Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை நேட்டோவில் பின்லாந்து இணைவு | ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி | ஐங்கரன் விக்கினேஸ்வரா

நேட்டோவில் பின்லாந்து இணைவு | ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி | ஐங்கரன் விக்கினேஸ்வரா

5 minutes read
பின்லாந்தும், சுவீடனும் நேட்டோவில் இணைந்தமை ஒட்டுமொத்த நோர்டிக் பிராந்தியத்தையும் ரஷ்யாவுடனான இராணுவ மோதலுக்கான மற்றொரு களமாக மாற்றுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ரஷ்யா மீது சுமத்தப்பட்ட தடைகளைப் பொருட்படுத்தாமல் ‘ரஷ்யாவின் முதுகெலும்பை முறிக்கும்’ நோக்கில் அமெரிக்கா – மேற்கத்திய நாடுகள் உக்ரேனுக்குள் பத்து பில்லியன் கணக்கில் ஆயுதங்களைப் கொடுத்ததைப் போலவே, அதேபோல பின்லாந்தும் சுவீடனும் முன்னணி காவலரண் நாடுகளாக நேட்டாவிற்காக மாறி, மாற்றப்பட்டு உள்ளது.
நேட்டோ : மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு
உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ அமைப்பாகும். இந்த நேட்டோ கூட்டமைப்பு தான் தற்போது, உக்ரைன் மீதான ரஷ்யாவிற்கு எதிரான போரில், உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை பாரியளவில் செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்த நேட்டோ கூட்டமைப்பில், ஏற்கனவே பல நாடுகள் இணைந்துள்ள நிலையில், உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வரும் பின்லாந்து நாடு தற்போது இணைந்துள்ளது.
பின்லாந்து நாடு நேட்டோ கூட்டமைப்பில் இணைந்துள்ளதை அந்த நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ அலுவலக கட்டிடத்தில் பின்லாந்து கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
நேட்டோவில் இணைந்தது குறித்து பின்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் பேசும்போது, “இது எங்களுக்கு ஒரு வரலாற்றுத் தருணம். பின்லாந்தைப் பொறுத்தவரை, ரஷ்யா தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பைத் தொடர்வதால், உக்ரைனின் நேட்டோ ஆதரவு நிலைப்பாட்டை வலியுறுத்துவது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. யூரோ – அட்லாண்டிக் பிராந்தியம் முழுவதும் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த நாங்கள் முயற்சி மேற்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேட்டோவுடன் உக்ரைன் இணைவதை எதிர்க்கும் வகையில்தான் உக்ரைனின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த நிலையில், அண்டை நாடுகளில் ஒன்றான பின்லாந்து இப்போது நேட்டோவில் இணைந்துள்ளது ரஷ்யாவுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
இரண்டாம் உலகப் போருக்கு பின்னதாக முறையான நடுநிலைமை உடன்படிக்கைகளினால் தேசிய பாதுகாப்புக்கான போர் தவிர்க்கவியலாமல் எப்படி ஓர் இணைப்புவாத சமாதானத்திற்கு (annexationist peace) இட்டுச் செல்கிறது என்பதை
ஹெல்சின்கி உணர்த்தியது.
ஆயினும் அத்தகைய ‘இணைப்புகள்’ சந்தேகத்திற்கு இடமின்றி 1945 க்குப் பின்னர் அது சோவியத் ஒன்றியத்திடம் இழந்த இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய 10 சதவீத எல்லையை உள்ளடக்கி இருப்பதை மறுக்க முடியாது.
நேட்டோவில் பின்லாந்து மற்றும் சுவீடனை இணைப்பது ரஷ்யாவுடனான போர் முனைவில் மற்றொரு முன்னணி களமுனையை கொண்டு வருவதாக பலரது ஆய்வுக் கண்ணோட்டத்தில்
பார்க்கப்படுகின்றது என்பது வெளிப்படை.
