Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ஜெனீவாவில் புதுப்பிக்கப்பட்ட விளைவுகளை அறுவடை செய்யும் காலம் அருகில்!

ஜெனீவாவில் புதுப்பிக்கப்பட்ட விளைவுகளை அறுவடை செய்யும் காலம் அருகில்!

6 minutes read

ராஜபக்ஷக்களின் ஆட்சியை ஒரு தென்னிலங்கை விமர்சகர் மெரிடோகிரசி (Meritocrazy) என்று அழைப்பார். கொழும்பு டெலிகிராப் இணையத் தளத்தில் எழுதிய ஒரு கட்டுரையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

மெரிட்டோகிரசி என்பது ‘மெரிட்’ அதாவது தகமை அடிப்படையில் அல்லது தகுதி அடிப்படையில் ஒருவர் ஆட்சியைப் பிடிப்பது. தகுதி என்றால் என்ன? யுத்தத்தை வென்றதால் கிடைத்த தகுதிதான். அதுதான் யுத்த வெற்றி வாதம். அது சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் 2009இற்குப் பின்னரான புதுப்பிக்கப்பட்ட வடிவம். யுத்த வெற்றிதான் ராஜபக்ஷக்களின் அரசியல் முதலீடு. அதை வைத்தே கோட்டாபய ஜனாதிபதியாக வந்தார்.

2018 ஈஸ்டர் குண்டுவெடிப்பு அவர்களுக்கு வேறு ஒரு தகுதியைப் பெற்றுக்கொடுத்தது. என்னவெனில் அதுபோன்ற குண்டுவெடிப்புக்களைத் தடுப்பதற்கு யுத்தத்தை வென்ற இரும்பு மனிதர்கள் தேவை என்ற ஒரு கூட்டு உணர்வை கூட்டு அபிப்பிராயத்தை அது சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

எனவே, ஒரு இரும்பு மனிதரை சிங்கள மக்கள் ஜனாதிபதியாக தெரிந்தெடுத்தார்கள். அதாவது, யுத்த வெற்றி வாதம் 2018 ஈஸ்டர் குண்டு வெடிப்போடு தன்னை 2018, 2019 இற்கு உரியதாக புதுப்பித்துக் கொண்டது.

அதன்பின்னர் கொவிட்-19 அதுவும் ஓர் உலகளாவிய அனர்த்தம். அதை வெற்றி கொள்வதற்கு அதிகாரங்களைத் தன்வசம் குவித்து வைத்திருக்கும் ஓர் இரும்பு மனிதர் தேவை என்று சிங்கள மக்களில் பெரும்பகுதியினர் நம்பினார்கள். எனவே, மறுபடியும் ராஜபக்ஷக்களுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அள்ளிக் கொடுத்தார்கள்.

யுத்த வெற்றி வாதம் கொவிட்-19இன் பெயரால் தன்னை 2020 இற்கு புதுப்பித்துக் கொண்டது. இவ்வாறு யுத்தம், குண்டுவெடிப்பு, பெரும் தொற்று நோய் போன்றவற்றை  வெற்றி கொண்டதன் மூலம் தமது தகைமையை நிரூபித்து அதன்மூலம் ஓர் அரசனுக்கு நிகரான அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்கும் விதத்தில் 20ஆவது திருத்தத்தையும் அவர்கள் நிறைவேற்றிவிட்டார்கள்.

ஆனால், இவ்வாறு தொடர்ச்சியாக தாம் பெற்ற வெற்றிகளின் மீது அவர்கள் கட்டியெழுப்பிய அரசாங்கம் இப்பொழுது சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. எவையெல்லாம் அவர்களுக்கு முதலீடுகள் ஆகியனவோ அவையெல்லாம் இப்பொழுது பூமராங் ஆக திரும்பி வரத் தொடங்கிவிட்டன.

கொவிட்-19 இரண்டாவது தொற்றலை ப்ரன்டிக்ஸ் தொழிற்சாலையில் தொடங்கியபோது அதைத் தொடர்ந்து எல்லா ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களையும் அரசாங்கம் தீவிரமாக கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தொடங்கியது.

