வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இன்று இலண்டனில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இச்சந்திப்பின் போது ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 25வது கூட்டத் தொடரில் எதிர்வரும் வாரங்களில் இலங்கைக் கெதிராகக் கொண்டுவரப் படவுள்ள பிரேரணையை முறியடிக்கும் வகையிலான ஆதரவினை திரட்ட பொதுநலவாயம் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அமைச்சர் பீரிஸ், சர்மாவிடம் கோரிக்கை விடுப்பாரெனவும் அமைச்சு வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.
இறுதியாக நடைபெற்ற பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக கமலேஷ் சர்மா அடிக்கடி இலங்கை வந்து சென்றுள்ள நிலையில், மோதல்களையடுத்து குறுகிய காலத்திற்குள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நல்லிணக்கம் ஆகியன தொடர்பில் அமைச்சர் இச்சந்தர்ப்பத்திலல் விரிவாக கலந்துரையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சந்திப்புக்கு மேலதிகமாக இலண்டனில் வதியும் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடுகளின் தூதுவர்களிடம் இலங்கைக் கெதிரான பிரேரணையை தோற்கடிக்க உதவுமாறு வேண்டுகோள் விடுக்கவும் அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் 14ஆம் திகதி இலண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்கள் செயற்பாட்டுக் குழுக் கூட்டத்தில் (CEMAG) கலந்துகொள்ளும் முகமாக அமைச்சர் பீரிஸ் ஜெனீ வாவிலிருந்து லண்டன் சென்றடைந் துள்ளார்.
2014 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய தினத்தினை முன்னிட்டு நிகழ்வுகள் நேற்று இலண்டன் வெஸ்ட்மினிஸ்டரில் எலிசபெத் மகாராணி தலைமையில் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.
