Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மாணவர்கள் தொடர்பில் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ள மஹிந்த

மாணவர்கள் தொடர்பில் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ள மஹிந்த

3 minutes read

பிள்ளைகளுக்கு சுதந்திரமாக, மன மகிழ்வுடன் கல்வி கற்கக் கூடிய கல்வி சீர்திருத்தமொன்று நாட்டிற்கு உடனடியாக தேவைப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

‘அபே கம’ வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் உரையாற்றுகையில், “அரசியலமைப்பு சீர்திருத்தத்தைவிட கல்விச் சீர்த்திருத்தம் இந்நாட்டின் எதிர்காலத்தில் தாக்கம் செலுத்துகின்றது.

நாம் கல்விக்கு தேசிய வருவாயிலிருந்து எவ்வளவு தொகையை ஒதுக்கினாலும் பிள்ளைகளுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையேல் அதனால் பயனற்றுப் போகும்.

அத்துடன், அனைத்து விடயங்களையும் மீண்டும் கட்டியெழுப்பும் யுகமொன்று மீண்டும் உருவாகியுள்ளது. வீட்டின் பின்புறத்தில் விளையும் மஞ்சள் செடி முதல்,

மாணவர்கள் பாடசாலைக்கு அணியும் சீருடை வரை நாமே உற்பத்தி செய்துகொள்ளும் யுகமொன்று தோற்றம் பெற்றுள்ளது.

இதேவேளை, சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிள்ளைகளுக்காக இவ்வாறானதொரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பாக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

விசேடமாக குழந்தைகளுக்காக நாற்புறமும் சுவர் எழுப்பப்பட்ட மண்டபத்தில் உபதேசம் நிகழ்த்துவதைவிட அபே கம-வில் இந்த நிகழ்வு நடத்தப்படுகின்றமை குறித்தும் மகிழ்ச்சியடைகிறேன்.

அதேபோன்று இத்தினத்தை குழந்தைகளின் கலைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் நடத்துவதற்கான அமைச்சரின் இந்த முயற்சி இக்காலத்திற்கு மிகவும் உகந்ததாகும் என நான் எண்ணுகின்றேன்.

இந்த குழாமில் அனைத்து இனங்களையும், அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குழந்கைள் காணப்படுகின்றமை எனக்கு தெரிகின்றது. இதுவே நான் நாட்டில் அதிகளவில் காண விரும்பும் காட்சியாகும்.

அதேபோன்று அனைத்து இன மற்றும் மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழந்தைகளை இங்கு ஒன்றிணைத்தமை தொடர்பில் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இதேவேளை, 2005ஆம் ஆண்டு, அதாவது 15 ஆண்டுகளுக்கு முன்பு அக்காலப்பகுதியில் நாம் முகங்கொடுத்துவந்த பிரச்சினைகளை எதிர்கால தலைமுறையினர் அனுபவிக்க இடமளிக்க மாட்டோம் என,

அப்போது நான் மக்கள் சந்திப்பொன்றின்போது குறிப்பிட்டிருந்தேன். 2005ஆம் ஆண்டில் பிறந்திருக்காத பிள்ளைகள் கூட இந்தச்,

சந்தர்ப்பத்தில் இங்கு இருக்கக்கூடும். அப்பிள்ளைகளுக்கு அன்று காணப்பட்ட வரலாறு குறித்து இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்ட வேண்டும்.

அந்தக் காலப்பகுதியில் இந்நாட்டில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இன்று போல சுதந்திரமாக பயணிக்க முடியாத சூழலே காணப்பட்டது.

எந்தச் சந்தர்ப்பத்திலும் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்து விடலாம் என்ற அச்சம் காணப்பட்டது. நான்கு, ஐந்து கிலோமீற்றருக்கு ஒரு சோதனைச் சாவடி காணப்பட்டது.

பல்வேறு இடங்களில் பேருந்துகளிலிருந்து இறங்கி சோதனைக்கு உட்படுத்தப்பட்டே பயணிக்க வேண்டியிருந்தது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலட்சக் கணக்கான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. இதனால், அக்காலப்பகுதியில் பலரும் கால்களை இழக்கும் நிலை ஏற்பட்டது.

காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் அம்பியூலன்ஸ் வண்டிகள் காலி வீதியில் அங்கும் இங்கும் பயணிப்பதையே அதிகளவில் காண கிடைத்தது.

அதுமாத்திரமன்றி அன்று ஆயிரக்கணக்கான பிள்ளைகள் அநாதை இல்லங்களிலேயே பிறந்தனர். போரினால் அனாதரவானர்கள் வசிக்கும் குடிசைகளிலிருந்தே பாடசாலைகளுக்கு சென்றனர்.

அவ்வாறானதொரு நாட்டில் 2005ஆம் ஆண்டு மக்களை சந்தித்தபோது, நாம் தற்போது எதிர்நோக்கும் இவ்வாறான இன்னல்களை எதிர்கால,

தலைமுறையினர் அனுபவிக்க இடமளிக்க மாட்டோம் என குறிப்பிட்டேன். இன்று அந்த எதிர்காலம் உதயமாகியுள்ளது.

இதேவேளை, நாம் சிறு பராயத்திலேயே பிள்ளைகளைப் பிரித்து விடுகின்றோம். சிங்களப் பிள்ளைகளை சிங்கள பாடசாலைகளுக்கும்,

முஸ்லிம் பிள்ளைகளை முஸ்லிம் பாடசாலைகளுக்கும், இந்து பிள்ளைகளை இந்து பாடசாலைகளுக்கும் என,

சிறு வயதிலேயே பிரித்துவிடுகிறோம். சிறு பராயம் முதல் இவ்வாறு பிரித்து வைத்துவிட்டு பெரியவர்களானவுடன் அனைவரையும் ஒன்றிணைந்து செயற்படுமாறு கூறுகின்றோம்.

இப்பிள்ளைகள் இன, மத அடிப்படையில் மாத்திரமன்றி தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை, சர்வதேச பாடசாலை என பாடசாலைகளினாலும் பிரித்தாளப்படுகின்றனர்.

எனவே, ஒரே நீதி, ஒரே நாடு அவசியமாயின் சிறு பராயம் முதல் இந்தப் பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்.

இந்நாட்டை பாதுகாப்பதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, கோடி கணக்கிலான மக்கள் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர் என்பதை இப்பிள்ளைகள் நினைவில் கொள்ள வேண்டும்.

எதிர்கால தலைமுறையினர் வரலாற்றை திரும்பிப் பார்க்கும்போது இக்காலத்தில் வாழ்ந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்று,

எண்ணத் தோன்றும் வகையிலான ஒரு நாட்டை நிர்மாணிப்பதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More