இதன் விளைவாக ஏழைத் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள். தொற்றாளர் என்று சந்தேகிக்கப்பட்ட ஏழைத் தொழிலாளிகள் மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் அதாவது, பத்து நிமிடத்துக்குள் வீட்டை காலி செய்துகொண்டு தனிமைப்படுத்தல் நிலையத்துக்குச் செல்லுமாறு கட்டளையிடப்பட்டார்கள்.

அரசாங்கம்  நோய்த் தொற்று சந்தேகநபர்களைக் குற்றவாளிகள் போல கையாளத் தொடங்கியது. இதுதொடர்பாக அந்த ஏழை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் கருத்துக்களைத் திரட்டி மரிசா டீ சில்வா என்ற மனித உரிமை செயற்பாட்டாளர் கிரவுண்ட் வியூஸ் இணையத் தளத்தில் ஆங்கிலத்திலும் மாற்றம் இணையத் தளத்தில் தமிழிலும் ஒரு செய்திக் கட்டுரையை பிரசுரித்திருந்தார்.

அதில், பாதிக்கப்பட்ட ஏழை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் இந்த அரசாங்கத்தைப் பற்றியும் படைத்தரப்பு பற்றியும் கூறும் தகவல்கள் தொகுக்கப்பட்டிருந்தன. எந்தப் படைத் தரப்பின் வெற்றியைக் குறித்து அவர்கள் கிரிபத் சமைத்து கொண்டாடினார்களோ அதே படைத்தரப்பு தங்களை எவ்வளவு இழிவாகவும் கேவலமாகவும்  நடத்தியது என்று அவர்கள் அந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்கள். இந்த அரசாங்கத்தின் வெற்றிக்காக அவர்கள் பாடுபட்டார்கள், வாக்களித்தார்கள்.  இப்பொழுது அதே அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பிவிட்டார்கள்.

அரசாங்கம் நோயாளர்களைக் குற்றவாளிகள் போல நடத்துகிறது என்ற அபிப்பிராயம் பரவலாக உண்டு. தென்னிலங்கையில் ஒரு நோய் தொற்றுச் சந்தேகநபர் தப்பி ஓடிவிட்டார். அவரை அரசு அலுவலர்களும் காவல்துறையும் கையாண்ட விதம் சமூக வலைத்தளங்களில் காணொளியாக பரவலாகப் பகிரப்பட்டது. அது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

நோய் முறியடிப்பு நடவடிக்கைகளில் ஒரு படைத் தரப்பை இறக்கினால் அதுவும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அதிக பலம் பெற்றிருக்கும் ஒரு படைத்தரப்பை இறக்கினால் அது நோயாளிகளை பயங்கரவாதிகள் போலவே நடத்தும் என்று பல மாதங்களுக்கு முன்னரே ஒரு சிங்கள ஊடகவியலாளர் ருவிற்றரில் பதிவிட்டிருந்தார். அதுதான் இப்பொழுது நாட்டில் நடக்கிறது.

கொவிட்-19 தொற்றிய புதிதில் அது ஒரு புது ஆபத்து என்பதனால்  நோயாளிகளையும் நோய் தொற்று சந்தேகநபர்களையும் அரசாங்கம் கடுமையாகக் கையாண்ட பொழுது ஏனையவர்களுக்கு அது ஒரு பாரதூரமான பிரச்சினையாகத் தெரியவில்லை. நோய்க் காவிகளை அவ்வாறு கடுமையாகக் கையாண்டால்தான் ஏனையவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்று ஒரு கூட்டு அபிப்பிராயம் இருந்தது. முழுச் சமூகமும் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டது.

இக்கூட்டுத் தற்காப்பு உணர்வை, அச்சத்தை அரசாங்கமும் அதிகாரிகளும் முழுமையாகப் பயன்படுத்தினார்கள். அந்தக் கூட்டுத் தற்காப்பு உணர்வானது இரும்பு மனிதர்கள் தேவை என்ற ஒரு தற்காப்பு நிலைப்பட்ட கூட்டு முடிவாக மாறியது. அதை அரசாங்கம் வெற்றிகரமாகக் கையாண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிட்டவாக வெற்றிகளைப் பெற்றது.

