Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் பின்னடைவுக்கு ரணில் மட்டுமே பொறுப்பாளி அல்ல | ருவன் விஜேவர்த்தன நேர்காணல்

பின்னடைவுக்கு ரணில் மட்டுமே பொறுப்பாளி அல்ல | ருவன் விஜேவர்த்தன நேர்காணல்

9 minutes read

சஜித்தின் அணி இணங்கினால் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றாக செயற்படலாம் - ருவான்

நாட்டில் ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்காக, ஆட்சியில் உள்ள ராஜபக்ஷவினருக்கு எதிராக எதிரணிகளுடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு தயாராக உள்ளோம். இந்த ஒன்றிணைவு பாராளுமன்றிலும், வெளியிலும் தொடரவேண்டியது கட்டாயமாக இருக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்த்தன வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:-பழம்பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவராக தெரிவு செய்யப்பட்டிருப்பதை எப்படி பார்க்கின்றீர்கள்?

பதில்:- முதலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் கட்சியொன்றில் முக்கிய பதவியொன்று கிடைத்திருப்பதை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். அந்தப் பதவியை என்மீது நம்பிக்கை வைத்து வழங்கியமைக்காக கட்சியின் அனைத்து தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கேள்வி:- ஐ.தே.க.தற்போது இருக்கும் நிலையில் பிரதி தலைமை ஏற்றிருக்கின்றமை சவாலானதொன்றாக கருதவில்லையா?

பதில்:- ஐ.தே.க.வை கீழ் மட்டத்திலிருந்து கட்டியெழுப்பி அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களின் நம்பிக்கையை வென்றெடுத்து கட்சியை மீளவும் உயர்வடையச் செய்ய வேண்டியுள்ளது. அந்தப் பெரும்பணியை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதுமிகப்பெரும் சவாலான விடயம் தான்.  அதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு தயாராகவே உள்ளேன். 

கேள்வி:- நீங்கள் பிரதித் தலைமை பதவியை கிடைத்தவுடனேயே கட்சிக்கு தலைமைத்துவத்தினை வழங்குவத்கு தயார் என்று கூறியிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் கட்சியில் தற்போது எஞ்சியுள்ள சொற்ப உறுப்பினர்களில் ஒருபகுதியினர் அதற்கு கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனரே?

பதில்:- ஐ.தே.க.வானது அதியுச்ச ஜனநாயகப் பண்புகளைக் கொண்ட கட்சியாகும். இந்தக் கட்சியில் வேறுவேறு நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் உள்ளார்கள். ஆகவே அனைத்து தரப்புக்களுடன் பரந்து பட்ட கலந்துரையாடல்கள் ஊடாகவே இறுதியான தீர்மானம் எடுக்கப்படும். 

பொதுஜன பெரமுனவைப் பார்த்தீர்கள் என்றால் அது ராஜபக்ஷவினரின் குடும்பக்கட்சி. சுதந்திரக்கட்சியும் பண்டாரநாயக்கவின் குடும்பக் கட்சியாகத் தான் இருந்தது. ஆனால் தற்போது சற்றே மாறியுள்ளது. ஐ.தே.க.வைப்பொறுத்தவரையில் அவ்விதமான நிலைமைகள் காணப்படுவதில்லை. பொருத்தமானவர்களே கட்சியின் பதவி நிலைகளுக்கு தெரிவு செய்யப்படுகின்றார்கள். 

ஐ.தே.க.வின் தனித்துவத்தின் காரணமாக இந்தக் கட்சிக்கு தலைமை தாங்குதற்கான போட்டி காணப்படுகின்றது. முதல்வரிசை ஆசனங்களைப் பெறுவதற்கும் போட்டிகள் உள்ளன. நவீன், வஜிர, தயாகமகே போன்றவர்கள் இந்தக்கட்சிக்காக உழைத்திருக்கின்றார்கள். தற்போதும் கட்சிக்காக செயற்படுகின்றார்கள். அவர்களைப் போன்று தான் எனக்கு இந்த கட்சிக்கான தலைமைத்துவத்தினை வழங்குவதற்கான உரித்துள்ளது.

