மோடிக்கு த.தே.கூ. வாழ்த்து | நெருக்கமாக பணியாற்ற நாம் காத்திருக்கின்றோம் மோடிக்கு த.தே.கூ. வாழ்த்து | நெருக்கமாக பணியாற்ற நாம் காத்திருக்கின்றோம்

இலங்கை மக்கள் அனைவரும் சமத்துவத்தினதும் நீதியினதும் அடிப்படையில் தத்தமது பாரம்பரிய நிலங்களில் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கும் இங்கு மீண்டும் வன்முறை தலைதூக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் உங்களது அரசாங்கத்தோடு நெருக்கமாகப் பணியாற்ற நாங்கள் இதயச் சுத்தமாகக் காத்திருக்கின்றோம் என இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எமது தமிழ் தேசிய கூட்டமைப்பானது இலங்கைத் தமிழ் மக்களை குறிப்பாக வடக்கு, கிழக்கை பாரம்பரிய வாழ்விடமாகக் கொண்ட தமிழ் மக்களைக் கணிசமாகப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக அரசாட்சிக் கட்டமைப்பின் வேறுபட்ட மன்றங்களுக்கு ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் அமைப்பாகும். 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் பெற்ற பிரமாண்டமான வெற்றிக்காகவும் பாரத தேசத்தின் பிரதமர் என்ற உயர் பொறுப்புக்காக நீங்கள் பெறுகின்ற நியமனத்திற்காகவும் இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். 

நீங்களும் உங்களது அரசாங்கமும் எடுத்திருக்கின்ற கடினமான பொறுப்புக்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் எங்களது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

னைத்து இலங்கை மக்களும் சமத்துவத்தினதும் நீதியினதும் அடிப்படையில் தத்தமது பாரம்பரிய நிலங்களில் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கையில் மீண்டும் வன்முறை தலைதூக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நேர்மையான உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் உங்களது அரசாங்கத்தோடு நெருக்கமாகப் பணியாற்ற நாங்கள் இதயச் சுத்தமாகக் காத்திருக்கின்றோம். 

1983 ஆம் ஆண்டின் தமிழர் எதிர்ப்பு படுகொலைகளின் தொடர்ச்சியாக இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு நிரந்தரத் தீர்வை கொண்டுவருவதற்காக இந்தியா எடுத்த முயற்சிகளை இலங்கை ஏற்றுக் கொண்டிருந்தது. காலத்துக்கு காலம் இடையூறுகள் ஏற்பட்டபோதும் இந்த முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்தியா ஒரு தனித்துவமான பாத்திரத்தை இந்த முயற்சிகளில் வகித்து வந்திருக்கின்றது. 

2009 மே மாதத்தில் ஆயுதப் போர் தோற்கடிக்கப்பட்டு வன்முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் தொடர்ச்சியாக சமத்துவத்தினதும் நீதியினதும் அடிப்படையிலான நிரந்தரத் தீர்வு ஒன்றை தேசிய இனப்பிரச்சினைக்கு காண்பதற்கான வாய்ப்புக்கள் உருவாகின.

ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியற் தீர்வை தான் கொண்டுவருவேன் என்ற வாக்குறுதியை போர் நிகழ்ந்த காலத்திலும் போரின் முடிவிற்குப் பின்னாலும் இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தது. ஆனாலும் தனது அந்த வாக்குறுதிகளை மதித்து இலங்கை அரசாங்கம் நடக்கவில்லை. 

மாறாக கடும்போக்கான ஓர் நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கை அரசாங்கம் முனைப்பாக முன்னெடுத்து வருகின்றது என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்