எம் முன்னோர் இயற்கை சார்ந்த சூழலுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இயற்கையோடு இயைந்து வளமான வாழ்வை சங்க காலத் தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பது வரலாறு. அந்த வகையில் மரங்கள் காலம் காலமாக தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. வணக்கத்திற்குரிய மரங்களாக அன்றிலிருந்து இன்று வரை மரங்களை நாம் போற்றி வருகின்றோம். உதாரணமாக கடம்ப மரம், வாகை மரம், வேப்ப மரம், அரசமரம், ஆலமரம் போன்றவற்றை வணங்கி வந்த மரபினராகிய நாம், இன்றும் சில மரங்களை வணங்கி வருவதைக் காண்கிறோம்.
இந்தப் பதிவில், சங்க காலத்தில் எப்படி இலுப்பை மரங்கள் எம் மக்களின் வாழ்வோடு இயைந்து இருந்தன என்பதை நாம் ஆய்ந்து நோக்கலாம்.
சங்க இலக்கியத்தில் பல பாடல்களில் இலுப்பை மரம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. பல அகநானூறு பாடல்கள், புறநானூறு, நற்றிணை போன்ற பாடல்களில் “இருப்பை” என்ற பெயரில் வருகின்றன.
புறநானூறு 384
“அங்கண் குறுமுயல் வெருவ, அயல கருங்கோட்டு இருப்பைப் பூ உறைக்குந்து”
என நன்னாகனார் எனும் புலவர் பாடுகிறார். அதாவது குறுமுயல்கள் வெருவி இலுப்பை மரத்துக் கொம்பிலே தாவ ஆங்குள்ள பூக்கள் உதிரும் என்கிறார்.
அகநானூறு 247
பெருங்கண்ணனார் என்ற புலவர் “கருங்கோட்டு இருப்பை வெண் பூ முனையின்” எனப் பாடுகின்றார். அதாவது உறவுக்காரக் கரடிகள் பலவற்றை கொண்ட ஆண் கரடி, இலுப்பைப் பூக்களை உண்டு தெவிட்டும் போது, செம்மண் புற்றில் உள்ள கரையான்களை உண்ணுவதற்காக அந்தப் புற்றைக் கிண்டும் என்று பாடுகின்றார்.
இவ்வாறு பல பாடல்களில் இலுப்பை மரத்தின் வளத்தை நாம் காணலாம்.
எம் முன்னோர் மரங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை பின்வரும் பாடல் மூலம் காணலாம்.
குறுந்தொகை 266
தன்னை விட்டுப் பிரிந்து சென்ற காதலனை நினைத்து வருந்துகின்ற இளம் பெண், இரவு நேரத்தில், தோட்டத்தில், இனிய துணையாக விளங்கிய வேங்கை மரத்திடம் கூடவா தூது சொல்லக் காதலன் மறந்து விட்டான்? என இயற்கையோடு தனது உணர்வுகளைக் கூறி ஆதங்கப்படுகிறார்.
இவ்வாறு அன்று வாழ்வாங்கு வாழ்ந்து வந்த இலுப்பை மரமானது மேகக் கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம் கொண்டது. இது ஒரு வெப்ப மண்டலத் தாவரம் ஆகும். வறண்ட நிலங்களில் எளிதாக வளரக்கூடிய இந்த மரம் 400 வருட ஆயுட்காலங்களைக் கொண்ட தாவரமாகும்.
பூ, விதை, பட்டை, எண்ணெய், புண்ணாக்கு ஆகிய அனைத்தும் சங்க காலம் தொட்டு இன்று வரை மருத்துவ பயன்பாட்டில் உள்ளன.
இது பாலைத் திணையுடன் தொடர்பு கொண்டது. நல்ல கடுமையான, வறட்சியான, பாலைவனம் போன்ற பகுதிகள், மணற்பாங்கான பகுதிகள், கற்கள் நிறைந்த பகுதிகளில் வாழக்கூடியது.
சங்ககாலத்தில் எம் மக்கள், இதன் பூக்களை பஞ்சகாலத்திலும், பாலை நிலத்திலும் வெல்லத்துடனோ அல்லது தேனுடனோ அரிசியையும் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டார்கள் என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன.
எம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பழமொழி
“ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரையாம்”
என்பார்கள் அதாவது கரும்பு ஆலை இல்லாத ஊரில் இந்த இனிப்புச் சுவை குறைந்த இலுப்பைப் பூவானது சர்க்கரை என்பதே அதன் விளக்கம் ஆகும்.
சர்க்கரை தயாரிக்க பயன்படும் இந்த இலுப்பைப் பூக்கள், இனிப்பு சுவை கொஞ்சம் குறைந்ததாக காணப்படுகின்றன.
அத்தோடு இந்த இலுப்பை மரத்தில் வண்டிச் சக்கரங்கள், மரத் தளபாடங்கள் போன்றன செய்யப்படுகின்றன. உப்பு நீரை தாங்குவதால் இந்த மரத்தை படகுகள் செய்யவும் பயன்படுத்துகின்றனர்.
அனைத்துப் பயன் தரும் மருத்துவக் குணம் கொண்ட இந்த இலுப்பை மரத்தை பணம் காய்க்கும் மரம் என்று கூட நாம் கூறலாம்.
மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த எம் முன்னோர் இயற்கை சார்ந்த சூழலுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். ஆனால் இன்றைய தலைமுறை இயற்கைச் சூழலில் இருந்து விலகுவது வேதனைக்குரிய விடயமாக உள்ளது.
இயற்கையோடு இயைந்து வளமான வாழ்வினை வாழ்ந்த சங்கத் தமிழரின் வாழ்வியலை நிலை நிறுத்துவோம். எத்தனையோ எமது பண்பாட்டு மரங்கள் அழிந்து விட்டன, அழிந்து கொண்டும் போகின்றன.
எமது பாரம்பரிய மரத்தை தெரிவு செய்து ஒரு மரமாவது நடுவோம்.
அழிவின் விளிம்பில் இருக்கும் இலுப்பை
மரத்தைக் காப்போம்.
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்