முதலாவது, நோய்த் தொற்றலையின் போது தம்மைத் தற்காத்துக்கொண்ட பெரும்பாலானவர்கள் இரண்டாவது நோய்த் தொற்றலையின்போது அதைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசாங்கத்துக்கு எதிராக மாறத் தொடங்கி விட்டார்கள். இரும்பு மனிதர்களால் வைரஸைக் கட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கை நொறுங்கத் தொடங்கிவிட்டது.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல முதலாவது தொற்றலையின் போது சொன்னார், புலிகளைத் தோற்கடித்த எமக்கு வைரஸ் ஒரு பிரச்சினை அல்ல என்று. ஆனால், புலிகளும் வைரஸும் ஒன்றல்ல என்பதனை கடந்த சில மாதங்கள் நிரூபித்திருக்கின்றன.

எனவே, எந்த வைரஸை வெற்றிகொண்டதாக அரசாங்கம் மார்தட்டிக் கொண்டதோ அது முழுமையான வெற்றி அல்ல என்பதை கடந்த சில மாதங்கள் நிரூபித்து விட்டன. இது முதலாவது.

நோய்த்தொற்று சிறைச் சாலைகளுக்குள் பரவியபொழுது மகர சிறைச்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிங்களக் கைதிகள் கொல்லப்பட்டார்கள். அங்கேயும் பூமராங் அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பியது.

சிறைச்சாலை வாசலில் பொலிசாரின் காலடிகளில் விழுந்து கதறும் ஏழைச் சிங்களத் தாய்மாரின் கண்ணீர் அரசாங்கத்தின் வைரசுக்கு எதிரான வெற்றிகள் யாவும் தோல்விகளாக மாறுவதை காட்டும் ஒரு குறியீடு எனலாமா? இது இரண்டாவது.

மூன்றாவது, யுத்த வெற்றி வாதத்தை முதலீடாகக் கொண்டு ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பின்னர் தனிச்சிங்கள வாக்குகளால் அரசை அமைப்போம் என்று திட்டமிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய ராஜபக்ஷக்கள் தமிழ் மக்களை மட்டுமல்லாது முஸ்லிம் மக்களையும் முழுமையாக தற்காப்பு நிலைக்குத் தள்ளினார்கள்.

கடந்த ஓராண்டு காலமாக இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. ஆனால், இப்போதிருக்கும் அரசாங்கத்தின் நீதி அமைச்சர் ஒரு முஸ்லிம்தான். அவர் கடந்த வாரம் கூறினார், “இப்படியே நிலைமை போனால் முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதத்தை நாட வேண்டிவரும்” என்ற தொனிப்பட. ஒரு நீதியமைச்சர் அவ்வாறு கூற வேண்டி வந்திருக்கிறது.

முஸ்லிம்களின் பண்பாட்டு உரிமைகளில் ஒன்றாகிய இறந்தவர்களை அடக்கம் செய்யும் உரிமையை ஏற்றுக் கொள்ளாத ஒரு அரசாங்கத்தின் நீதி அமைச்சர் அவர். இந்த அரசாங்கத்தின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் பெருமளவுக்கு சிங்கள பௌத்தர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலானவை.

கொவிட்-19 நோயால் இறந்தவர்களின் உடல்களை உலகின் மிகப்பெரிய ஜனநாயக  நாடுகளில்கூட எரிக்காமல் புதைக்கிறார்கள். உலகில் இவ்வாறு எரிக்கப்படும் தொகையை விடவும் புதைக்கப்படும்  தொகையே அதிகம். ஆனால், இலங்கை அரசாங்கமோ முஸ்லிம்களை அவ்வாறு புதைக்க முடியாது என்று கூறுகிறது.

ஒரு வைரஸ் தொற்றுக்காலத்தில் வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் ஒரு சிறிய தேசிய இனத்துக்கு எதிராக திருப்பியிருக்கிறது. இதனால், முஸ்லிம் மக்கள் முழுக்கமுழுக்க தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதன் விளைவாகவே தங்களை மோசமாக நடத்தும் ஓர் அரசாங்கத்துக்கு மேலும் அதிகாரத்தைக் குவிக்கும் 20ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆதரித்து வாக்களித்தார்கள்.

