March 31, 2023 6:50 am

போர்டர் – காவஸ்கர் தொடரை வென்ற இந்தியா உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதியில் ஆஸி.யை மீண்டும் சந்திக்கிறது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் நடைபெற்ற 4ஆவதும் கடைசியமான டெஸ்ட் போட்டி வேற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

எனினும் இந்தத் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இந்தியாவும் 3ஆவது போட்டியில் அவுஸ்திரேலியாவும் ஈட்டிய வெற்றிகளின் அடிப்படையில் தொடரை 2 – 1 என்ற ஆட்டக் கணக்கில் தனதாக்கிய இந்தியா, போர்டர் – காவஸ்கர் கிண்ணத்தை தக்கவைத்துக்கொண்டது.

போர்டர் – காவஸ்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 4ஆவது தொடர்ச்சியான தடவையாக 2 – 1 என்ற ஒரே ஆட்டக் கணக்கில் முடிவடைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

இந்த இரண்டு அணிகளும் லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் ஜூன் 7ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மீண்டும் சந்திக்கவுள்ளன.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இந்தியாவுக்கு இந்தத் தொடரில் 3 வெற்றிகள் தேவைப்பட்டது. ஆனால், இலங்கைக்கு எதிரான கிறைஸ்ட்சேர்ச் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து 2 விக்கெட்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது இந்தியாவுக்கு இனிமை தரும் செய்தியாக அமைந்தது.

இந்தியாவை விட 88 ஓட்டங்கள் பின்னிலையில்  4ஆவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த அவுஸ்திரேலியா, தேநீர் இடைவேளைக்குப் பின்னர் மேலும் 11 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அப்போது அவுஸ்திரேலியா தனது 2ஆவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்டது. ஆனால், இந்தியா 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடமலே பரஸ்பர புரிந்துணர்வுடன்  ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ட்ரவிஸ் ஹெட் 90 ஓட்டங்ளைப் பெற்றதுடன் மானுஸ் லபுஸ்சான் 63 ஓட்டங்களுடனும் ஸ்டீவன் ஸ்மித் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் 3 போட்டிகளும் 3 நாட்களுக்குள் முடிவுகளைத் தந்த நிலையில் 5 நாட்களும் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 22 விக்கெட்கள் மாத்திரமே வீழ்த்தப்பட்டதுடன் 1226 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன.

கடைசிப் போட்டியில் 4 சதங்கள் குவிக்கப்பட்டதுடன் 2 அரைச் சதங்கள் பெறப்பட்டன. பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் மாத்திரமே திறமையாக பந்துவீசி 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இந்தூர் ஆடுகளும் துடுப்பாட்டத்திற்கு உகந்ததல்ல என முத்திரை குத்திய ஐசிசி, அஹமதாபாத் ஆடுகளும் குறித்து ஏதேனும் கருத்து வெளியிடுமா அல்லது மௌனம் சாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

எண்ணிக்கை சுருக்கம்

அவுஸ்திரேலியா முதல் இன்: 480 (உஸ்மான் கவாஜா 180, கெமரன் க்றீன் 114, டொட் மேர்ஃபி 41, ஸ்டீவன் ஸ்மித் 38, ரவிச்சந்திரன் அஷ்வின் 91 – 6 விக்.)

இந்தியா 1ஆவது இன்: 571 (விராத் கோஹ்லி 186, ஷுப்மான் கில் 128, அக்சார் பட்டேல் 79, ஸ்ரீகர் பரத் 44, சேத்தேஷ்வர் புஜாரா 42, டொட் மேர்ஃபி 113 – 3 விக்., நெதன் லயன் 151 – 3 விக்.)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்: 175 – 2 விக். டிக்ளயார்ட் (ட்ரவிஸ் ஹெட் 90, மானுஸ் லபுஸ்சான் 63 ஆ.இ., அக்சார் பட்டேல் 36 – 1 விக்.)

ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி.

இணை தொடர் நாயகர்கள்: ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்த்ர ஜடேஜா.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்