ஈரானுக்கு பயணத்தடை விதித்த ஆஸ்திரேலியா.

கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தப்படியாக ஈரான் இடம்பெற்றிருக்கும் நிலையில், ஈரானிலிருந்து செல்பவர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சீனாவுக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஈரானுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. ஆஸ்திரேலியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஈரானுக்கு சென்ற வெளிநாட்டினர் யாரேனும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டுமெனில் அவர்கள் 14 நாட்களுக்கு பின்னர் வைரஸ் தாக்கமில்லை என உறுதிச செய்யப்பட்ட பின்னரே ஆஸ்திரேலியாவுக்குள நுழைய முடியும். அதே சமயம், ஈரானுக்கு சென்ற ஆஸ்திரேலிய குடியுரிமைப் பெற்றவர்கள், மற்றும் நிரந்தரமாக வசிக்கும் உரிமைப்பெற்றவர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 34 பேர் ஈரானில் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ள ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை அமைச்சர் க்ரீக் ஹண்ட்,“(ஈரானில்) கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அதே சமயம், வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படாத நிலையில் பெரும் எண்ணிக்கையில் இருக்கக்கூடும்,” எனும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாகவே, ஆஸ்திரேலியர்கள் அல்லாதவர்களுக்கு ஈரானிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹண்ட் தெரிவித்திருக்கிறார்.

தற்போதைய நிலையில், 25 ஆஸ்திரேலியர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் வைரசால் தாக்கத்திலிருந்து முழுமையாக மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்