நேட்டோவில் இணையும் 31வது நாடு பின்லாந்து :
நேட்டோ அமைப்பில் 31வது நாடாக பின்லாந்து இணைந்து இருப்பதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறும்போது, “நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைந்தமை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும். சுவீடனும் நேட்டோ அமைப்பில் இணைகிறது என்றார்.
ரஷ்யாவுடன் 1,300 கிலோமீட்டர் எல்லையைப் பின்லாந்து பகிர்ந்து கொள்கிறது. அதன் தலைநகரான ஹெல்சிங்கிக்கு (Helsinki) செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கிலிருந்து ரயிலில் வெறும் மூன்றரை மணி நேரத்தில் செல்லும் தூரத்தில் உள்ளது.
நேட்டோவில் பின்லாந்து இணைப்பால் நேட்டோ சிப்பாய்கள், டாங்கிகள் மற்றும் பிற ஆயுதங்களுடன் ரஷ்யாவின் இரண்டாவது நகரத்திலிருந்து ஒரு சில மணி நேர தாக்குதல் தூரத்தில் நிலைநிறுத்தப்படுவதை ரஷ்யா தீவிரமாக எச்சரித்து உள்ளது.
ஆச்சரியத்திற்கு இடமின்றி, இந்த இணைப்பை போர் அபாயத்தின் ஒரு மிகப்பெரிய தீவிரப்படுத்தல் குறித்து எச்சரித்து கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த இணைப்பை நிச்சயமான ஓர் அச்சுறுத்தல் என விவரித்ததுடன், ரஷ்யா திட்டமிட்ட நடவடிக்கைகளுடன் விடையளிக்கும் என எச்சரித்து உள்ளார்.
சோவியத் கலைப்பின் பின் நேட்டோவின் ஆக்ரோசம் ஏன் ?
நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949-இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின. இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர்ந்து இயங்க வேண்டும்.
ஆயினும் சோவியத் ஒன்றிய கலைப்பின் பின் நேட்டோவின் ரஷ்யா மீதான அதீத ஆக்ரோசம் ஏன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
புதிய இணைப்பால் ரஷ்யாவுடனான பின்லாந்தின் நீண்ட எல்லையானது ரஷ்யாவுக்கு எதிராக ஆத்திரமூட்டல்களை தொடங்குவதற்கும், செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கை விரைவாக அச்சுறுத்துவதற்கும் நேட்டோவுக்கு வாய்ப்பளிக்கும் அதே வேளையில், பால்டிக் கடலின் மேற்கு கடற்கரையில் சுவீடன் மூலோபாயரீதியில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.
பால்டிக் கடற்தளம் கலினின்கிராட் அருகில் நேட்டோ:
சுவீடிஷ் இராணுவம் பனிப்போர்க் காலத்திலிருந்து பல தசாப்தங்களாக ஒரு குறிப்பிடத்தக்க பிரசன்னத்தைப் பராமரித்து வரும் கோட்லாந்து தீவு (Gotland island), மாஸ்கோவின் பால்டிக் கடற்படையின் தாயகமான கலினின்கிராட் (Kaliningrad) ரஷ்ய நிலப்பரப்பிலிருந்து வடமேற்கில் வெறும் 300 கிலோமீட்டரில் தான் அமைந்துள்ளது.
