13 ஆயிரம் பேர் எங்கே? கிளிநொச்சி மாவட்ட மீள்குடியமர்வு தொடர்பில் மாவை.சேனாதிராசா எம்.பி. கேள்வி 13 ஆயிரம் பேர் எங்கே? கிளிநொச்சி மாவட்ட மீள்குடியமர்வு தொடர்பில் மாவை.சேனாதிராசா எம்.பி. கேள்வி

கிளிநொச்சி மாவட்டத்தில் போர் ஆரம்பமாவதற்கு முன்னர் காணப்பட்ட சனத்தொகையை விடவும் தற்போது மீள்குடிய மர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. சுமார் 13 ஆயிரம் பேருக்கு என்னாயிற்று என்றே தெரியவில்லை. அவர்கள் எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா. இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர் என்று இலங்கை அரசு கூறிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் இன்னமும் மக்கள் மீள்குடியமர்த்தப்படாது உள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபத்தில் நடைபெற்றது. அதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் க.விக்கினேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இணைத்தலைமை வகித்தனர்.

கூட்டத்தின்போது கிளிநொச்சி மாவட்ட மீள்குடியமர்வு தொடர்பாக விளக்கமளிக்கமளிக்கப்பட்ட போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மீள்குடியமர்வு குறித்து விளக்கமளித்த கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், “”இதுவரை 41 ஆயிரத்து 227 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 513 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 66 குடும்பங்களும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 21 குடும்பங்களுமாக 90 குடும்பங்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப்படவுள்ளன. இவர்கள் தற்போது மீள்குடியமர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

அதன் பின்னர் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா, “”போர் ஆரம்பமாவதற்கு முன்னர் யாழ்.மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து சுமார் ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேர் வன்னியில் தங்கியிருந்தனர். அதில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர் வரையானோரே யாழ்.மாவட்டத்துக்குத் திரும்பியுள்ளனர். எஞ்சிய மக்களுக்கு என்ன நடந்தது? கிளிநொச்சி மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி சுமார் 50 ஆயிரத்து 90 குடும்பங்கள் இருந்தன. தற்போது 41 ஆயிரத்து 227 குடும்பங்கள் மாத்திரமே மீளக்குடியமர்ந்துள்ளன. ஏனைய குடும்பங்களின் விவரங்கள் ஏதாவது பதிவுகளில் உள்ளனவா? என்று கேள்வி எழுப்பினார்.

ஆசிரியர்