கேள்வி:- ஏனைய கட்சிகளில் உள்ள குடும்ப ஆதிக்கத்தினைப் பற்றி கூறுகின்றீர்கள், உங்களுடைய கட்சியிலும், ஜே.ஆர்.ஜெயவர்த்தன மருமகனான ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழியமைத்துக் கொடுத்திருக்கின்றார். தற்போது கூட அவருடைய மைத்துணராக இருக்கும் உங்களை தலைமைப் பதவியில் அமர்த்துவதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமைப் பதவியை பற்றிப்பிடித்துக் கொண்டிருப்பதாக உங்களின் தரப்பினரே குற்றம் சாட்டுக்கின்றார்களே? 

பதில்:- நீண்ட புன்னகையுடன் இருக்கிறார்.

கேள்வி:- ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் உங்களை தலைவராக்கும் திட்டமில்லை என்கி;ன்றீர்களா?

பதில்:- ரணில் விக்கிரமசிங்கவை நன்கு அறிந்தவர்கள், புரிந்தவர்கள் அவரிடத்தில் குடும்ப அரசியலை வளர்க்கும் கொள்கை இல்லை என்பதை உணருவார்கள். அத்துடன், பிரதி தலைவர் பதவிக்கான நியமனம் பற்றி பேசப்படும்போது நான் அப்பதவியினை பெறுவதற்காக முன்வரவில்லை. ரவி, தயாகமகே, அகில, வஜிர, நவீன் போன்றவர்களே முன்வரிசையில் இருந்தார்கள். 

கேள்வி:- அப்படியென்றால் நீங்கள் எவ்வாறு பிரதி தலைவராகினீர்கள்?

பதில்:- முதலில் பிரதிதலைவர் பதவிக்காக அர்ஜுண, மற்றும் நான் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றே கூறப்பட்டது. பின்னர் கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து என்னிடத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டன. அத்துடன், தேரர்களும் இந்தப்பதவிக்கு நான் பொருத்தமானவர் என்றும் என்னை அப்பதவியை பொறுப்பேற்பதற்கான முன்வருமாறும் அழைப்பு விடுத்தார்கள். அந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் தான் நான் பிரதி தலைவர் பதவிக்காக போட்டியிட்டிருந்தேன். 

அத்துடன் எனது கட்சியாளர்களின் வாக்களிப்பின் மூலமே தெரிவு செய்யப்பட்டேன். இந்த வாக்கெடுப்பில ரணில் விக்கிரமசிங்க பங்குபெறவே இல்லை. அவர் எனக்கு தனித்துவமான இடமளிக்க வேண்டுமென்று ஒருபோதும் செயற்பட்டிருக்கவுமில்லை. ஒரு பரம்பரையிடமிருந்து அடுத்த பரம்பரைக்குச் செல்வதற்கு ஐ.தே.க.வானது தனிப்பட்டவர்களுக்கான சொத்து அல்ல. விமர்சனத்திற்காக அவ்வாறு கூறமுடியும். ஆனால் யதார்த்தம் அதுவல்ல. 

கேள்வி:- அவர்களுடன் ஒப்பிடுகையில் அனுபத்திலும் சரி, அரசியல் பிரவேசத்திலும் சரி நீங்கள் மிகுந்த இளைவராகவல்லவா இருக்கின்றீர்கள்?

பதில்:- ஆம், ஆனால் நான் கடந்த பத்து ஆண்டுகளாக கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து பல்வேறு பதவிகளை வகித்து வந்திருக்கின்றேன். அந்தப் பதவிகளைச் முறையாகவும், வினைத்திறனாகவும் செய்திருக்கின்றேன். அந்த அடிப்படையில் தலைமைத்துவப் பதவிக்காக போட்டியிடும் உரிமை எனக்குள்ளது. 

கேள்வி:- ஐ.தே.க.வுக்கான புதிய தலைவரை எவ்வாறு தெரிவு செய்ய திட்டமிட்டிருக்கின்றீர்கள்? தற்போதைய தலைவரான ரணில் விக்கிரமசிங்க பதவி விலகியதும், பிரதி தலைவர் அந்த இடத்திற்கு பதவி உயர்வு பெற்றுவிடுவாரா?

