந்துகொள்ளும் முயற்சியில் இறங்கலாம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக இங்கு கிளிநொச்சியில் வந்து எம்முடன் இணைந்துள்ளனர். அவர்களுடைய ஏகோபித்த அபிலாசையும் எதிர்காலத்தில் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதுதான். இத்தேர்தலில் நாம் 2/3 பெரும்பான்மை வாக்கைப் பெறுவோமாயின் இந்த இணைப்பை ஏற்படுத்திக் கொள்வது சாத்தியமாக அமையும்.

கே: பல விமர்சனங்கள் எழுந்துள்ள மாகானசபை முறைமையில் குறிப்பாக மத்திய அரச பிரதிநிதியான ஆளுநரிடம் அதிக அதிகாரங்கள் குவிந்துள்ள நிலையில் வட மாகாண சபையை கைப்பற்றுவதன் மூலம் எதனைச் சாதிக்கலாமென கருதுகின்கிறீர்கள்?

ஆளுநரின் கையோங்கியுள்ள நிலையிலும் நாம் அவரிடம் புதிய புதிய சட்டவாக்கங்களை அனுமதிக்காக சமர்ப்பிப்பதன் மூலம் அவரது அங்கீகாரத்தைப் பெறமுனையலாம். இது சாத்தியப்படாத சமயத்தில் அவரை பதவியிறக்கம் செய்ய எமது 2/3 பலத்தைப் பிரயோகிக்கலாம். உதாரணமாக இந்திய மாநிலங்களும் இவ்வாறான அதிகாரங்களைக் கொண்ட ஆளுநர்களையே கொண்டுள்ளனர். அங்கெல்லாம் மாநிலக் கட்சிகள் ஆட்சிபீடமேறி தமது மாநிலங்களை வெகுசிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். இதேபோல் இலங்கையின் மற்றைய மாகாண சபைகளிலும் ஆளுநர்களின் கெடுபிடி ஏதும் அற்ற நிலையில் மாகாண சபைகள் மக்களுக்குச் சேவைகளை வழங்கி வருகின்றார்கள். ஆனால் வடக்கிலும், கிழக்கிலும் மட்டுமே இவ்வாறான ஆளுநருடைய ஓங்கிய கை மாகாணசபையினுடைய செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியாத நிலைக்குச் சென்றுள்ளது. எனவே முறையான அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் இந்த விடயத்தில் நாம் வெற்றி காண்போம் என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு.

கே: தமிழ் மக்களின் அதிக ஆதரவினைப்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் என்ற முறையில் நீங்கள் வெற்றிபெற்றால் எவ்வாறான விடையங்களில் கவனம் செலுத்தத் உள்ளீர்கள்?

நீண்டகாலமாக மக்கள் காணாமல் போன தமது உறவுகளைத் தேடி அலைகின்றார்கள். நான் வெற்றிபெறும் சமயத்தில் இது விடயத்தில்தான் எனது கவனம் கூடுதலாக இருக்கும். அதுபோக காணாமல்போனோர், இறந்துபோனோரின் கணக்கெடுப்பொன்றைப் மேற்கொள்வதற்கான விடயத்தில் கவனம் செலுத்தவுள்ளேன். இதுபோல் இராணுவத்தினரால் அழிக்கப்பட்ட துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டவர்களுடைய பெயர்கள், விபரங்களை ஆவணப்படுத்துவதிலும் எனது முதன்மையான கவனம் இருக்கும்.

734647_557160524312182_1849251534_n

கே: நீங்கள் நீண்டகாலமாக கிளிநொச்சியில் பல்வேறுபட்ட சமூகப்பணிகளில் ஈடுபட்டுள்ளீர்கள், உங்கள் தந்தையார் தம்பிராஜா போதகர் மிகப்பெரிய சமுக சேவையாளர். நவஜீவனம் மற்றும் கனான் போன்ற அமைப்புகள் மூலம் உங்கள் குடும்பம் பல நலத்திட்டங்களை செய்துள்ளது. மேலும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கல்விப்பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வுபெற்றுள்ளீர்கள். தற்போது தாயகத்தில் இயங்கிவரும் பல தொண்டு நிறுவனங்களுடன் உங்களை இணைத்துள்ளீர்கள். தற்போது நீங்கள் ஆற்றிவரும் சமூக நல செயல்பாடுகள் பற்றி  குறிப்பிட முடியுமா?

தற்போது நான் குறைந்த அளவிலேயே எனது சமூகசேவையைச் செய்துவருகின்றேன். மனிதாபிமான புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக தேசிய சங்கம் என்ற அமைப்பின் தலைவராக இருந்து மக்களுக்கான சில சேவைகளைச் செய்து வருகின்றேன். தற்போது அரசியலிலே இறங்கியுள்ளமையால் எனது சமூகப் பணிகளில் மாற்றத்தைச் செய்யவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

கே: உங்களுடைய நேரத்தினை வணக்கம் லண்டன் இணையத்துக்காக தந்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் அதேநேரம் இந்த சந்தர்பத்தில் தாயகத் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் மேலதிகமாக ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா?

தேர்தல்காலமாகிய இக்காலத்தில் புலம்பெயர் தமிழர்கள் எமக்கு ஆதரவு வழங்கி தங்கள் உறவுகளுக்கு இத்தேர்தல் பற்றிய முக்கியத்துவத்தையும் இத்தேர்தலிலே அவர்கள் வாக்களிப்பு செய்ய வேண்டும் என்பதையும் அவர்களுக்கு எடுத்துக் கூறலாம். இதுபோக எமது பிரச்சாரப்பணிகளுக்காக அவர்களுடைய ஆதரவையும் வழங்குமாறு இந்த சந்தர்ப்பத்திலே வணக்கம் லண்டனூடாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி

வந்தியத்தேவன் | வணக்கம்LONDON க்காக

ஆசிரியர்