Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் டாக்டர் லீ; கொரோனாவை கண்டு பிடித்து அந் நோயாலே உயிர் நீத்த ஹீரோ!

டாக்டர் லீ; கொரோனாவை கண்டு பிடித்து அந் நோயாலே உயிர் நீத்த ஹீரோ!

5 minutes read

சீனா. வூஹான் பகுதி. காவல்துறையில் இருந்து டாக்டர் லீ வென்லியாங்கிற்கு அழைப்பு. விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முடிவில் ஒரு கடிதத்தில் கையெழுத்திட சொன்னார்கள்.

“சமூக அமைதியை சீர் குலைக்கிற வகையில் சமூக வலைதளத்தில் தவறான தகவல் – வதந்தி – பரப்பியதாக” ஒப்புக் கொள்ளும் கடிதம். டாக்டர் லீயும், காவல் அதிகாரிகளும் கையெழுத்திட்ட “கடும் எச்சரிக்கை” கடிதம் வழங்கப்பட்டது.

ஆனால் டாக்டர் லீயின் அதே குற்றத்தை சீனாவின் உச்சநீதிமன்றம் பின்னாளில் பாராட்டியது. “அந்த வதந்தியால் தான் மக்கள் முகக்கவசம் அணிந்தார்கள், தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள்”.

அந்த வதந்தி தான் உலகத்தின் கண்களை திறந்தது.

” புதிய வைரஸ் தொற்று ஒன்று பரவுவதாக தெரிகிறது. தொற்று தாக்காமல் பாதுகாப்பாக இருங்கள்”. இது தான் அந்த வதந்தி. தனது நண்பர்களுக்கு சமூக வலைதளம் மூலம் அனுப்பினார். சிறிது நேரத்தில் அது ‘கொரோனா’ வைரஸ் என்ற குறிப்பை அனுப்பினார். அது ஸ்கிரீன் ஷாட் ஆக மக்களிடம் பரவ, காவல்துறை பாய்ந்தது.

டாக்டர் லீ வென்லியாங் ஒரு கண் மருத்துவர். 33 வயது தான். பள்ளியில் சிறந்த மாணவர். நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, வூஹான் பல்கலைக்கழக மருத்துவக் கல்வியில் சேர்ந்தார். இளநிலை மற்றும் முதுநிலை இணைந்த ஏழு வருடப் படிப்பு. சிறப்பாக முடித்து பணியில் சேர்ந்தார்.

அமைதியான, பணியில் கவனமான மருத்துவர் என்ற நல்ல பேரோடு பணியாற்றிக் கொண்டிருந்தார் வூஹான் மருத்துவமனையில்.

டிசம்பர் மாதம் 30ம் தேதி. அவர் பார்வைக்கு ஒரு மருத்துவ அறிக்கை வந்தது. ஒரு நோயாளியை ஆய்ந்து அளிக்கப்பட்ட அறிக்கை. அதில் மருத்துவமனை இயக்குநர் “சார்ஸ் வைரஸ்” போல் உள்ளது என்று குறிப்பெழுதி இருந்தார். ரகசியமாக வைக்கப்பட்டது. டாக்டர் லீக்கு மனம் தாளவில்லை. இது ஓர் அபாயகரமான வைரஸ் என்று மனதில் பட்டது. அதனால் தன் நண்பர்களை எச்சரித்தார்.

அதற்கு தான் ஜனவரி 3 அன்று, காவல் துறை விசாரணை, கண்டனம் எல்லாம். பிறகு மருத்துவமனை பணிக்கு திரும்பினார். ஜனவரி 8ஆம் தேதி தான் அந்த கோரம் நிகழ்ந்தது.

டாக்டர் லீ ஒரு நோயாளியை சந்திந்தார். அந்த நோயாளி இடமிருந்து இவருக்கு கொரோனா தொற்றியது. முதலில் இருமல் இருந்தது. இரண்டு நாட்கள் காய்ச்சல்.

12 ஆம் தேதி அய்.சி.யூவிற்கு அனுப்பப்பட்டார். தனிமைப்படுத்தப்பட்டார். தொடர் பரிசோதனையும், சிகிச்சையும் மேற் கொள்ளப்பட்டது. ஜனவரி 30 வந்தது. பரிசோதனை அறிக்கை கொரோனா பாசிட்டிவ் என வந்தது.

ஜனவரி 31. தனக்கு காவல்துறை வழங்கிய அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார். தனக்கு நேர்ந்தார் போல் இன்னொருவருக்கு நிகழக்கூடாது என முடிவெடுத்தார். நோயின் கொடூரம் தெரிந்து அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும் என உணர்வு கொண்டார்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தொடர்பு கொண்டது. “அதிகாரிகள் கொரோனா குறித்த தகவலை வெளிப்படுத்தியிருந்தால், இவ்வளவு மோசமான நிலை ஏற்பட்டிருக்காது. வெளிப்படைத் தன்மையும், திரைமறைவற்ற தன்மையும் அவசியம்” என்று பேட்டிக் கொடுத்தார். வெளிநாட்டு பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுப்பது, சினாவில் மிக சிரமம். மக்கள் நலனுக்காக துணிந்தார்.

