றோயல் அணியை வீழ்த்தி தோல்வி அடையாத அணியாக சம்பியனானது இஸிபத்தன

ஹெவ்லொக் பார்க் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற மிகவும் பரபரப்பான டயலொக் பாடசாலைகள் றக்பி முதலாம் பிரிவு இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் றொயல் கல்லூரியை 21 (2 ட்ரைகள், ஒரு கொன்வேர்ஷன், 3 பெனல்டிகள்) – 15 (2 ட்ரைகள், ஒரு கொன்வேர்ஷன், ஒரு பெனல்டி) என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட இஸிபத்தன கல்லூரி தோல்வி அடையாத அணியாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

ஐந்து வருடங்ளின் பின்னர் டயலொக் பாடசாலைகள் லீக் கிண்ணத்தை வென்றெடுத்த இஸிபத்தன, இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான வருடாந்த மேஜர் மில்ரோய் பெர்னாண்டோ கிண்ணத்தையும் தனதாக்கிக்கொண்டது.

போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு அணிகளும் மாறிமாறி தவறுகளை இழைத்தவாறு இருந்தன.

எவ்வாறாயினும் 12ஆவது நிமிடத்தில் பசிந்து ஹேஷான் இடதுபுறத்தில் ட்ரை வைத்து றோயல் அணியை முன்னிலையில் இட்டார். அதற்கான மேலதிக புள்ளிகளை நபீல் யஹியா பெற்றுக்கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 16ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனல்டியையும இலக்கு தவறாமல் உதைத்த யஹியா றோயல் அணியை 10 – 0 என முன்னிலையில் இட்டார்.

அதன் பின்னர் றோயல் அணியினர் அடுத்தடுத்து விதிகளை மீறி எதிரணிக்கு பெனல்டிகளைக் கொடுத்தனர்.

20ஆவது நிமிடத்தில் இஸிபத்தனவுக்கு கிடைத்த பெனல்டியை தவறவிட்ட டி சில்வா, 23ஆவது நிமிடத்தில் 3 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார்.

4 நிமிடங்கள் கழித்து றோயல் வீரர் அப்துல்லா விதிகளுக்கு முரணாக ஆபத்தான முறையில் விளையாடிய குற்றத்திற்காக மத்தியஸ்தரின் சிவப்பு அட்டைக்கு இலக்காகி களத்தை வீட்டு வெளியேற்றப்பட்டதால் றோயல் அணி 14 வீரர்களுடன் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டது.

இடைவேளை நெருங்கிக்கொண்டிருந்தபோது எம். போத்தேஜு இரண்டாவது பெனல்டி புள்ளிகளை இஸிபத்தனவுக்கு பெற்றுக்கொடுத்தபோதிலும் றோயல் தொடர்ந்து 10 – 6 என முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் 42ஆவது நிமிடத்தில் மீண்டும் றோயல் அணியினரின் தவறு காரணமாக இஸிபத்தனவுக்கு வழங்கப்பட்ட மற்றொரு பெனல்டியை பொத்தேஜு முறையாக பயன்படுத்திக்கொண்டார். (இஸிபத்தன 9 – றோயல் 10)

அதன் பின்னர் இரண்டு அணியினரும் மேலும் புள்ளிகளைப் பெறுவதற்கு கடுமையாக முயற்சித்தனர்.

அதேவேளை விதிகளை மீறும் வகையில் விளையாடிய ஹிக்கொட (இஸிபத்தன), ஜயவீர (றோயல்) ஆகிய இருவரும் அடுத்தடுத்து மஞ்சள் அட்டைக்கு இலக்காகி வெளியேறினர். இந்நிலையில் றோயல் 13 வீரர்களுடனும் இஸிபத்தன 14 வீரர்களுடனும் விளையாட வேண்டி வந்தது.

இந் நிலையில் 50ஆவது நிமிடத்தில் இஸிபத்தனவுக்கு புள்ளிகள் பெற மற்றொரு வாய்ப்பு கிடைத்தபோதிலும் அவசரமாக எடுத்த ஷோர்ட் டெப் காரணமாக அந்த வாய்ப்பை தவறவிட்டது.

5 நிமிடங்கள் கழித்து பொத்தேஜு உதைத்த பெனல்டி இடது கம்பத்தில் பட்டு தவறியதால் இஸிபத்தன பெரும் ஏமாற்றம் அடைந்தது.

ஆனால், 60ஆவது நிமிடத்தில் நவீன் கனிஷ்க ட்ரை வைத்து இஸிபத்தனவை முதல் தடவையாக முன்னிலையில் இட்டார். எனினும் இரசிகர்கள் சிலர் அரங்கிற்குள் நுழைந்ததால் சில நிமிடங்களுக்கு ஆட்டம் தடைப்பட்டது.

ஆட்டம் தொடர்ந்தபோது பொத்தேஜு மேலதிகப் புள்ளகளைப் பெற்றுக்கொடுக்க இஸிபத்தன 16 – 10 என முன்னிலை அடைந்தது.

இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு இஸிபத்தன வீரர் மஞ்சள் அட்டைக்கு இலக்காக இரண்டு அணிகளும் தலா 13 வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

சற்று நேரத்தில் தனுஜ சமரரட்ன ட்ரை வைத்து றோயலுக்கு நம்பிக்கை ஊட்டினார். ஆனால், யஹியா தீர்மானமிக்க கொன்வேர்ஷனைத் தவறவிட இஸிபத்தன ஒரு புள்ளி வித்தியாசத்தில் (16 – 15) முன்னிலையில் இருந்தது.

போட்டி முழு நேரத்தை நெருங்க ஓரிரு நிமிடங்கள் இருந்தபோது மிகவும் சாமர்த்தியமாகவும் வேகமாகவும் செயற்பட்ட பிரவீன் ஸ்டீவன் ஜெயகாந்த் சுமார் 10 மீற்றர் தூரம் பந்துடன் ஓடி வைத்த ட்ரை இஸிபத்தன சம்பியனாவதை உறுதி செய்தது. கொன்வேர்ஷனை பொத்தேஜு தவறவிட்டபோதிலும் இஸிபத்தன 21 – 15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டயலொக் மற்றும் மேஜர் மில்ரோய் பெர்னாண்டோ ஆகிய இரண்டு கிண்ணங்களையும் சுவீகரித்தது.

பாடசலைகள் றக்பி போட்டிக்கு அனுசரணை வழங்கிய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் சார்பாக பிரதம அதிதியாக கலந்துகொண்ட குழுமத்தின் சந்தைப்படுத்தல், குறியீடு மற்றும் ஊடகப் பிரிவின் சிரேஷ்ட பொது முகாமையாளர் ஹர்ஷா சமரக்கோன் வெற்றிக்கிண்ணதை இஸிபத்தன அணித் தலைவர் தஹாம் விக்ரமஆராச்சியிடம் வழங்கினார்.

ஆசிரியர்