நேட்டோ கூட்டமைப்பில் சுவீடனும், பின்லாந்தும் இணைவதற்கு ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்த ரஷ்யா, இப்போது, மேற்படி இரு நாடுகளும் நேட்டோ கூட்டமைப்பில் முழுமையாக இணைந்தன் பின் ரஷ்யா மீண்டும் கடுமையான எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
சுவீடன், பின்லாந்துக்குள் நேட்டோவின் இராணுவத் தளபாடங்கள் நுழைந்தால், ரஷ்யா அதற்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என எச்சரிக்கை விடுத்திருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், நிலைமையை மேன்மேலும் கடுமையாக்கும் நேட்டோவின் நடவடிக்கைகள், சுவீடன், பின்லாந்து நாடுகளுக்கும் விரிவடைந்து, அந்த நாடுகளிலும் நேட்டோவின் இராணுவ நிலைகள் நிலைநிறுத்தப்படுமானால், சமச்சீரான நடவடிக்கைகளின் மூலம் நேட்டோவுக்கு பதில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, நேட்டோவில் இணைந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டாத சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு, நேட்டோவும், அமெரிக்காவும் தொடர்ச்சியாக கொடுத்துவந்த அழுத்தங்களே இவ்விரு நாடுகளையும் நேட்டோவில் இணையயும் முடிவிற்கு தள்ளின என்பதோடு, இவ்விரு நாடுகளின் மக்கள் பெரும்பாலும் ரஷ்யாவுடன் பகையை வளர்த்துக்கொள்ளும் நிலைக்கு தங்கள் நாடுகள் எவ்விதமான நகர்வுகளையும் மேற்கொள்ளக்கூடாது என எதிர்பார்ப்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவீடனை பொறுத்தவரை, அந்நாடு நேட்டோவில் இணையும் முடிவை எடுத்தால், அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் நிலை இருப்பதாகவும், அதன்மூலம் அரசு பதவியிழக்கும் ஆபத்தும் இருப்பதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டது.
நேட்டோ கூட்டமைப்பில் கடைசி நாடாக துருக்கி இணைந்திருந்தது. தற்போது பின்லாந்து நாடு இணைந்ததன் பின் நேட்டோ அலுவலகத்தில் பின்லாந்து நாட்டின் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அந்த நாட்டு அதிபர் செளலி நினிஸ்டோ, பாதுகாப்பு அமைச்சர் கைகொனென், வெளியுறவு அமைச்சர் ஹாவிஸ்டோ ஆகியோர் பங்கேற்றனர்.
உக்ரைனுக்கு அதிக ஆதரவளிக்க நேட்டோவை வலியுறுத்துவதாக பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
1939 குளிர்கால போர் :
1917 இல் போல்ஷிவிக்குகளை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தின் படி 1939-40 குளிர்காலப் போரில் (Winter War) பின்லாந்து மீது ஸ்ராலினின் படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், பின்லாந்து ஆளும் வர்க்கம் அந்நாட்டை நாஜி ஜேர்மனியுடன் அணிசேர்த்தது.
பின்லாந்து படைகள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக நாஜிகளுடன் இணைந்து நிர்மூலமாக்கல் போரான ‘ஆபரேஷன் பார்பரோசாவில்’
(Operation Barbarossa) இணைந்தன. இப்போரில் 27 மில்லியன் உயிர்களைப் பறித்ததுடன், யூத இனப்படுகொலைக்கும் (Holocaust) வழிவகுத்தது.
சுவீடிஷ் ஆளும் வர்க்கம் அவர்களின் பங்கிற்கு, அந்த போரில் நாஜி ஜேர்மனியின் மூலப் பொருட்களுக்கான, எல்லாவற்றிற்கும் மேலாக இரும்பு உலோகத் தாதுக்கான, மிக முக்கியமான ஆதார வளங்களில் ஒன்றாக சேவையாற்றியது.
இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனியின் தோல்வி மற்றும் பனிப்போரின் தொடக்கம் ஆகியவை, பின்லாந்து மற்றும் சுவீடிஷ் ஆளும் உயரடுக்குகளை அணிசேரா நடுநிலை கொள்கையை ஏற்க நிர்பந்தித்தன.
1948 இல் சோவியத் ஒன்றியத்துடனான சமாதான உடன்படிக்கையின் கீழ் குறிப்பாக பின்லாந்து நடுநிலை வகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது என்பதும் வரலாற்றுச் சான்றாகும்.
நேட்டோவில் பின்லாந்து, சுவீடனை இணைப்பது ரஷ்யாவுடனான போர் முனைவில் மற்றொரு முன்னணி களமுனையை கொண்டு வருவதாக பல சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
                 – ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More