Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் | விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 25

DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் | விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 25

2 minutes read

கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை பாடசாலைகள் கரப்பந்தாட்ட சங்கம் ஆகியன இவ் வருடம் நடத்தும் 21ஆவது DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரபந்தாட்ட சுற்றுப் போட்டியில் வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்கள் உட்பட இலங்கை முழுவதிலும் இருந்து 5000க்கும் மேற்பட்ட பாடசாலைகள் பங்குபற்றவுள்ளன.

கொவிட் – 19 தொற்றுநோய், எழுச்சிப் போராட்டம் ஆகியன காரணமாக 2 வருடங்கள் நடத்தப்படாமலிருந்த இப் போட்டியை இந்த வருடம் பிரமாண்டமான வகையில் நடத்த போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

இந்த சுற்றுப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் பாடசாலைகள் தங்களது விண்ணப்பங்களை ஏப்ரல் 25ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

விண்ணப்பப் படிவங்களை நாடு முழுவதும் உள்ள DSI காட்சிகூட பிரதிநிதிகள், 25 மாவட்டங்களின் இணைப்பாளர்கள், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் (011-2669344), இலங்கை பாடசாலைகள் கரப்பந்தாட்ட சங்கம் (சமிந்த 077 3329702) ஆகியோரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவங்களை asnalaka@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு (ஏ.எஸ். நாலக்க, பொதுச் செயலாளர், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம்) அனுப்பிவைக்கலாம். விண்ணப்ப முடிவு திகதி 2023 ஏப்ரல் 25ஆம் திகதியாகும்.

கடந்த காலங்களில் வலய மட்டம், மாவட்ட மட்டம் மற்றும் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்டுவந்த இந்த சுற்றுப் போட்டியில் மேலும் போட்டித்தன்மையை ஏற்படுத்தும் வகையில் மாகாண மட்ட சுற்று இணைக்கப்பட்டுள்ளதாக ஹோட்டல் நிப்பொனில் செவ்வாய்க்கிழமை (28) மாலை நடைபெற்ற இப் போட்டி தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பணிப்பாளர் உபாலி அமரதுங்க தெரிவித்தார்.

‘1999இல் 198 பாடசாலை அணிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி தற்போது நாடளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்றுள்ளது. கடைசியாக நடத்தப்பட்ட சுற்றுப் போட்டியில் 3,000 பாடசாலை அணிகள் பங்குபற்றின. இந்த வருடம் அந்த எண்ணிக்கை 5000ஐக் கடக்கும் என நம்புகிறேன்’ என இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் காஞ்சன ஜயரட்ன குறிப்பிட்டார்.

இந்த வருடப் போட்டிகளில் வட பகுதியிலிருந்தும் மலையகத்திலிருந்தும் பெருமளவிலான பாடசாலைகள் பங்குபற்றும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.

‘சிறிய அளவில் ஆரம்பித்து தற்போது நூற்றுக்கணக்கான பாடசாலைகள் பங்குபற்றும் இந்த சுற்றுப் போட்டிக்கு 21வருடங்களாக அனசரணை வழங்க கிடைத்ததையிட்டு பெருமை அடைகிறோம். தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தை மேம்படுத்தி மேலும் பிரபல்யம் அடையச் செய்வதற்கு முக்கிய பங்காற்றுவோம்.

அத்துடன் எமது அனுசரணை இன்னும் பல்லாண்டுகளுக்கு தொடரும்’ என டி.எஸ்.ஐ. செம்சன் குறூப் பிறைவேட் லிமிட்டெட் முகாமைத்துவப் பணிப்பாளர் துசித்த ராஜபக்ச கூறினார்.

13, 15, 17, 19 ஆகிய வயதுகளுக்கு உட்பட்ட நான்கு பிரிவுகளில் சிறுவர், சிறுமியர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும்.

மாவட்ட மட்டப் போட்டிகள் மே 13ஆம் திகதி ஆரம்பமாகி 20ஆம் திகதி நிறைவடையும். ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் மாகாண மட்டப் போட்டிகளில் பங்குபற்ற தகுதிபெறும்.

மாகாண மட்டப் போட்டிகள் ஜூலை 1, 2, 8, 9, 15ஆம் திகதிகளில் நடத்தப்படும். மாகாண மட்டப் போட்டிகள் நிறைவில் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் தேசிய மட்ட இறுதிச் சுற்றில் பங்குபற்றும்.

தேசிய மட்ட இறுதிச் சுற்று ஜூலை 21, 22, 23, 24ஆம் திகதிகளில் நடத்தப்பட்டு இறுதிப் போட்டிகள் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஆகஸ்ட் 19ஆம், 20ஆம் திகதிகளில் நடத்தப்படும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More