அது ஒரு மோசமான சரணாகதி. அப்படி சரணடைந்தது அரசாங்கத்தின் நன்மதிப்பைப் பெறலாமா, நம்பிக்கையை வென்றெடுக்கலாமா என்று அவர்கள் முட்டாள்தனமாக சிந்தித்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. முடிவில் பிறந்து 20 நாட்களேயான ஒரு குழந்தையைப் புதைக்கக் கூடாது என்று கூறி அரசாங்கம் இம்மாதத் தொடக்கத்தில் எரித்தபோது முஸ்லிம்களின் கூட்டு உணர்வு அதற்கு எதிராகத் திரும்பியது.

அங்கேயும் முதலில் எதிர்ப்பைக் காட்டியது சிங்கள முற்போக்கு சக்திகள்தான். கனத்தை மயானத்தின் மதிலில் அவர்கள் கபன் துணியைக் கட்டினார்கள். இவ்வாறு கபன் துணியைக் கட்டும் போராட்டம் மிக வேகமாக நாடு முழுவதும் விரிவடைந்தது. உடல்களைக் கட்டாயமாக தகனம் செய்வதற்கு எதிராக முதலில் எதிர்ப்புக் காட்டியதும் சிலாபத்தை சேர்ந்த ஒரு சிங்கள கத்தோலிக்கத் தாய்தான். சவஅடக்க உரிமைக்காக போராடலாம் என்ற துணிச்சலான முதலாவது முன்னுதாரணம் அந்தத் தாய்தான்.

அதைத்தொடர்ந்து, முஸ்லிம்கள் கபன் துணிகளை சிறு முடிச்சுகளாக கட்டத் தொடங்கினார்கள். அந்தச் சிறிய வெள்ளைத் துண்டுகளை யாரோ இரவுகளில் அகற்றி வருகிறார்கள். ஆனாலும், கொவிட்-19 சூழலுக்குள் மிகவும் படைப்புத் திறனோடு சிந்திக்கப்பட்ட ஒரு போராட்டம் அது.

தென்னாசியப் பிராந்தியத்தில் ஏற்கனவே இந்திய விவசாயிகள் வேளாண் சட்ட வரைபுக்கு எதிராக டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமது சவஅடக்க உரிமைகளுக்காக கபன் துணிப் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். கபன் துணிப் போராட்டம் எனப்படுவது அரசாங்கத்தின் வெற்றிகள் பூமராங்காக திரும்பத் தொடங்கியிருப்பதன் குறியீடு எனலாமா?

மேற்கண்டவற்றை தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. யுத்த வெற்றிகளை அரசியல் வெற்றிகளாக மாற்றத் தயாரற்ற ராஜபக்ஷக்கள் அதன் விளைவுகளை ஜெனிவாவில் அறுவடை செய்யத் தொடங்கினார்கள். இனிமேலும் வரும் மார்ச் மாதம் அவர்கள் புதுப்பிக்கப்பட்ட விளைவுகளை அறுவடை செய்ய வேண்டியிருக்கும்.

அதேபோல வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்களால் முழுமையாக வெற்றிபெற முடியவில்லை என்பது தெரியத் தொடங்கிவிட்டது. ராஜபக்ஷக்களின் பலம் யுத்த வெற்றிதான். அதேசமயம் அவர்கள் அந்த வெற்றியின் கைதிகளும்கூட. அந்த வெற்றிகளைத் தாண்டி அவர்களால் சிந்திக்க முடியாது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கான தனிச் சிங்கள வாக்குகளுக்காக அவர்கள் உசுப்பிவிட்ட பூதத்தை அடக்குவது கடினம். ஒருபுறம் கொவிட்-19 சூழலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் பரவலான அதிருப்தி.

இரண்டாவதாக கொவிட்-19 சூழலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள். மூன்றாவதாக சீனசார்பு வெளியுறவுக் கொள்கையால் ஏற்பட்டிருக்கும் வெளியுறவு நெருக்கடிகள்.

இவை எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு இந்த ஆண்டைக் கடப்பது சவால் மிகுந்ததாகவே இருக்கும் என்பதைத்தான் மனோ கணேசன் “2021ஆம் ஆண்டு என்பது இந்த அரசாங்கத்தின் அழிவின் ஆரம்பம்” என்று கூறினாரா?

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More