பதில்:- அனைத்து உறுப்பினர்களும் ஏகோபித்து நபர் ஒருவரை தெரிவு செய்யும் வகையிலான இணக்கப்பாட்டிற்கு வருவார்களாக இருந்தால் எவ்விதமான பிரச்சினையும் ஏற்படாது. அவ்வாறு இல்லாது பலர் தலைமைக்கான வேட்பாளர்களாக களமிறங்குவார்களாக இருந்தால் வாக்கெடுப்பிற்கே செல்ல வேண்டியிருக்கும். 

கேள்வி:- ஐ.தே.க.வின் தலைமை ஏற்பதற்கான சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைக்காது போய் பிறிதொருவர் அப்பதவியை ஏற்கின்றபோது உங்களது பிரதிபலிப்பு எவ்வாறிருக்கும்?

பதில்:- எனக்கு கட்சியில் உள்ள எவருடனும் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. நான் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராகவே உள்ளேன். என்னைப் பொறுத்தவரையில் கட்சியை மீளவும் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறானதொரு செயற்பாட்டிற்கு சரியான மாற்றங்களும், தெரிவுகளும் அவசியமாகின்றது. உத்வேகமான செயற்பாடு தேவையாகவுள்ளது. அதற்காக இளம் தலைமுறையினரை உள்ளடக்கிய பாரிய மறுசீரமைப்பொன்று அவசியமாகவுள்ளது. ஆகவே அவற்றைக் கருத்திற்கொண்டு அனைவரும் ஒன்றுபட்டு அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டியது அவசியமாகின்றது.

கேள்வி:- ஐ.தே.க.வினுள் மறுசீரமைப்பு அவசியம் என்ற கோசம் 15வருடங்களுக்கும் அதிகமாக உட்கட்சிக்குள்ளே தோன்றிருக்கின்ற நிலையில் அது தொடர்பாக தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கைகளை முன்னெடுக்காது இருந்தமைக்கான காரணம் என்ன?

பதில்:- எடுத்த எடுப்பிலேயே முழுமையாக மாறுசீரமைப்புச் செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் மெதுவான வேகத்தில் அவை ஆரம்பித்திருந்தன. 

கேள்வி:- நீங்கள் கூறும்படி மறுசீரமைப்புக்கள் முறையாக இடம்பெற்றிருந்தால் பிளவுகள் ஏற்பட்டிருக்காது அல்லவா? சஜித் பிரேமதாஸ தலைமையில் பெரும்பாலான உறுப்பினர்கள் வெளியேறி விட்டனரல்லவா?

பதில்:- அவர்களும் உடனடியாக அனைத்தும் இடம்பெற வேண்டும் என்றே கருதினார்கள். அதுமட்டுமன்றி கட்சியினுள் மோதல்கள் காணப்பட்டன. அவற்றுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. சஜித் தலைமையிலான அணியினர் பிரிந்து சென்றனர். நாம் அரசாங்கத்தில் இருந்த காலத்தில் எமது கட்சியின் ஆதரவாளர்களை முறையாக கவனித்திருக்கவில்லை. அதனால் அவர்கள் மத்தியிலும் அதிருப்திகள் காணப்பட்டிருந்தன. இந்தக் காரணங்கள் காரணமாக நடைபெற்று நிறைவடைந்த தேர்தலில் மிகுந்த பின்னடைவைச் சந்திக்க நேரிட்டது. 

ஐ.தே.க.வை சீரமைத்து புதிப்பிபதற்கு தற்போது பொருத்தமான தருணம் ஏற்பட்டுள்ளது. இளம் சந்ததியினர், புதிய சிந்தனையாகர்கள், நிலைப்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து கட்சியை பலமாக கட்டியெழுப்புவதற்குரிய தருணம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஐ.தே.க.புதியதொரு கட்சியாக மக்கள் மத்தியில் செல்லவுள்ளது. 

கேள்வி:- ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்களை மீண்டும் ஐ.தே.க.வில் இணைத்துக் கொள்வதற்கு மட்டுப்பாடுகள் இருக்கின்றதா?

