வடக்குக்கு சிவில் ஆளுநரையும் புதிய பிரதம செயலரையும் மாற்றுவது அவசியம் | த இந்து பத்திரிகை ராம்வடக்குக்கு சிவில் ஆளுநரையும் புதிய பிரதம செயலரையும் மாற்றுவது அவசியம் | த இந்து பத்திரிகை ராம்

அதிகாரப் பரவலாக்கலை முன்னெடுத்து சிறந்த எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதற்கு இலங்கைக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வட மாகாண சபைக்கு சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்பதுடன் வட மாகாண பிரதம செயலாளரையும் மாற்றவேண்டும் என்று இந்தியாவிலிருந்து வெளியாகும் த இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என். ராம் தெரிவித்தார்.

இந்தியாவில் எந்த அரசாங்கம் வந்தாலும் இலங்கை தொடர்பான வெளிவிவகார கொள்கையில் மாற்றங்கள் வரப்போவதில்லை. நட்பு நாடு என்ற வகையில் அதிகாரப் பரவலாக்கலுக்காக அழுத்தங்களை முன்னெடுக்குமே தவிர வேறு எதனையும் முன்னெடுக்காது. இவற்றைத் தாண்டி இந்தியா எதனையும் செய்யும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கவும் முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் சீனாவின் பிரசன்னம் தொடர்பில் யாரும் கவலைகொள்ள வேண்டியதில்லை. உலகில் மிகப்பெரிய வர்த்தக சந்தையாக சீனா உருவெடுத்துவிட்டது. எனவே இலங்கையில் அதிகளவில் சீனா முதலீடு செய்வதும் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுவதும் சிறப்பான விடயமாகும். அதனை நான் வரவேற்கவேண்டும் என்றும் இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வலியுறுத்தினார்.

வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளமையும் அங்கு முன்னாள் நீதியரசர் ஒருவர் முதலமைச்சராக பதவியேற்றுள்ளமையும் சிறந்த விடயமாகும். தமிழக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் த இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என். ராம் கொழும்பில் இனத்துவ கற்ககைளுக்கான சர்வதேச நிலையம் நேற்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆசிரியர்