Tuesday, May 21, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மத்திய ஆசிய பெண்கள் கரப்பந்தாட்டம் | இலங்கை அணியில் மலையக வீராங்கனை திலக்ஷனா

மத்திய ஆசிய பெண்கள் கரப்பந்தாட்டம் | இலங்கை அணியில் மலையக வீராங்கனை திலக்ஷனா

2 minutes read

லங்கை தேசிய பெண்கள் கரப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்த முதலாவது மலையகப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை ஸ்ப்ரிங்வெலி தோட்டம் மேமலைப் பிரிவைச் சேர்ந்த ஜெயராம் திலக்ஷனா படைத்துள்ளார்.

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் மே மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மத்திய ஆசிய பெண்கள் கரப்பந்தாட்ட சவால் கிண்ணப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் முதல் தடவையாக திலக்ஷனா இடம்பிடித்துள்ளார்.

இலங்கை பாடசாலைகள் கரப்பந்தாட்டப் போட்டியில் பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக சம்பியனான ஸ்ப்ரிங்வெலி தோட்டம், மேமலை தமிழ் வித்தியாலய கரப்பந்தாட்ட அணியில் முக்கிய வீராங்கனையாக திலக்ஷனா இடம்பெற்றவராவார்.

தோட்டத் தொழிலாளர்களான திலக்ஷனாவின் பெற்றோரும், 6ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை அவரது பாடசாலையில் கரப்பந்தாட்டப் பயிற்றுநராக பதவி வகித்த நடேசன் சுந்தரராஜும் அளித்த ஆக்கமும் ஊக்கமுமே அவரை தேசிய அணி வரை கொண்டுசென்றுள்ளது.

பாடசாலையிலிருந்து விலகிய பின்னர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 2002இல்   இணைந்த திலக்ஷனா அங்கும் கரப்பந்தாட்டத்தில் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தி வந்தார். பயிற்றுநர் சானக்க அளித்த சிறந்த தொழில்நுட்ப பயிற்சிகள் திலக்ஷனாவின் கரப்பந்தாட்டத் திறமையை மேம்படுத்தியது.

இந்நிலையில், இராணுவத்தில் இணைந்த அவர் தற்போது இராணுவ பெண்கள் கரப்பந்தாட்ட அணியில் முக்கிய வீராங்கனையாக இடம்பெற்றுவருகிறார்.

இராணுவத்தில் தொழில்புரியும் அதேவேளை, இராணுவ உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் ‘விரியும் சிறகுகள்’ (முன்னர் மலைக்குயில் கழகம்) கழகத்துக்காக தனது சொந்த ஊரில் கரப்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

நேபாளத்தில் மே 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மத்திய ஆசிய பெண்கள் கரப்பந்தாட்ட சவால் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணிக்கு தில்லின வாசனா தலைவியாகவும், கவிஷா லக்ஷானி உதவித் தலைவியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இப்போட்டியில் நேபாளம், கிர்கிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா ஆகிய நாடுகள் ‘ஏ’ குழுவிலும் உஸ்பெகிஸ்தான், இலங்கை, மாலைதீவுகள், கஸக்ஸ்தான் ஆகிய நாடுகள் ‘பி’ குழுவிலும் இடம்பெறுகின்றன.

இலங்கை தனது முதலாவது போட்டியில் உஸ்பெகிஸ்தானை 22ஆம் திகதி காலை 9.30 மணிக்கு எதிர்த்தாடவுள்ளது.

தொடர்ந்து கஸக்ஸ்தானை 23ஆம் திகதியும், மாலைதீவுகளை 24ஆம் திகதியும் இலங்கை   சந்திக்கவுள்ளது.

 

 

அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக): கவிஷா லக்ஷானி (உதவித் தலைவி), சந்திமா அக்கரவிட்ட (உதவிப் பயிற்றுநர்), துஷார பெரேரா (அணி முகாமையாளர்), கன்ச்சன ஜயரத்ன (இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர்), ஏ.எஸ். நாலக்க (இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளன பொதுச் செயலாளர்), சார்ள்ஸ் திலக்கரத்ன (தலைமைப் பயிற்றுநர்), ஜகத் சேனாதீர (உடற்பயிற்சி ஆலோசகர்), திலினி வாசனா (தலைவி)

நிற்பவர்கள்: திலுஷா சஞ்சீவனி, ப்ரீதிகா ப்ரமோதனி, ஜெயராம் திலக்ஷனா, அப்சரா சேவ்மாலி, இரேஷா உமயங்கனி, பியும் பாஷினி, சஞ்சீவனி கருணாரத்ன, அயேஷா மதுரிகா, அருண வசன்தி, கான்ச்சனா சத்துரானி, நதுனி ஹிமன்சலா, சச்சினி சாருக்கா.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More