கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா

இலண்டனில் இருந்து ஜோசப் நைட் அடிகளும் அவரது குழாமும் 1818 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூரில் தங்கள் கல்விபபணிகளைத் தொடங்கினர். ஆங்கில மிஷனரிமார்களுள் ஈழத்து யாழ்ப்பாணத்தில் முதல் பாதம் பதித்தவர் வண.ஜோசப் நைட் அடிகளார் ஆவார்.

அன்று விதைத்த விதையே இன்றைய சென் ஜோன்ஸ் கல்லூரியின் 200 வது வருடம் என்ற நீண்ட நெடிய உயர்ந்த வளர்ச்சிக்கு காரணமாய் அமைந்தது. பாரெங்கும் புகழ் பரப்பி, பல கிளைவிட்டு விருட்சமாய் வியாபித்திருக்கும் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி 200ஆவது ஆண்டினை தற்போது பூர்த்தி செய்கிறது.

இலங்கையின் கல்வி மறுமலர்ச்சியில் ஆங்கில மிஷனரிமார்களின் வருகை அக்காலத்தில் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக ஒழுக்க விழுமியங்கள், தொழில் நுட்ப அறிவு, ஆங்கிலக் கல்வி என்பன மேலோங்கிக் காணப்பட்டன.

இன்று யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி
உலகெங்கும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் வண்ணமாய், அக்கல்லூரி மாணவர்களின் திறமை போற்றப்படுகிறது. இக்கல்லூரியின் ஆரம்ப வரலாற்றை சற்று பின்நோக்கிப் பார்த்தால், இப்பாடசாலையின் பரிணாம வளர்ச்சியை அறியலாம்.

ஏழு மாணவருடன் முதல் பள்ளி:

1823 இல் தன் வீட்டிலேயே ஏழு மாணவர்களுடன் சிறந்ததொரு பள்ளியை அமைத்து அம் மாணவர்களுக்கான வாழ்வாங்கு வாழ கல்வியை ஆரம்பித்தார். 1824இல் பதின்மூன்று மாணவர்களையும் 1825இல் முப்பது மாணவர்களையும் கொண்டு இப்பள்ளி வளர்ச்சி பெற்றது.

இதன்பின் 1824 இல் ஜோசப் நைற் அவர்களிடமிருந்து வண வில்லியம் அட்லி (Rev.William Adley) பொறுப்பேற்றார். இவர் ஒரு திறமையுள்ள ஆங்கில அறிவும் தமிழ் அறிவும் நிறைந்தவராகவும் காணப்பட்டார். 1839 முதல் 1841 வரை D.W.Tailor என்பவர் வில்லியம் அட்லி அவர்களைத் தொடர்ந்து பொறுப்பேற்றார்.

1841 காலப்பகுதியில் பெண்கள் தங்கியிருந்து கற்பதற்காக தனியார் விடுதியாக நல்லூர் ஆங்கில செமினரி மாற்றம் நடந்தது. அவ்வாண்டிலேயே நல்லூர் ஆங்கில செமினரி சுண்டிக்குளிக்கு இடமாற்றம் பெற்று சுண்டிக்குளி செமினரி எனவும் பெயர் மாற்றம் பெற்றது.

புளியமர நிழலில் வகுப்புகள்:

ஆரம்ப நிலையில் வகுப்பறை வசதியின்மையால் ஓங்கி வளர்ந்த புளியமர நிழலிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டன. அக்காலத்தில் Rev.J.T.Johnstone அதிபராகப் பணியேற்றார். அவருடன் இணைந்து John Hensman அவர்கள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.
அவரைத் தொடர்ந்து Rev.Robert William அவர்கள் தலைமை ஆசிரியராகப் பொறுட்பேற்றார். ஆயினும் 1866 இல் கொடிய நோய் காரணமாக அவர் இயற்கை எய்தினார்.
அதன் பின் J.Evarts 1867 – 1878 வரை தலைமை ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார்.

ராபர்ட் வில்லியம்ஸ் நினைவு மண்டபம்:

1866 ஆம் ஆண்டில் நாட்டைப் பேரழிவிற்குள்ளான காலரா தொற்றுநோய் காரணமாக, ராபர்ட் வில்லியம்ஸ் தனது 8 வயது மகனை இழந்தார். அவரும் காலரா நோயால் பாதிக்கப்பட்டு தீவிர நோய்வாய்ப்பட்டு அக்டோபர் 10, 1866 இல் காலமானார். திரு. ராபர்ட் வில்லியம்ஸ் நோயுற்ற படுக்கையில் மானிப்பாய் கிரீன் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டார்.

