காயத்துக்குள்ளான அஸ்வின் எதிர்வரும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவாரா?

நடப்பு ஐ.பி.எல். தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், காயத்துக்குள்ளான டெல்லி கெபிடல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரர் அஸ்வின் எதிர்வரும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவாரா என்ற கேள்வி இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தநிலையில், தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் உண்டான வலி தற்போது குறைந்துள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது வலி இருந்தது. ஆனால் தற்போது வலி குறைந்துள்ளது. ஸ்கேன் பரிசோதனை முடிவுகளும் உற்சாகப்படுத்துகின்றன. அனைவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

ஐ.பி.எல். தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக தனது முதல் ஓவரை வீசிய அஸ்வின், இறுதி பந்தினை தடுக்க முயன்ற போது, கீழே விழுந்தார். இதனால் அவருக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். பிறகு அவர் மீண்டும் விளையாட வரவில்லை.

இப்போட்டியில் அஸ்வின், ஒரு ஒவர் வீசி இரண்டு ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்