பதில்:- எவ்விதமான மட்டுப்பாடுகளும் இல்லை. இதயசுத்தியுடன் அவர்கள் தமது தாய் கட்சியில் இணைந்து கொள்ள முடியும். ஐ.தே.க.வுக்காக உழைத்தவர்களும் அந்த அணில் இருக்கின்றார்கள். அந்த அணியிலும் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. அங்குள்ளவர்களில் சிலர் எம்முடன் உரையாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் பலர் எதிர்காலத்தில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

கேள்வி:- ஐ.தே.க. முகங்கொடுத்துள்ள மிகமோசமான நிலைமைக்கு தலைமைப்பதவியை விட்டுக்கொடுக்காதிருந்த ரணில் விக்கிரமசிங்கவே பொறுப்புக்கூற வேண்டியவராக உள்ளார் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:- எமது கட்சியின் தலைவர்கள் விடுதலைப்புலிகளால் வரிசையாக படுகொலை செய்யப்பட்டார்கள். காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத் முதலி, ரணசிங்க பிரேமாஸ என்று இரண்டாம் தலைவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதனால் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டது. 

கட்சியின் தலைமைத்துவத்தினை பொறுப்பேற்பதற்கு பலர் தயக்கம் காட்டினார்கள். அவ்வாறான தருணத்தில் கட்சியின் தலைமைத்துவத்தினை ரணில் விக்கிரமசிங்க துணிந்து பொறுப்பேற்றிருந்தார். சவாலன கட்டத்தில் கட்சியைப் பொறுப்பேற்று உரிய தலைமைத்துவத்தினை வழங்கி கட்சியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். 

அந்தவகையில் கட்சியின் பின்னடைவுகளுக்கு அவர் மட்டும் தான் காரண கர்த்தாவ இருக்கின்றார் என்று முழுப்பொறுப்பினையும் அவர் மீது சுமத்திவிட முடியாது. அந்த தோல்வியை கட்சியில் உள்ள அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். நாம் பொறுப்பேற்கின்றோம்.

கேள்வி:-பொதுத்தேர்தல் நிறைவடைந்து ஒருமாதத்திற்கும் அதிகமான காலம் சென்றுள்ளபோதும் உங்களின் கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்கான நபரைத் தெரிவு செய்ய முடியாதிருப்பதற்கான காரணம் என்ன?

பதில்:- தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. ஆகவே அதுபற்றி விரைவில் முடிவெடுக்கப்படவுள்ளது.

கேள்வி:- ரணில் விக்கிரமசிங்கவே அந்த ஆசனத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று நிலைப்பாடுகள் கட்சிக்குள் உள்ளதல்லவா?

பதில்:- அவ்வாறான நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எமது கட்சிக்குள் மட்டுமன்றி அரசாங்கத்தின் உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்க போன்றதொருவர் பாராளுமன்றத்தில் இல்லாமை வெற்றிடமாக உள்ளதாக கூறியுள்ளனர். 

அவ்வாறிருக்க, பாராளுமன்றத்தில் தனி நபராக அனைத்து விடயங்களையும் கையாளும் ஒருவரே தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாடுகள் உள்ளன. அத்துடன் பாராளுமன்றத்தில் காணப்படும் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வல்லவராகவும் அவர் இருக்க வேண்டும். அதுவே கட்சியையும் வலுப்படுத்துவதாக அமையும். அதுபற்றி விரைவில் ஏகோபித்து தீர்மானிப்போம். 

கேள்வி:- ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்த விடயம் பற்றி பேசினீர்களா? மீண்டும் பாராளுமன்றம் செல்வதுபற்றி அவருடைய விருப்பு எவ்வாறிருக்கின்றது?

பதில்:- தான் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தப் போவதில்லை என்றும் பிறிதொருவரையே அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

கேள்வி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள்காங்கிரஸ் போன்ற சிறுபான்மையினத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளினது ஆதரவினை இழந்து விட்டீர்களே?

