Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை பேராசிரியர் அழகையா துரைராஜா எனும் அணையாத தீபம்!

பேராசிரியர் அழகையா துரைராஜா எனும் அணையாத தீபம்!

7 minutes read

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” -திருக்குறள்

என்ற வள்ளுவரின் குறளுக்கு இலக்கணமாய் வாழ்ந்து ‘துரை’ என்று பிரபலமாக அழைக்கப்பட்டு மண்ணை நேசித்த மாமனிதர் என்ற கௌரவ பெருமையை பெற்றுக்கொண்ட தலைசிறந்த பூகற்ப தொழில்நுட்ப பொறியியலாளர் கல்விமான் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் 1994 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி கொழும்பில் காலமாகி இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவேறிவிட்டது.

இவரின் மறைவால் இலங்கை நாடு ஒரு அதிசிறந்த உலகப்புகழ்பெற்ற புவிசார் தொழில்நுட்ப பொறியியலாளரையும் (Geotechnical Engineer) தலைசிறந்த கல்விமானையும் இழந்துவிட்டது. யாழ் பல்கலைக்கழகம் அதன் முன்னாள் உபவேந்தரை இழந்துவிட்டது. இலங்கை பொறியியல் நிறுவனம் அதன் முன்னாள் தலைவரை பறிகொடுத்துவிட்டது. பூகற்பவியல் தொழில்நுட்ப இயக்கம் அதன் தலைவரை இழந்து விட்டது. மாணவர்கள் ஒரு ஆதியுயர் நல்லாசானை இறந்துவிட்டனர். இவ்வுலக மக்களோ ஒரு நன்நண்பரை இழந்து விட்டனர். இவ்வுலகம் ஒரு முன்னோடி விஞ்ஞானியை இழந்து விட்டது.

இவர், 1934 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வடமராட்சியிலுள்ள உடுப்பிட்டி, இமையாணன் என்னும் ஊரில் வேலுப்பிள்ளை அழகையா அவர்களுக்கும் செல்லம்மா அவர்களுக்கும் செல்லப் பிள்ளையாய் பிறந்து, உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, ஹாட்லிக் கல்லூரி ஆகிய உயர் கல்லூரிகளில் தனது ஆரம்ப உயர்கல்வியை முடித்துக்கொண்டார். இவ்விரு கல்லூரிகளினதும் பழைய மாணவர் சங்க தலைவராக இறுதிவரை இருந்ததோடு அவற்றின் வளர்ச்சிப் பணிகளில் முன்னின்று உழைத்தார்.

1953 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் மாணவராக தெரிவுசெய்யப்பட்டதோடு அல்லாமல் பல்கலைக்கழகப் பிரவேச பரீட்சையிலும் எல்லாத்துறைக்குமான மாணவர்களில் மிக அதிக புள்ளியை பெற்றவரும் இவரேயாவார். 1953 – 1957 காலப்பகுதியில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீட பட்டதாரியாகப் பயின்ற இவர் 1957ஆம் ஆண்டு குடிசார் பொறியியல் பரீட்சையில் முதலாம்தர சிறப்புத் தேர்ச்சியுடன் சித்தியடைந்தார். இவரின் கல்வி சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை. பட்டம் பெற்ற இவர், அதே பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியல் துறையில் ஒரு போதனாசிரியராக 1958 மார்ச் வரை சிறிது காலம் கடமையாற்றினார். பின் நான்கு மாதங்கள் இலங்கை பொது வேலைத் திணைக்களத்தில் கனிஷ்ட உதவி பொறியாளராக சேர்ந்துகொண்டார்.

இவரது பிரத்தியேகமான திறமைகளை இனங்கண்டு கொண்ட கேம்பிரிஜ் பல்கலைக்கழக மண்பொறியியல் துறை பேராசிரியர் கே. எச். ரொஸ்கோ இவரை தனது ஆய்வு மாணவராக இலங்கை பல்கலைக்கழகம் வழங்கிய புலமைப்பரிசின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துக் கொண்டார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ரொஸ்கோவுடன் மண்ணின் தன்மைகள் பற்றி 1958 டிசம்பரில் இருந்து 1961 டிசம்பர் வரை மேற்கொண்ட ஆய்வுகள் மண்வள நுணுக்கப்பாட்டுத்துறையில் அவரின் வல்லமையை காட்டியதுடன், ‘கேம்பிரிஜ்’ பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்டத்தையும் சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்தது.

