வேற்று கலாச்சார பெண்களுக்கு வேலையில் நிலையற்ற சூழல்?

ஆஸ்திரேலியாவில் கலாச்சார ரீதியாக, மொழி ரீதியாக வேறுபட்ட பெண்கள் குறைவான ஊதியத்திற்கு பணியாற்றும் நிலை இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் சிலரின் வழிகாட்டுதலின் படி சில பெண்கள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர்.

ஆப்பிரிக்க- ஆஸ்திரேலிய பெண்ணான ஹவானட்டு பங்குரா திரைப்படக்கலை சார்ந்த துறையில், தன்னை நிலைநிறுத்திக் கொண்டது இதற்கு ஒரு சான்றாக அமைந்திருக்கிறது. இவர் சியாரா லியோனிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் அகதியாக தஞ்சமடைந்தவர்.

“என்னைப் போன்ற பெண்களின் கதைகளை, சவால்களை சந்திக்கும் பெண்களின் கதைகளை நான் சொல்ல விரும்புகிறேன்,” எனக் கூறும் ஹவானட்டு தனக்கு பிடித்தமான திரைப்படத்துறையில் தவிர்த்து வேறொரு துறையில் சேர்ந்திருக்கிறார். திரைப்படத்துறையில் உள்ள பொருளாதார ரீதியான நிலையற்றத்தன்மை காரணமாக இம்முடிவு அவர் எடுத்திருக்கிறார்.

2018ல் பொருளாதார ரீதியாக சுதந்திர பெண்ணாக மாற நினைத்த ஹவானட்டு பல சவால்களை சந்திக்க வேண்டி இருந்திருக்கிறது. “பிறர் கொடுக்கும் வேலையை நம்பி, என்னால் வசதியாக இருக்க முடியவில்லை. எனக்கான வேலையை நானே உருவாக்க எண்ணினேன்,” என்கிறார்.

இறுதியாக, கதைச்சொல்லலுக்கான ஒரு நிறுவனத்தை தொடங்கிய ஹவானட்டு அகதிகளுக்கான Settlement Services International(SSI) அமைப்பின் உதவியுடன் தனது புதிய தொழிலில் நல்லதொரு வளர்ச்சியை பெற்றிருக்கிறார்.

பொருளாதார பங்கேற்பு மற்றும் நிதி பாதுகாப்பு பொறுத்தமட்டில், ஹவானட்டு போன்ற கலாச்சார ரீதியாக, மொழி ரீதியாக வேறுபட்ட பெண்கள் பல சவால்களை சந்திக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் புள்ளிவிவர பணியகத்தின் கணக்குப்படி, தொழில் பங்களிப்பில் இப்பெண்கள் வெறும் 47.3 சதவீதமே இருக்கின்றனர். அதுவே, ஆஸ்திரேலிய பெண்களின் பங்களிப்பு 59.2 சதவீதமாக உள்ளது.

கலாச்சார ரீதியாக, மொழி ரீதியாக வேறுபட்ட பெண்களை தொழில் சக்திகளாக தயார் செய்வதற்கான ஆங்கில வகுப்புகள், அவர்களின் தகுதிகள் அங்கீகரிக்கப்படுதல், குழந்தைகளை பராமரித்தல் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை எனக் கூறுகிறார் Settlement Services International(SSI) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி வயலட் ரூமெலியோடிஸ்.

“பலர் தகுதி அதிகம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். அறிவியல் மற்றும் பொறியியல் உள்ளிட்ட ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் முறையான வேலையின்றி இருக்கிறார்கள். இல்லையெனில் மகப்பேறு விடுமுறையில் சென்று திரும்பும் பொழுது தகுதிக்கு குறைவான வேலையில் சென்று சேர்கின்றனர்,” என்கிறார் வயலட்.

இவ்வாறான பெண்கள் பதவி உயர்வு அடைவதிலும் வேலைக்கான நேர்முகத் தேர்விற்கு செல்வதிலும் கூட சிக்கலை சந்திப்பதாகக் கூறப்படுகின்றது. அப்படி ஒரு பெண்ணான ஜிஹிலா ஹசன்லூவுக்கு ஈரானிலிருந்து இடம்பெயர்ந்த பெண் என்பது மட்டும் சிக்கலாக இல்லை, பார்வை குறைப்பாடும் கூடுதல் சவாலாக இருந்திருக்கின்றது.

ஈரானில் கல்வி கற்ற அவர், முனைவர் பட்டத்திற்கான கல்விக்காக ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். “கலாச்சார ரீதியாக வேறுபட்ட பெண் என்றால், அதிலும் உடல் இயலாமை கொண்ட பெண் என்றால் அப்பெண் வாழ்க்கையில் வேலையில் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது,” எனக் கூறுகிறார் ஜிஹிலா.

இவர் SSI திட்ட உதவியுடன் உடல் இயலாமையுடைய இடம்பெயர்ந்த மக்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். ஆனால், இவ்வாறு ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்த பெண்கள் அனைவருக்கும் இதுபோன்ற வாய்ப்புகள் அமைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்