கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தரின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 25ஆம் திகதி இரவு கிளிநொச்சி – வட்டக்கச்சிப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நவரத்தினம் மதுஷன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட இராமநாதபுரம் பொலிஸார் பெண் உட்பட மூவரை நேற்று மாலை கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவரைத் தொலைபேசி மூலம் அழைத்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய சந்தேகநபர்களைத் தேடி வருவதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.