Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் சர்வஜன வாக்கெடுப்பைக் கோருவது முரண்பாடாகவே இருக்கும் | சுமந்திரன் செவ்வி

சர்வஜன வாக்கெடுப்பைக் கோருவது முரண்பாடாகவே இருக்கும் | சுமந்திரன் செவ்வி

9 minutes read

•புதிய பிரேரணையை இலங்கை நிராகரித்தால் அதன் சர்வதேச உறவில் முறிவுகள் ஏற்படும்

•வடமாகாண சபையின் ஐ.நா.வுக்கான தீர்மானம் இனப்படுகொலையை வலியுறுத்தவில்லை

•சர்வஜன வாக்கெடுப்பைக் கோருவதானது முரண்பாடான விடயமாகவே இருக்கும்

•குறைந்தபட்ச சாத்தியப்பாடுகளுடனனேயே குற்றவியல் நீதிமன்றுக்கான முயற்சி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மார்ச் மாத கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை மீள எடுப்பதால் அதனை உயரிய இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பு கிடைப்பதோடு, பேரவையினுள் இலங்கை பற்றிய புதிய தீர்மானமும் தடையின்றி நிறைவேற்றப்பட்டு சர்வதேச மேற்பார்வை தொடர்ந்தும் நீடித்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. இது எமக்கு இரட்டை நன்மையை அளிக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது குறிப்பிட்டார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, 

கேள்வி:- தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள மூன்று கூட்டுக்கள் ஒன்றிணைந்து ஜெனிவா மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது வரையில் பின்னடித்த விடயங்கள் சிலவற்றை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றதே?

பதில்:- கூட்டமைப்பு பின்னடித்த விடயங்கள் என்று எதனைக் குறிப்பிடுகின்றீர்கள்.

கேள்வி:- இனப்படுகொலை நடைபெற்றமை மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை தான் கூறுகின்றேன்?

பதில்:- அவ்வாறில்லை. நான் 2013 ஆண்டில் முதன்முதலாக முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது ஒரு ‘இனப்படுகொலை’ என்று குறிப்பிட்டு இலங்கைப் பாராளுமன்றத்திலே உரையாற்றியிருந்தேன். அது பகிரங்கமாக கூறப்பட்டதொன்று தானே.

கேள்வி:- நீங்கள் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தாலும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அல்லது தீர்மானங்களில் இனப்படுகொலை என்பதை வலியுறுத்தவில்லையல்லவா?

பதில்:- முதன் முதலாக 2011 ஆண்டு  மார்ச் 31ஆம் திகதி ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஆணையின் பிரகாரம் இலங்கை பற்றிய மூன்று நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. செயலாளர் நாயகம் அந்த அறிக்கையை செப்டெம்பரில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்திருந்தார். 

அந்த அறிக்கையில் ‘இனப்படுகொலை’ என்ற சொற்பதம் பயன்படுத்தப்படவில்லை. ‘துன்புறுத்தல்கள்’ என்ற சொற்பதமே உள்ளது. அதில் ‘இனப்படுகொலை’ என்ற சொற்பதத்தினை பயன்படுத்தாமை தொடர்பில் நாம் நீண்ட நேரம் அவர்களுடன் விவாதித்தோம். 

அச்சமயத்தில், ‘இனப்படுகொலை’ என்பதற்கான ‘நோக்கு’ மற்றும் ‘குற்றவியல்’ ரீதியான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லாமை, அத்துடன்  ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்பது நீண்டகாலமாக நடைபெறுவதால் அதனை குறிப்பிட்டு கூறி உள்ளீர்க்க முடியாமை தொடர்பில் எமக்கு தெளிவு படுத்தினார்கள். 

2012ஆம் ஆண்டில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையானது, ‘பிரகடனத் தீர்மானத்தினையே’ செய்தது. அதன் பின்னர் 2012, 2013ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துமாறே குறிப்பிட்டிருந்தன. 

அரசாங்கம் அதனை முன்னெடுக்காததன் காரணத்தினாலேயே 2014இல் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அலுவலகம் மூலமாக சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டது. 

அந்த தீர்மானத்திற்கு அமைவாகவே  விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டு இலங்கை பற்றி ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருடைய அவலுவலகத்தினால் விசாரணை அறிக்கை 2015 செப்டெம்பர் 16ஆம் திகதி ஜெனிவாவில் வெளியிடப்பட்டது. இதிலும் ‘இனப்படுகொலை’ என்ற சொற்பதம் பயன்படுத்தப்படவில்லை.

குறித்த அறிக்கை வெளியிடப்பட்டபோது,  பத்திரிகையாளர் ஒருவர் இனப்படுகொலை சொற்பதம் இடம்பெறாமை குறித்து கேள்வி எழுப்பிய சமயம் உயர்ஸ்தானிகர் இளவரசர் செய்ட் ராட் அல் ஹ{சைன், “போதுமான ஆதரங்கள் இல்லாமையாலேயே அச்சொற்பதத்தினை பயன்படுத்தவில்லை” என்று குறிப்பிட்டார்.

நாம் சமூகவியல் சார்ந்து இனப்படுகொலை என்று குறிப்பிட்டாலும் குற்றவியல் அடிப்படையில் அதற்கான சான்றுகள் அப்போது போதுமானதாக இருக்கவில்லை. 

கேள்வி:- 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலும் அவ்விடயம் இருக்கவில்லையே?

பதில்:- 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் இலங்கை அரசாங்கத்தினது இணை அனுசரணையை பெற்றுக்கொண்டதாகும். ஏற்கனவே ‘இனப்படுகொலை’ என்ற சொற்பதத்தினை பயன்படுத்துவதில் உள்ள நிலைமைகளை நாம் புரிந்து கொண்டிருந்தோம். 

முன்னதாக வெளியான ஐ.நா.வின் இரண்டு அறிக்கைகளில் அச்சொற்பதம் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. அவ்வாறான நிலையில் அச்சொற்பதத்தினை பயன்படுத்திவிட்டு பின்னர் அதனை நிரூபிக்க முடியாது போனால் அது எமக்கு பலத்த பின்னடைவுகளையே ஏற்படுத்தும். 

அதன் காரணத்தினால் தான், நாம் இனப்படுகொலை, மனிதாபிமானச் சட்ட மீறல்கள், துன்புறுத்தல்கள், போர்க்குற்றங்கள், மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்கள் என்று தனித்தனியாக வகைப்படுத்தாது பொதுவாக ‘சர்வதேசச் சட்ட மீறல்கள்’ என்ற சொற்பதத்தினை ஒரு ‘உத்தியாக’ பயன்படுத்தி இருந்தோம். 

கேள்வி:- சட்ட நுட்பங்கள் அறிந்தவரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்து வடக்கு மாகாண சபையில் 2015 பெப்ரவரி 10இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இனப்படுகொலைச் சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதே? 

பதில்:- அந்த தீர்மானத்தினை அனைவரும் இனப்படுகொலைத் தீர்மானம் என்றே கூறுகின்றார்கள். அந்த தீர்மானத்தின் இறுதிப்பகுதியை மிகக் கவனமாக அவதானித்தால், அதில் ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதுமட்டுமன்றி, ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்பது ‘சர்வதேச குற்றங்களில் ஒன்றாக இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை’ ஆகவே  அது வருங்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றே அத்தீர்மானம் நிறைவடைகிறது. 

அந்த தீர்மானம் இலங்கையில் நடந்தது ‘சர்வதேச குற்றங்கள் இல்லை’ என்ற செய்தியையே ஐ.நா.வுக்கு வழங்கியுள்ளது. அவ்விதமான எமது பலவீனங்களை எடுத்துக் காட்டும் வகையிலும் மக்களுக்கு நன்மை கிடைக்காத முறையிலும் நாம் செயற்படவில்லை. 

கேள்வி:- நீண்டகாலமாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்று கூறிவந்த நீங்கள் பொது ஆவணத்தில் அவ்விடயம் உள்வாங்கப்படுவதற்கு எவ்வாறு இணக்கம் தெரிவித்தீர்கள்? 

பதில்:- கடந்த 10வருடங்களாக மனித உரிமைகள் பேரவை ஊடான முயற்சியில் பொறுப்புக்கூறல் செய்யப்படவில்லை. கடந்த ஐந்து வருடங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் ஐ.நா.தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி வாக்குறுதிகளை அளித்தாலும் உள்நாட்டில் எந்தவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. 

பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் நாடுகளை கட்டுப்படுத்தாது. சம்பந்தப்பட்ட நாடு இணங்கினால் மட்டுமே பொறுப்புக்கூறல் தொடர்பாக நிறைவேற்றப்படும் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தலாம். அதுவே மனித உரிமைகள் பேரவையின் அமைப்பு முறைமையாகும். 

அந்த அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் கடந்த செப்டம்பர் கூட்டத்தொடரில் ஐ.நா.தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்து விட்டது. அதன் பின்னர், பொறுப்புக்கூறல் விடயத்தினை மனித உரிமைகள் பேரவையில் வைத்திருப்பதால் பயனில்லை. ஆகவே தான் அதனை அங்கிருந்து மீளெடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நோக்கி கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

கேள்வி:- இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முடியும் என்ற நம்பிக்கை உங்களிடத்தில் உள்ளதா? 

பதில்:- சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு மூன்று வழிகளே உள்ளன. முதலாவது, ‘ரோம்’ சாசனத்தில் சம்பந்தப்பட்ட நாடு கைச்சாத்திட்டிருக்க வேண்டும். ஆனால் இலங்கை அதில் கையொப்பமிடவில்லை. 

இரண்டாவது, சம்பந்தப்பட்ட நாடு இணங்கி குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறைக்கு முகங்கொடுக்க வேண்டும். இலங்கை அவ்விதமான இணக்கத்தை ஒருபோதும் தெரிவிக்கப்போவதில்லை. மூன்றாவது ஐ.நா.பாதுகாப்புச் சபையின் ஊடாக பரிந்துரைக்கப்பட வேண்டும்.  இதுவொன்றே எமக்குள்ள ஒரேவழியாகும். ஆனால் இதில் வீட்டோ அதிகாரத்தினைக் கொண்டுள்ள ரஷ்யா, சீனா இலங்கையை காப்பாற்றும் என்பதே எனது தர்க்கமாகும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் இவ்விதமான விடயங்களில் சீனா வீட்டோவை பயன்படுத்தாது இருந்துள்ளதாக பொது ஆவணத் தயாரிப்பு கலந்துரையாடல்களின் போது எனது நிலைப்பாட்டுக்கு எதிரான தர்க்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

ஆகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சாத்தியமில்லை என்று எதிர்மறையாக சிந்திப்பதை விடவும் ஒரு சதவீதமேனும்  உள்ள சாத்திய வழியில் முயற்சித்துப்பார்ப்போம் என்ற நிலைப்பாடு உடையவர்களின் முயற்சிக்கும் கருத்துக்கும் குறுக்கே நிற்பதற்கு நான் விரும்பவில்லை. அதனாலேயே சம்மதம் தெரிவித்தேன். அவ்விதமான முயற்சி வெற்றி பெற்றால் அதனை மனதார வரவேற்கும் முதல் நபரும் நானே. 

கேள்வி:- மனித உரிமைகள் பேரவையில் இருந்து பொறுப்புக்கூறல் விடயம் மீள எடுக்கப்படும் பட்சத்தில் அடுத்த கட்டச் செயற்பாடுகள் என்ன?

பதில்:- பொறுப்புக்கூறல் மீளவும் எடுக்கப்பட்டு அதனை மீண்டும் ஐ.நா.செயலாளர் நாயகத்திடம் அனுப்புமாறு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரைக் கோரியுள்ளோம்.  ஏனென்றால் அவரே இலங்கை விடயத்தினை மனித உரிமைகள் பேரவைக்கு 2011இல் அனுப்பி வைத்தவர். அவர் அனுப்பி வைத்த விடயம் பத்து ஆண்டுகளாக எந்த முன்னேற்றத்தினையும் எட்வில்லை என்ற செய்தியையும் அவருக்கே மீள அனுப்பி வைப்பதன் ஊடாக தெரிவிக்க முடியும். 

மேலும் மனித உரிமைகள் பேரவையாலோ அல்லது உயர்ஸ்தானிகராலோ இந்த விடயத்தினை நேரடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த முடியாது. 

ஆகவே செயலாளர் நாயகத்திடம் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் பொதுச்சபையில் இந்த விடயத்தினை விவாதித்து தீர்மானம் எடுத்தே அவரால் சாத்தியமான பொறிமுறைகளில் ஒன்றை பரிந்துரைக்கலாம். 

உதாரணமாக, கூறுவதென்றால்  பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் அவரால் அனுப்பபடலாம். அல்லது, சிரியா விடயத்திற்காக பொதுச்சபையால் உருவாக்கப்பட்ட சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையைப் போன்தொரு கட்டமைப்பை உருவாக்கலாம். 

நாம் அனுப்பி வைத்துள்ள ஆவணத்தில் சிரியாவை ஒத்தபொறிமுறையை உதாரணமாக கூறியுள்ளமைக்கு காரணம் என்னவென்றால், பொறுப்புக்கூறல் விடயத்தினை நீதிமன்ற படிமுறைக்குள் கொண்டு  செல்வதற்காகவே. அவ்விதம் பரிந்துரைக்கும் கட்டமைப்பு செயற்படுவதற்காக ஒருவருட கால அவகாசம் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளோம். 

கேள்வி:- இதில் மியன்மார் பொறிமுறைகள் ஒரு உதாரணமாக உள்ளீர்க்காமைக்கான காரணம் என்ன?

பதில்:- மியன்மார் விடயத்தில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையே அந்தப்பொறிமுறையை உருவாக்கியுள்ளது. நாங்கள் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை மனித உரிமைகள் பேரவையிலிருந்து மீள எடுப்பதற்கான கோரிக்கையை முதலில் விடுத்துவிட்டு பின்னர் அதே ஆவணத்தில் மனித உரிமை பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட பொறிமுறையை கோருவதானது முன்னுக்குப்பின் முரண்பாடாக இருக்கும் என்பதால் தான் அப்பொறிமுறையை உள்வாங்கவில்லை.

கேள்வி:- இலங்கை அரசாங்கம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க முடியாதென கூறியுள்ளதே?

பதில்:- ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணை நாடுகள் இறுதி தருணத்திலும் இலங்கை அரசாங்கத்தினை மார்ச் மாதம் நிறைவேற்றவுள்ள தீர்மானத்திற்கு அனுசரணை அளிக்குமாறு கோரியிருந்தன. எனினும் இலங்கை அரசாங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது.  அது உண்மையிலேயே எமக்கு சாதகமான விடயம் தான். 

ஏனென்றால் இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்குவதாக இணை அனுசரணை நாடுகளிடத்தில் சம்மதம் தெரிவித்திருந்தால் அரசாங்கம் விரும்புகின்ற வகையிலேயே நிறைவேற்றப்படும் தீர்மானம் அமைந்திருப்பதற்கே அதிக சாத்தியங்கள் இருந்தன.

அத்தோடு இம்முறை பாதிக்கப்பட்ட எமது தரப்புக்கு சாதகமான நிலைமைகள் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் இல்லை. பொறுப்புக்கூறல் பரிந்துரைகளுடன் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றுவதே மிகச் சவாலான விடயமாகவே உள்ளது. 

குறிப்பாக பொறுப்புக்கூறலுடன் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் தருணத்தில் அதற்கு ஆதரவாக உறுப்பு நாடுகளின் வாக்குகளை பெற்றுக்கொள்வது மிகவும் கடினமான விடயமாக இருக்கின்றது. ஆனால், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை நாம் பேரவையிலிருந்து மீள எடுக்கும் கோரிக்கையை முன்வைத்திருப்பதன் மூலம், இலங்கை தொடர்பான பிரேரணையை நிறைவேற்றும் நாடுகளுக்கும் நன்மையே ஏற்பட்டுள்ளது. 

அதாவது பொறுப்புக்கூறல் விடயங்கள் இல்லாத தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்காக உறுப்பு நாடுகளின் ஆதரவினைப் பெறுவதில் கடினமான நிலைமைகள் இருக்கப்போவதில்லை. அவை தயக்கங்களையும் தெரிவிக்காது.

ஆகவே ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் எமக்கு இம்முறை இரட்டை நன்மையே ஏற்படப்போகின்றது. முதலாவது பொறுப்புக்கூறல் விடயத்தினை ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து மீள எடுத்து உயரிய இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இரண்டாவது, இலங்கை பற்றி தீர்மானமும் தடையின்றி மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டு சர்வதேச மேற்பார்வையுடன் தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருக்கவுள்ளது.

கேள்வி:- இலங்கை அரசாங்கம்  எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐ.நா.வில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தினையும் நிராகரித்தால் என்னவாகும்?

பதில்:- இலங்கை அரசாங்கம் அவ்வாறு கூறினாலும் கடந்த ஐ.நா.தீர்மானத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான சில கட்டமைப்புக்களை இன்மும் வைத்திருக்கின்றன. அவற்றை வினைத்திறனாக செயற்பட இடமளிக்காது விட்டாலும் ஐ.நா.விற்கு காண்பிப்பதற்காக அவ்வாறே வைத்துள்ளன. 

மேலும் இம்முறை இலங்கைக்கான பொறுப்புக்கூறல் விடயம் இல்லாத தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதற்கு எந்தவிதமான நியாயங்களும் இல்லை. 

அவ்வாறு நிராகரிக்கின்றபோது, ஒரே நேரத்தில் மேற்குலநாடுகள் உள்ளிட்ட முக்கியமான நாடுகளைப் பகைத்துக்கொள்ள அல்லது இருதரப்பு உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டிய நிலைமையே ஏற்படும். அவ்விதமான நிலைப்பாடொன்றை இந்த அரசாங்கம் எடுப்பதற்கு விரும்பாது. 

கேள்வி:- வடக்கு, கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்புக் கோரிக்கையை ஐ.நா.வுக்கான பொது ஆவணத்தில் நீங்கள் உள்ளீர்க்க விரும்பாமைக்கான காரணம் என்ன?

பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி, ஐ.நா.வுக்கான பொது ஆவணத்தில் கையொப்பமிட்ட ஏனைய கூட்டுக் கட்சிகளாக இருந்தாலும் சரி, ஐக்கிய இலங்கைக்குள்ளேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன. அதேநேரம், அதிகாரங்கள் அதியுச்சமாக பகிரப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. 

சர்வஜன வாக்கெடுப்பு என்பது பிரிந்து செல்லுதலை மையப்படுத்தியதாகும். அதிகாரப்பகிர்வினை கோரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிங்களத் தரப்புக்கள் நாட்டை பிரிக்கப்போகின்றோம் என்றே பிரசாரம் செய்கின்றன. 

அவ்வாறான நிலையில் சர்வஜன வாக்கெடுப்பையும் கோரினால் அவர்கள் செய்யும் பிரசாரம் உண்மையாகிவிடும். மேலும் நாமும் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்று பல சந்தர்ப்பங்களில் தெரிவித்தமையும் பொய்யாகிவிடும். அதன் காரணமாகவே அவ்விடயம் உள்ளீர்க்கப்படவில்லை.

கேள்வி:- இறுதியாக, ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியால்  பிறிதொரு குழு நியமிக்கப்பட்டுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- ஜெனிவா கூட்டத்தொடர் நெருங்கி வரும் நிலையில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகவே தற்போது இவ்விதமான குழுவை நியமித்து சர்வதேசத்திற்கு போலியானதொரு தோற்றப்பட்டை வெளிப்படுத்த முனைகின்றது. அந்தக் குழுவை நாம் எள்ளளவும் நம்பவில்லை. அதுவெறுமனே கண்துடைப்பு செயற்பாடாகும். இதனை சர்வதேச நாடுகளும் நன்கு அறியும். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More