பிப்ரவரி 4 அன்று, உச்சநீதிமன்றம் டாக்டர் லீ மற்றும் எட்டு பேர் காவல்துறையால் தண்டிக்கப்பட்டது தவறு என்றது. கெய்க்சின் ஊடகத்திற்கு, “ஒரு நல்ல சமூகம் ஒரே மாதிரியான குரலை மாத்திரம் கொண்டிருக்கக் கூடாது. அதிகாரத்தை அதீத தலையீட்டிற்கு பயன்படுத்துவதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை”, என கருத்து சுதந்திரத்திற்கான குரலாக ஒலித்தார்.

முடிவை எதிர்பார்த்தாரோ என்னவோ, கருத்து சுதந்திர தீபத்தை பற்ற வைத்தார்.

பிப்ரவரி 5 ஆம் தேதி, டாக்டர் லீயின் உடல் நிலை மோசமடைந்தது. மூச்சுத் திணறல் கடுமையானது. மூச்சுவிட சிரமப்படுவதாக அடுத்த நாள் 6 ஆம் தேதி நண்பருக்கு அலைபேசியில் சொல்லி இருக்கிறார்.

பிப்ரவரி 6, இரவு 9.30க்கு லீ இறந்து விட்டதாக தகவல் சீன அரசு நாளிதழின் சமூக வலைதளத்தில் செய்து வெளி வந்தது. ஆனால் பிறகு அது நீக்கப்பட்டது. எக்மோ சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை அறிவித்தது.

பிப்ரவரி 7, அதிகாலை 02.58க்கு டாக்டர் லீ இறந்ததாக மருத்துவமனை அறிவித்தது.

அந்த நேரத்தில் 1 கோடியே எண்பது லட்சம் பேர் அந்த அறிவிப்புகளின் நேரலை நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது தான் டாக்டர் லீ வென்லியாங்கின் தியாகத்திற்கான அத்தாட்சி ஆனது.

சீனாவில் முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கிடையாது. சீனாவிற்கென்ற தனி வலைதளம் தான். அது அதிர்ந்து போனது. லீ இறப்பு குறித்த பதிவுகள் நிரம்பின. ” பேச்சு சுதந்திரம் வேண்டும்” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. பிறகு அரசின் சென்சாரால் அவை நீக்கப்பட்டன.

உலக சுகாதார நிறுவனம் WHO, லீ இறப்புக்கு ட்விட்டரில் துக்கம் வெளிப்படுத்தியதுடன், அவரது கொரோனாவிற்கு எதிரான பணியை பாராட்டியது.

மக்களின் துக்கம், கோபம், அரசு மீதான நம்பிக்கையின்மை வெளிப்பட்ட பிறகு கம்யூனிச அரசு இறங்கி வந்தது. அரசு ஊடகம் பீப்புள்ஸ் டெய்லி “ஆழ்ந்த துக்க” செய்தியை வெளியிட்டது.

தவறுக்கு எதிராக நியாயக் குரல் கொடுப்பவர்களை ஆங்கிலத்தில், விசில் புளோயர்ஸ் (Whistle blowers) என்பார்கள். டாக்டர் லீ படத்திற்கு பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தியதோடு அங்கே நின்று விசிலை ஊதி அஞ்சலி செலுத்தினார்கள்.

அதே போல் சமூக வலைதளங்களில் “வூஹானுக்காக இன்றிரவு விசில் ஊதப் போகிறேன்”, என்ற தலைப்பில் பதிவிட்டார்கள். அன்றிரவு வூஹானில் தங்கள் வீட்டு விளக்குகளை அய்ந்து நிமிடம் அணைத்து வைத்தார்கள். விசிலை ஊதி, ஜன்னல் வழியாக ஒளியடித்து டாக்டர் லீக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

” டாக்டர் லீயின் இறப்பு அவர் சமூக ஒழுங்கை கெடுத்ததாக வெளிப்படவில்லை. அவர் தைரியமாக போராடினார் என்பதையே வெளிப்படுத்துகிறது” என தி கார்டியன் இதழ் குறிப்பிட்டது.

டாக்டர் லீ இறக்கும் போது அவர் மனைவி கர்ப்பமாக இருந்தார் என்பது மிகுந்த வேதனையளிக்கும் செய்தி. சிறு வயது மகன் தந்தையை இழந்திருக்கிறான். லீயின் அப்பாவும், அம்மாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கிறார்கள். குடும்பம் தலைவனை இழந்து தவிக்கிறது. வூஹான் நல்ல மருத்துவனை இழந்திருக்கிறது. சீனா கருத்து சுதந்திர குரலை இழந்திருக்கிறது.

டாக்டர் லீ குரல் கொடுத்த அன்றே சீன அரசு சுதாரித்திருந்தால், லீ உயிர் பறி போயிருக்காது.

லீயின் உயிர் மட்டுமல்ல, சீனா இழந்த பல உயிர்களும் காப்பாற்றப்பட்டிருக்கும்.

லீ குரல் கொடுத்து கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு மாத்திரம் வலு சேர்க்கவில்லை, சீனாவின் கருத்து சுதந்திரத்திற்கும் சேர்த்து தான்.

லீ’க்களின் குரல்கள் வலு பெறட்டும், சர்வாதிகாரத்திற்கு எதிராக!

சிவகுமார், மாநில அமைப்பாளர், தமிழ்நாடு மாணவர் கழகம் (TSF).

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More