பதில்:- கடந்த பொதுத்தேர்தலில் குழப்பகரமான அலையினால் அத்தரப்புக்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் சென்றுவிட்டார்கள். ஆனால் அந்தக் கூட்டடிலும் குழப்பங்கள் உள்ளன. குறிப்பாக சிறுபான்மை தரப்புக்களுக்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆகவே எதிர்வரும் காலத்தில் அவர்கள் மீண்டும் எம்முடன் கைகோர்த்து புதிய பயணத்திற்கு வலுச்சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 

கேள்வி:- மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் இருக்கும் ஆளும் தரப்பின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொதுவான தளத்தில் இணைந்து செயற்படுவது பற்றி பேசப்படுகின்ற நிலையில் ஐ.தே.க அதற்கு தயாராக உள்ளதா?

பதில்:- ஆம், பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளில் ஐ.தே.க ஏனைய எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்படத் தயாராகவே உள்ளது. 

கேள்வி:- கடந்த ஜனாதிபதி, பொதுத் தேர்தலில் பெரமுனவின் வெற்றிக்கு பெரும்பான்மை இனத்தினையும், பௌத்த மதத்தினையும் மையப்படுத்தியதொரு பிரசாரம் தீவிரமாக இருந்திருக்கின்மையை எப்படி பார்கின்றீர்கள்?

பதில்:- இந்த நாட்டில் சம்பிரதாய அரசியலில் ஈடுபடுவதாக இருந்தால் பௌத்த பீடாதிபதிகளின் நம்பிக்கையை வென்றெடுப்பது அவசியமாகின்றது. அதனை தவிர்க்கவும் முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியை எடுத்துக்கொள்வீர்களானால் தனியொரு இனக்குழுமத்தினையோ மதக்குழுமத்தினையோ மகிழ்ச்சிப்படுத்தி, திருப்பதிப்படுத்தி வாங்குவங்கியை தக்கவைக்கும் கட்சியொன்றல்ல. டீ.எஸ்.சேனநாயக்க மூவினங்களையும் ஒன்றிணைத்தே கட்சியின் அடிப்படை கொள்கைகளை அமைத்துள்ளார். 

அண்மைய காலங்களில் எமது கட்சியில் இருக்கின்றவர்கள் வெளியிட்ட கருத்துக்களால் பெரும்பான்மை மக்களினதும், சிறுபான்மை மக்களினதும் வாக்குகளை இழந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே அந்த நிலைமைகளை மாற்ற வேண்டியுள்ளது. அதேநேரம், தேர்தல் வெற்றிக்காக மட்டும் இனவாதத்தினையும், மதவாத்தினையும் கையிலெடுப்பது நீண்ட இருப்பிற்கும், கட்சிக்கும் பாதகத்தினையே ஏற்படுத்தும். எதிர்காலமும் இல்லாது போகும். 

கேள்வி:- ரணில் விக்கிரமசிங்க கட்சித்தலைமைப் பதவியை துறந்த பின்னர் தொடர்ந்தும் ஐ.தே.க.வில் வகிபாகத்தினைக் கொண்டிருப்பரா?

பதில்:- அண்மைய காலத்தில் நான் பல பௌத்த பீடாதிபதிகள், துறைசார் நிபுணர்கள் போன்றவர்களுடன் சந்திப்புக்களை நடத்தி வருகின்றேன். அவர்கள் தலைமைத்துவ மாற்றம் அவசியமாகின்றது என்று வலியுறுத்தும் அதேநேரம், ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சியின் விசேட பதவியொன்றில் அமர்த்துமாறே கூறுகின்றனர். அவருடைய கல்வி அறிவு, அனுபவம், போன்றவை மிகவும் அவசியமானவை. 

ஆகவே அவரை கட்சியின் ஆலோசகர் போன்ற பதவியில் நீடிக்கச் செய்யுமாறே கூறுகின்றனர். நானும் அவ்வாறே விரும்புகின்றேன். கட்சியின் எதிர்காலப் பயணத்திற்கு அவருடைய ஆலோசனைகள் அவசியமாகின்றன. அவரை வெறுமனே தலைமைத்துவப் பதவியிலிருந்து நீக்கி அவருடைய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதில்லை. 

நேர்காணல்:- ஆர்.ராம்

நன்றி – வீரகேசரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More