அவரால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட எளிமையான ஒரு மாதிரி உபகரணம் (CAM CLAY MODEL) பல புதிய எதிர்கால மண்பற்றிய முன்னேற்றகரமான ஆராட்சிகளை, கற்கைகளை மேற்கொள்ள வழிவகுத்துக் கொடுத்ததுமன்றி, புவிசார் தொழில்நுட்ப பொறியியல் உபகரண அபிவிருத்தி வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாகவும் விளங்கியது. திரு துரைராஜா அவர்கள் 1962 இல் மிகக்குறுகிய காலம் லண்டன் “டெரேசேச் லிமிட்டெட்” நிறுவனத்தின் மண் பொறியியலாளராக கடமை புரிந்து அதன்பின் கனடா ‘வோட்டலூ’ பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியராக ஒரு வருட காலத்தைச் செலவு செய்தார். பின் இலங்கை திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் உதவி விரிவுரையாளர் பதவியில் தன்னை இணைத்துக்கொண்டு, பின்னர் 1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் குடிசார் பொறியிற்றுறை பேராசிரியர் பதவியை ஏற்றார். பின் 1975-1977 ஆண்டு காலப்பகுதியில் பேராதனை பொறியியற்பீட பீடாதிபதியாக கடமையாற்றினார். பின்னர் மற்றொரு ஆண்டை அக்டோபர் 1977 முதல் டிசம்பர் 1978 வரை கனடா ‘பிரிட்டிஷ் கொலம்பியா’ பல்கலைக்கழகத்தில் பகுதிநேர பேராசிரியராக பணியாற்றினார். இதே காலப்பகுதியில் அதாவது 1977 இல் இருந்து இலங்கை தேசிய விஞ்ஞான கழகத்தின் அங்கத்தவராகவும், 1979 ஆம் ஆண்டு இலங்கை பொறியியல் நிறுவனத்தின் அங்கத்தவராகவும் இருந்துள்ளார். 1983 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து லண்டன் குடிசார் பொறியியல் நிறுவனத்தில் அங்கத்தவராகவும் இருந்த சிறப்பு இவருக்கு உண்டு.

1982-1985 காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடாதிபதியாக மீண்டும் பதவியேற்று ஏப்ரல் 1987 முதல் ஆகஸ்ட் 1988 வரை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடாதிபதியாக கடமை வகித்து, 1988 செப்டம்பரில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றினார். இதே காலப்பகுதியில் அதாவது 1986 ஒக்டோபர் முதல் 1989 செப்டம்பர் வரை இலங்கை பொறியியல் நிறுவனத்தின் உப தலைவராகவும் பின்னர் அந்நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். ஜனசவிய நம்பிக்கை நிதியம் தொழிலாளர் கல்வி குழுவின் அங்கத்தவராகவும் பணிபுரிந்துள்ளார்.

பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு 1994 மார்ச்சில் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக மீண்டும் சேர்ந்து கொண்டார். அவரது தொழில் திறமைகளையும் ஆய்வுச் சாதனைகளையும் கௌரவிக்கும் வகையில், அவர் மரணித்த பின்னர் கொழும்பு பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டத்தையும், திறந்த பல்கலைக்கழகம் விஞ்ஞான மேதை பட்டத்தையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

திரு. துரைராஜா அவர்கள் தமது கருத்துக்களை பொருத்தவரையில் ஸ்திரமாக தமது மாணவர், சகாக்களின் கருத்துக்களுடன் ஒன்றியமையக் கூடியதாக இருந்தார் நீதி நியாயம்களுக்காக என்றும் அவர் போராடினார்.

