ஸ்வீடன் பல்கலைக்கழகம் ஆய்வு -பூமியில் 11.7 கோடி ஏரிகள்ஸ்வீடன் பல்கலைக்கழகம் ஆய்வு -பூமியில் 11.7 கோடி ஏரிகள்

பூமியில் உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 11.7 கோடி என ஸ்வீடனைச் சேர்ந்த பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.

ஸ்வீடனின் உமேயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழலியல் விஞ்ஞானி டேவிட் ஸீகெல், உலகிலுள்ள ஏரிகளின் எண்ணிக்கை குறித்து வேறு சில ஆராய்ச்சியாளர்களுடன் நடத்திய ஆய்வு முடிவுகள் ஜியோஃபிஸிகல் ரிஸர்ச் லெட்டர்ஸ் எனும் புவியியல் ஆய்வேட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ள விவரம்:

உலகிலுள்ள ஏரிகளில் பெரும்பாலானவை, பூமியின் வட பகுதியில் உள்ளன. தென் பகுதியில் நிலப்பகுதி குறைவென்பதால் ஏரிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது.

பூமியில் உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 11.7 கோடி எனத் தெரிய வந்துள்ளது. அனைத்து ஏரிகளின் மொத்த பரப்பளவு 50 லட்சம் சதுர கிலோ மீட்டராகும். இவை பூமியில் 3.7 சதவீத இடத்தைப் பிடித்துள்ளன. ஒன்பது கோடி ஏரிகள் அரை ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கர் வரை பரப்புள்ளவை.

செயற்கைக்கோள் மூலமாகப் பெறப்பட்ட படங்களை சூப்பர் கம்ப்யூட்டர்கள் கொண்டு ஆய்வு செய்து இந்த விவரங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த ஆய்வில், அன்டார்டிகா, கிரீன்லேண்ட் ஆகிய பகுதிகள் உள்படுத்தப்படவில்லை. உலகின் மிகப் பெரிய ஏரி எனக் கருதக் கூடிய காஸ்பியன் கடல் இந்த ஆய்வில் குறிப்பிடப்படவில்லை. காஸ்பியன் கடலின் பரப்பு 3,71,000 சதுர கிலோ மீட்டராகும்.

ஆசிரியர்