கோத்தபாய அரசால் ஏமாற்றப்பட்டனர் பட்டதாரிகள்: நியமனங்கள் இரத்து!

அனைத்து பட்டதாரிகளுக்கான நியமனங்களையும், பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதையும் நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தல்களின்போது இந்த வகை ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஒரு அரசியல் ஊக்குவிப்பாக இருக்கக்கூடும் என்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் முடிவுறும் வரை அனைத்து அரச நியமனங்கள் மற்றும் ஆள்சேர்ப்பு நிறுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த 45 ஆயிரத்து 585 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

பெறப்பட்ட மொத்தம் 70 ஆயிரம் விண்ணப்பங்களில் 56,000 விண்ணப்பங்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதிலும் 45,585 பேர் மட்டுமே நியமிக்க தகுதியுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

தம்மை கோத்தபாய அரசு ஏமாற்றியுள்ளதாக பட்டதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். நாடாளுமன்றத்தை கலைப்பாக இருந்தால், முன்னரே நியமனங்களை வழங்கியிருக்க வேண்டும் என்றும் தேர்தலை இலக்கு வைத்து பட்டதாரிகள்மீது கோத்தபாய அரசு மோசடிகளை மேற்கொண்டுள்ளதாகவும் வேலையற்ற பட்டதாரிகள் தமது ஆதங்கத்தை தெரிவித்தனர்.

ஆசிரியர்