ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவுக்கு புதிய தடை விதித்துள்ளது ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவுக்கு புதிய தடை விதித்துள்ளது

உக்ரைனில் அரசுக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்தானது. போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்தான நிலையிலும் ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கடந்த ஏப்ரல் முதல் அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆயுத உதவி அளிப்பதாக அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் குற்றம்சாட்டி வந்தன. மேலும் ரஷ்யாவுக்கு எதிராக இந்நாடுகள் பொருளாதார தடைகளும் விதித்தன. ரஷ்யா தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தது.

எனினும் ரஷ்யாவின் ஆதிக்கத்தை ஒடுக்க ஆயிரக்கணக்கான வீரர்கள் கொண்ட புதிய படையை உருவாக்க நேட்டோ நாடுகள் முடிவு செய்தன. இந்நிலையில் அண்டை நாடான பெலாரஸ் மேற்கொண்ட முயற்சியின் பலனாக பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் உக்ரைன் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களின் பிரதிநிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில் 12 அம்ச போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்தானது. இதன்மூலம் கிழக்கு உக்ரைனில் கடந்த 5 மாதங்களாக நடைபெற்ற சண்டைமுடிவுக்கு வந்துள்ளது. உக்ரைனில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள போதிலும் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை நீட்டிப்பதுடன் புதிய தடைகளும் விதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் ஐரோப்பிய முதலீடுகளைப் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிகாரிகள் சிலரின் ஐரோப்பிய பயணங்களுக்கு தடையும் அவர்களது சொத்துகளும் கடந்த ஜூலை மாதம் முடக்கப்பட்ட நிலையில், இந்தப் பட்டியலில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தடைகள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வரும் என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய யூனியனின் புதிய தடைகளுக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய யூனியன் நடவடிக்கைக்கு எங்கள் தரப்பில் இருந்து உரிய பதிலடிதரப்படும்” என்றுதெரிவித்துள்ளது.

ஆசிரியர்