இலங்கைத் தீவின் இரண்டாவது பழமையான செய்தித்தாளான மார்னிங் ஸ்டார் மற்றும் முதல் தமிழ் மொழி செய்தித்தாள் உதயதாரகை அவரது மரணச் செய்தியை அப்போது வெளியிட்டன. அவரது அகால மறைவைக் குறிப்பிடுகையில், “ராபர்ட் வில்லியம்ஸ் தனது பூமிக்குரிய கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றி கடவுளின் அருளால் யாழ் மக்கள் மனதில் நுழைந்தார். அவரது மரணம் சுண்டிக்குளி செமினரிக்கு ஒரு பெரிய இழப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இவர் நினைவாகவே தற்போது புதிய மண்டபம் 200வது ஆண்டில் திறக்கப்பட உள்ளது.

சிறு விதை பெரு விருட்சமாக :

இத்தகைய கல்விப் பணியாளர்களின் தன்நலமற்ற சேவையாலும் அயராத உழைப்பாலும் விதைக்கப்பட்ட சிறு விதை இன்று பெரு விருட்சமாக ஓங்கி வளர்ந்து பல்லாயிரம் பேருக்கு நிழல் கொடுக்கின்ற ஒரு ஸ்தாபனமாக மிளிர்கின்றது.

இங்கிலாந்து திருச்சபையின் இறுதி மிசனரியாளரும், கல்லூரியின் பதினாறாவது அதிபருமான அருட்திரு ஹென்றி பிற்றோ அடிகளார் கல்லூரியின் அதிபராக இருந்தபோது கல்லூரி மேலும் ஓங்கி வளர்ந்தது.

அருட்திரு ஹென்றி பிற்றோவின் (1920-1940) பின்னர், முதலாவது தேசிய அதிபர் என்னும் அந்தஸ்தினைப் பெற்ற அருட்திரு J.T.அருளானந்தம் (1940-1957), திரு.P.T.Mathai (1957-1959), திரு.A.W. ராஜசேகரம் (1959-1966) திரு.க.பூரணம்பிள்ளை (1967-1976),திரு.சி.இ.ஆனந்தராஜன்(1976-1985) திரு.குணசீலன் (1985-1987), திரு. தனபாலன் (1990-2006), திரு. ஞானப்பொன் ராஜா(2006-2017), தற்போது திரு. துஷிதரன் ஆகியோர் அதிபர்களாக பணியாற்றி உள்ளனர்.

மகாத்மா காந்தி வருகை :

இக்கல்லூரியிலேயே 1927 நவம்பர் 29இல் இந்திய தேசபிதா மகாத்மா காந்தி கல்லூரிக்கு வருகை தந்து, வில்லியம் மண்டபத்தில் உரையாற்றிய வரலாறும் உண்டு.

ஆயினும் 1945ல் நடைமுறைக்கு வந்த அன்றைய இலவசக் கல்வித் திட்டத்துடன் இணைந்து செயற்படாது தனித்துவமாக வெளியே இருக்க தீர்மானித்தது. மீண்டும் பல்வேறு நோக்கங்களுக்காக 1951ல் இலவச கல்வித் திட்டத்தில் இக் கல்லூரி இணைந்து கொண்டது.

கல்லூரி எதிர்கொண்ட சவால்கள் :

1960ல் அரசு பாடசாலைகளைக் கையகப்படுத்தி பொதுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. அதன் பிரகாரம் இக்கல்லூரியையும் அரசாங்கப் பாடசாலையாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. கல்லூரி தன் தனித்துவத்தை இழக்க விரும்புவதைத் தவிர்த்து, தனித்து இயங்க முற்பட்டது.

பல்வேறுபட்ட தியாகங்கள், சோதனைகள், வேதனைகள் போராட்டங்கள்,மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள். நலன் விரும்பிகள் என பல்வேறு பட்டவர்களின் மேலான ஒத்துழைப்பினாலும், பக்கபலத்தினாலும் சென்.ஜோன்ஸ் கல்லூரியைத் தனியார் பாடசாலையாக இயங்குவதற்கு தீரமானிக்கப்பட்டது.

கல்லூரி நிர்வாகத்தை ஆளுகை செய்வதற்கு ஆளுகைக்குழுவும் ஆலோசனை வழங்குவதற்கு ஆலோசனை சபையும் உருவாக்கப்பட்டது.

அரச உதவிகள் தடைப்பட்டமையினால் கல்லூரி நிர்வாகம் பாரிய நிதிப்பற்றாக் குறையை எதிர்கொண்டது. ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கமுடியாது திண்டாடியது. கல்லூரியிலிருந்து வெளியேறினர் சிலர் பாதிவேதனத்தில் பணிபுரிந்தனர் பலர் இலவசமாகவும் பணியாற்றினர்.

பல்வேறு அளப்பெரும் ஆளுமைகளால் வளர்க்கப்பட்ட ‘பரியோவான் கழுகு’ (Johnian Eagle) தன் கூரிய பார்வையுடன் நேரிய இலக்கை நோக்கி உயரப் பறந்து வருகிறது.

– ஐங்கரன் விக்கினேஸ்வரா