1970 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர்கள் பெறவேண்டிய தேவைகளுக்காக உறுதியுடன் போராடினார். 1980 களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் வேலை நிறுத்தம் நடைபெற்றபோது மாணவர்கள் அவருக்கு மட்டுமே செவர் சாய்த்தனார். வளாகத்திலும் அமைதி திரும்பியது. இவரின் இப்பணிகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்றுமே மறக்க முடியாது. ஒவ்வொரு வருடமும் 200 வறிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் துணைவேந்தர் நிதியம் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதுவரை உதவி பெற்றுள்ளனர். பெற்றோர் தயவுகுறைந்த மாணவர்களுக்கு உதவவும் இவர் பல ஏற்பாடுகளை செய்தார்.

1990 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட விவசாயத்துறை மாங்குளத்தில் நிறுவப்படவிருந்த பொறியியல் துறைக்கும் முல்லைத்தீவில் நிறுவப்படவிருந்த மீன்பிடித் துறைக்குமான பூர்வாங்க வேலைகள் அவரது முயற்சியையும் பரந்த நோக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன. யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் 1992 இல் உருவானதும் இவரின் சிந்தனையில்தான். அதன் ஸ்தாபக தலைவரும் இவரேயாவார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சைவசித்தாந்த துறையை ஆரம்பிப்பதற்குரிய அங்கீகாரத்தைப் பெற்று அதனை நிர்வகிக்கத் தேவையான நிதியை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது அயராத முயற்சியால் திரட்டிக் கொண்டார். மேலும், பல்கலைக்கழகத்தில் உள்வாரி மாணவர்களாக படிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெறாத மாணவர்களின் நலன் கருதி வெளிவாரி அலகினை உருவாக்கி பயன் பெறச்செய்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தன்னால் உருவாக்கப்பட்ட தொழில்சார் கல்வி நடைமுறைத் திட்டத்தை யாழ் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். பல்கலைக்கழகத்திலும் அதனைச் சூழவுள்ள சமூகத்திலும் உள்ளோரின் தொழில்சார் கல்வி நிகழ்வுகளில் பங்குபற்றி தேவையான தலைமைத்துவத்தைப் பெற்றதுடன் பல்கலைக்கழகம் சமுதாயத்தின் அங்கம் என்ற எண்ணக்கருவிற்கு உரமூட்டினார். அவர் விதைத்த விதைகளை முளைக்க வைப்பது நாம் அவருக்கு அளிக்கும் பெரிய பாராட்டாக அமையும்.

1980 இல் ஊற்று என்ற அமைப்பை உருவாக்கிய இவர், அதன் தலைவராக செயல்பட்டு தனது முயற்சியால் பல அபிவிருத்தி திட்டங்களை அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் உருவாக்கி கிராம மக்களை முன்னேறினார். யாழ் குடாநாட்டின் தரைக்கீழ் நீர் சேமிப்பை ஊக்குவிக்கும் முகமாக 200 குளங்களின் வண்டல் மண் அகற்றும் திட்டம் ‘நோராட்’ நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொண்டார். இதன் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி திட்ட நிதி உதவியோடு பின்தங்கிய கிராமங்களின் வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு, இந்நிறுவனமும் ‘கெயர்’ நிறுவனமும் இணைந்து அமுலாக்கிய உணவு உற்பத்தி திட்டத்தினையும், ‘போரூட்’ இன் உதவியுடன் காடு வளர்ப்பு திட்ட அறிக்கை தயாரிப்பு வேலைகளும் அவரின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டன. 1990 ஆம் ஆண்டின் பின் வடபகுதியின் தன்னிச்சை பொருளாதார வளங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கும் நிபுணர் குழுவிற்கு தலைமை தாங்கி அதனை வழிநடத்திச் செல்ல பல திட்டங்கள் இவரால் தயாரிக்கப்பட்டன.

