“புற்கை” என்ற சொல் சங்க இலக்கியத்தில் பல பாடல்களில் வருகின்றது. இது ஒருவித சோற்றுக்கஞ்சி அல்லது கூழ் என்ற பொருள்படும்.
இன்று இந்த வார்த்தை எம்மில் மருவி “புக்கை” என்ற நடைமுறையில் உள்ளது.
“புற்கை” என்ற சொல் சங்க இலக்கியப் பாடல்களில் எவ்வாறு எல்லாம் வருகிறது என்று ஈண்டு நோக்கலாம்.
புறநானூறு 64- புற்கை நீத்து வரலாம்
நெடும்பல்லியத்தனார் என்ற புலவர்,
” குடுமிக் கோமாற் கண்டு நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே”
என்று பாடுகின்றார்.
ஒரு விறலியைப் பார்த்து பாணன் ஒருவன், பெருஞ்செல்வத்தை உடைய முதுகுடுமியாகிய கோமானைச் சென்று காணலாம். அவரைக் கண்டால் கஞ்சி உண்டு வாழும் இவ்வாழ்வை நாம் அறவே விட்டுவிடலாம், என்று இப்பாடலில் பாடுகின்றார்.
திருக்குறள் 1065
“தண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்” அதாவது தான் சமைத்தது கஞ்சி என்ற உணவானாலும் அதில் பெரும் பகுதி தெளிந்த நீராக இருந்தாலும் அது தன்னுடைய முயற்சியால் உழைப்பால் கிட்டியது. அந்த உணவை உண்ணுவது போல் இனிமையான ஒன்று வேறு இல்லை என்கின்றார் திருவள்ளுவர்.
நாலடியார் 210
நாலடியாரில்,
“தண்போல்வர் இல்லுள் தயங்குநீர்த்
தண்புற்கை
என்போடு இயைந்த அமிழ்து”
என்று வருகிறது. அதாவது தன்னிடம் விருப்பம் கொண்டவர் வீட்டில் உண்ணப்படும் புல்லரிசி கூழும் உடம்புக்கு பொருந்தும் அமிழ்தம் ஆகும் என்கிறது நாலடியார்.
இவ்வாறாக “புற்கை” என்ற சொல் பல பாடல்களில் வருவதைக் காணலாம்.
சீவக சிந்தாமணியில் பொங்கல் எனும் சொல்
முதன் முதலாக சீவக சிந்தாமணியில் தான் “பொங்கல்” என்ற சொல் வருகின்றது. “மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து
எழுந்த தீம்பால் பொங்கல்” என்று திருத்தக்க தேவர் ஒன்பதாம் நூற்றாண்டில் பாடுகிறார். அதற்கு முன் “பொங்கல்” என்ற சொல் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.
ஆக, இன்று நாம் எமது அன்றாட வாழ்வியலில், புழக்கத்தில் பேசும் “புற்கை” என்ற சொல் சங்க இலக்கியத்தில் உள்ள ஒரு அரியதொரு சொல்லாகும்.
இந்தச் சொல், சிங்கள மொழியில் வேறு ஒரு பொருளைக் குறிப்பதாலும் எமக்கு “புக்கை” என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூசுகிறது. அழகாகப் பொங்கல் என்று அழைக்கின்றோம் என நினைக்கின்றோம்.
ஆனால் அது உண்மை அல்ல. “புற்கை” என்ற சொல் எமது சங்கத் தமிழன் பயன்படுத்திய சொல். அதை இன்று நாம் “புக்கை” என்று சொல்கின்றோம், என்பதில் பெருமை கொள்வோம். “புற்கை” எனத் திருத்திப் பேச முயற்சி செய்வோம்.
வடிவு, ஆணம், கதைத்தல், பறைதல், இருத்தல், உது, உவை, உவையள், உங்கை, உந்த, உதுக்கை என்ற சொற்கள் பழம் பெரும் பாக்களில் தான் உள்ளன.
இந்தச் சொற்கள் இன்றும் எம் பாட்டன், பாட்டி வாய்களின் வழி வருவதைக் காதாரக் கேட்கின்றோம். என்ன இது பட்டிக்காட்டான் சொற்களாக உள்ளன? நவீன சொற்களாக இல்லையே? எனப் புறந் தள்ளுகின்றோம்.
தொன் நெடுங்காலமாக புழக்கத்தில் இருந்த சொற்களை விடாது காப்போம். இந்தச் சொற்களை விடாது கதைப்போம்.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்