பேராசிரியர் துரைராசாவை போன்ற கனவான்கள் தோன்றுவது அரிது. அவரின் பண்புகள் உதாரண பூர்வ அம்சங்கள், மனப்போக்குகள் எல்லாம் நினைவு கூறப்பட்டன. துரைராஜா எளிமையின் சின்னமாக வாழ்ந்த பெருமை அதிகாரம் இல்லாத மனிதர். மாணவர்களானாலும் சரி; நண்பர்களானாலும் சரி எந்நேரத்திலும் எவ்விடத்திலும் அவரை அணுகி தமது பிரச்சினைகளை எடுத்துக்கூறி அதற்கு அவர் மூலம் தீர்வொன்றை காணக்கூடிய பிறரை மதிக்கும் நற்குணமே அவருக்கு உயர்ச்சியைக் கொடுத்தது. தற்பெருமையும் அதிகாரமும் கொண்ட இவ்வுலகில், எளிமையான உடையணிந்து எளிமையாக வாழ்ந்த அவரின் தோற்றம் எவரையும் இலகுவில் வசீகரிக்கக்கூடியது. எந்நேரமும் மறுமலர்ச்சியுடனான அவரின் புன்னகை பகைவர்களை கூட நிராயுதபாணியாக்கும். கௌரவம் விருது என்பன அவரின் புன்னகையின் பின்னரேதான். ஆனால், அவை அவரின் பணிவுள்ளத்தை என்றுமே தீண்டியதில்லை. ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நல்லாசான் மட்டுமன்றி, அறிவு பெறும் மாணாக்கனும் அவரே என வர்ணிப்பதே பொருத்தம். தனது உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து எழும் அன்பு உணர்வு மேலீட்டால் அவர் தமது மாணாக்கர்கள் அனைவரையும் நேசித்தார். இதனால் அவரின் மாணவர்கள் அவரை தமக்கு அறிவூட்டும் தெய்வமாக மதித்து மரியாதை செலுத்தினர்.

கற்றறிந்த பலர் தங்கள் வாழ்விற்கும் வசதிக்குமாக, வெளிநாட்டைத் தேடிச்செல்லும் நெருக்கடியான காலகட்டத்தில் தமிழ் மண்ணையும் மக்களையும் நேசித்தார். தனிமனித சிறப்பம்சங்கள் அவரிடம் ஒருங்கே காணப்பட்டன. ஒரு தசாப்த மாணவர்களுக்கு அதிஉயர் ஆசிரியராக காட்சியளித்தார். புவிசார் தொழில்நுட்ப பொறியாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் வழிகாட்டியாக விளங்கினார். குறிப்பாக மண் பொறிமுறையில் (Solid Mechanics) முன்னோடி விஞ்ஞானியாக திகழ்ந்து உலகின் அதிசிறந்த விஞ்ஞானிகளுடன் இத்துறையில் பணியாற்றி, அவர்களுக்கு ஒப்பாரும் மிக்காரும் அற்றவராக காணப்பட்டார். இவரால் கண்டுபிடிக்கப்பட்டு தொகுத்தளிக்கப்பட்ட விதி ‘THURAI’S LAW’ என அழைக்கப்படலாயிற்று.

பேராசிரியராகவும், பீடாதிபதியாகவும் இருந்த காலத்தில் ஆய்வுப் பணிகளில் முனைப்புடன் செய்யப்பட்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் திறந்த பல்கலைக் கழகத்திலும் பட்டதாரி மாணவர்களுக்கு ஆய்வுப் பணிகளில் ஊக்கமளித்து அவர்கள் இவ்வுலகின் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளைத் தொடரும் வகையில் பெரும் ஆய்வாளர்களை உருவாக்கினார். தனது ஆய்வுக் கட்டுரைகளையும் உலகின் பெரும்பாலான பிரசுரங்களில் இடம்பெறச் செய்ததோடு மாணவர்களையும் அவ்வழியில் தூண்டிய பெருமையும் அவரையே சாரும்.

1988 ஆம் ஆண்டு செப்டம்பரில் திரு. துரைராஜா அவர்கள் தமது பிரதேச மக்களுக்கு சேவை செய்வதற்காக அழைக்கப்பட்டபோது தனக்குரிய குணத்துடன் தயக்கமும் காட்டாது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தலைமைத்துவத்தை மிகச் சிக்கலான சூழ்நிலையிலும் ஏற்றுச் செயற்பட்டார். போர் பிராந்தியத்தில் அமைந்த பல்கலைக்கழக நிர்வாகத்தை பொறுப்பேற்றமையால் ஏற்பட்ட உடல் உள பாதிப்புகள் அவரது உடல் நலத்தை பெரிதும் பாதித்திருந்தது. எவ்வாறெனில் ஒரு பல்கலைக்கழக உபவேந்தர், 58 வயதில், 30 கிலோ மீட்டர் தூரம் துவிச்சக்கரவண்டியில் பிரயாணம் செய்வதென்றால் அது சிக்கலானதே. இருந்தும், அவரோ தனது உடல்நலம் பாதிப்புற்ற உண்மையை ஒன்றும் ஏற்றுக்கொண்டதில்லை. அவரைச் சுற்றி இருந்த அனைத்தும் எரிந்து கொண்டிருந்தவேளையிலும், தன்னால் இயன்றவரை பல்கலைகழக நிர்வாகத்தை இயக்கியிருந்தார். சாதிக்க முடியாத சாதனையை ஏற்றுக்கொண்ட அதேவேளையில் யாழ் திறந்த பல்கலைக்கழகத்தின் குடிசார் பொறியியல் பேராசிரியர் கடமையையும் தொடர்ந்திருந்தார். இவரின் இச்சாதனைகள் வேறெந்த துணைவேந்தராலும் மிகவும் பாதுகாப்பான பிரதேசத்திலும் மேற்கொள்ள முடியாது.

திரு. துரைராஜா அவர்களுடைய பங்களிப்புகளும் சாதனைகளும் பலதரப்பட்டவை; எண்ணிடமுடியாதவை. அவரின் ஆடம்பரமற்ற, அடக்கமான, நகைச்சுவையுடன் கூடிய குணத்தால் அவற்றிற் பல மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதுடன் அவருடன் தொடர்புபடுத்த படாமலும் போய்விட்டன. குறிப்பாக எனது நண்பர் ஒருவர் என்னுடன் பகிர்ந்துகொண்ட விடயத்தை இங்கு குறிப்பிடலாம் என நினைக்கிறேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களில் ஒருவரான எனது நண்பர் ஒருவர் திரு துரைராஜா அவர்களை பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி என அறிந்து கொள்ளாது அவருடன் பலமுறை ஒரு சாதாரண பயணத்துணை நண்பராக கூடிக் கதைத்து வடமராட்சியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பலமுறை அவருடன் கூடிப்பயணம் செய்த சுவாரஷ்யமான சந்தர்ப்பங்களை மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.

பேராசிரியர் அவர்களின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக பொரல்ல, கொட்டாவ வீதி, ருகுணுகல மாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டபோதும், கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்ட போதும், மாணவர்கள், நண்பர்கள், அன்பர்கள், அபிமானிகள், ஆதரவாளர்கள் என ஆயிரமாயிரம் பேர் வந்து தமது அஞ்சலியை செலுத்தினர். அவரின் ஊரான உடுப்பிட்டியில் நடைபெற்ற இறுதிக்கிரியைகளிலும் இறுதி ஊர்வலத்திலும் பெருந்திரளான மக்கள் பங்குபற்றியமை, மக்களிடையே அவருக்கிருந்த மரியாதையை எடுத்துக் காட்டியது.

புன்முறுவல் பூத்த வராக எம்மை விட்டுச்சென்ற மிக அருமையாக கிடைக்கக்கூடிய சிறந்த ஒரு கனவானான தொழில்சார் மேதைக்கு; தலை சிறந்த பண்பு மகனுக்கு; அதியுயர்ந்த ஆத்மாவிற்கு நாம் அனைவரும் செய்யும் நன்றிக்கடன் யாதெனில், அவரின் செழுமையான நல்ல காரியங்களை எம்முடன் நிலைநிறுத்தி, அவர் வழியிலேயே நாமும் சென்று, அவர் விட்டுச்சென்ற பணிகளை நாம் தொடர்வோம் என உறுதி கூறி விடைபெறுவோமாக.

ஏற்றி வைத்த தீபம் ஒன்று எரிகின்றவேளை
காற்று மழை புயல் வந்து அணைத்தது ஏனோ?!

உடுவையூரான்!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More