இறந்தவர்களின் உடலை ஒரு பெரிய பானைக்குள் வைத்து மண்ணுக்குள் அடக்கம் செய்தார்கள். இதுவே ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி என சங்க இலக்கியம் குறிப்பிடுகின்றது.
புறநானூற்று பாடல்களில் எவ்வாறெல்லாம் இந்த ஈமத்தாழி பற்றிய செய்திகள் வருகின்றன என்று இங்கு ஆய்ந்து நோக்கலாம்.
புறநானூறு 228
ஐயூர் முடவனார் என்னும் புலவர் கிள்ளிவளவன் என்னும் அரசனுக்காக இந்தப் பாடலை பாடுகின்றார்.
“கலஞ்செய் கோவே! கலஞ்செய் கோவே!
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!”
என்று பாடுகின்றார்.
அதாவது விரிகதிர் ஞாயிறு விசும்பிலே (ஆகாயம்) செல்வது போல் உலகெங்கும் நிலவி புகழப்பட்டவன். செம்பியர் மரபினனான கிள்ளி வளவன். அவன் தேவருலகம் எய்தினான். அவன் உடலை அடக்கம் செய்யத் தாழி வனையை விரும்பி முனைகின்றனை! கலம் வனையும் வேட்கோவனே! (மண்ணைக் காக்கும் தலைவன்-குயவன்) நின்னால் ஒருபோதும் இயலாது. நிலவட்டமே சக்கரமாகவும், மேரு மலையை மண்ணாகவும் கொண்டு வனைந்தால் அன்றி அப்பெருந்தகையை கவிக்கும் தாழியை உன்னால் வனைய முடியாது என்கின்றார். அதாவது கிள்ளிவளவனின் புகழின் பெருமையைக் குறித்து வியந்து அதனை அடக்குவதற்கு தாழி வனைதற்கு இயலுமோ? என்று பாடுகின்றார்.
புறநானூறு 238
“கவி செந்தாழிக் குவிபுறத்து இருந்த
செவி செஞ்சேவலும் பொகுவலும் வெருவ”
என்று பெருஞ்சித்திரனார் எனும் புலவர் பாடுகின்றார். அதாவது தாழியினுள் பிணத்தையிட்டு அதனைக் கவிழ்த்து புதைக்க, அதன் மேற்புறத்தே காணப்படும் குவிப் புறத்திலே கழுகுகளும், பொகுவல் எனும் புள்ளும், காகமும், கோட்டானும் கூடி நிற்கும் சுடுகாட்டை நோக்கி அரசன் சென்றனன். அவனை இழந்து எனது சுற்றம் எத்தகைய துயரப் படுமோ? என்று பாடுகின்றார்.
புறநானூறு-256
“வியன்மலர் அகன்பொழில்
ஈமத்தாழி
அகலிது ஆக வனைமோ”
என்று பெயர் அறிய முடியாத ஒரு பெண் புலவர் பாடுகின்றார்.
கோமகனோடு ஒட்டி இதுவரை வாழ்ந்தவள் யான். ஐயகோ! அவனும் இப்போது இறந்தான். வேட்கோவே! (குயவன்) அவனுக்கு செய்யும் ஈமத்தாழியை கொஞ்சம் அகலமாக வனைக! எனக்கும் அதனுள் இடம் வேண்டுமன்றோ! எனப் பெருந்துயரில் பாடுகின்றார்.
இவ்வாறு ஈமத்தாழி பற்றிய குறிப்புகள் பல, சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் மன்னர்களைத் தாழியில் இட்டுப் புதைக்கும் மரபு அறியப்படுகிறது.
அத்தோடு இயற்கை மரணம் எய்திய மூத்தோர்களையும் ஆற்றங்கரை ஓரத்தில் தாழியில் இட்டுப் புதைத்தனர். இதை “தாழியிற் கவித்தல் (மூடுதல்)” என்று கூறுவர். இது அக்காலத்தின் மிகப் பழைய மரபு ஆகும்.
இறந்த மனிதன் மீண்டும் கருவுற்றுப் பிறக்கின்றான் என்ற நம்பிக்கை நம் பழந்தமிழரில் இருந்திருக்கிறது. இப்போதும் எம்மில் இருக்கின்றது. அதனால் தான் இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை இட்டு புதைத்தனர். உதாரணமாக அவர்கள் பயன்படுத்திய, அல்லது விரும்பிய பொருட்களையோ வாள் போன்ற கருவிகளையோ வைத்துப் புதைத்தனர். இந்தத் தாழிகள் தாயின் கருவறை போலவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பது சிறப்பு அம்சம்.
ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி
இந்த ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றுக் கரையில் அமைந்துள்ளது. இதன் நாகரிகம் ஆனது 4000 வருடங்களுக்கு முந்தியது என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இங்கு ஆயிரக் கணக்கில் 3700 வருடங்களுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எழுத்தறிவு வருவதற்கு முன்னரே இந்த ஆதிச்சநல்லூர் நாகரீகம் இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. ஏனெனில் இந்த மட்பாண்டங்கள் எதிலுமே எழுத்துருக்கள் காணப்படவில்லை.
கீழடி முதுமக்கள் தாழி
கீழடியிலும் பல நூற்றுக்கணக்கான தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை 3000 இலிருந்து 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட குறியீடுகளோடு இந்தத் தாழிகள் இருக்கின்றன. கூர்மையான வாளுடன் இருந்த தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது அரசனுடையதாகவோ அல்லது ஒரு போர் வீரனின் தாழியாகவும் இருக்கக்கூடும். அத்தோடு நெல் உமியுடன் கூடிய தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எகிப்தியப் பிரமிட்டுகளை வியந்து பார்க்கும் நாம், எமது மிகப் பழமையான முதுமக்கள் தாழியை உலகறியைச் செய்ய வேண்டும். உலகில் இருக்கும் ஏறத்தாள அனைவருக்கும் பிரமிட்டுகள் பற்றிய செய்திகள் தெரியும். ஆனால் எத்தனை பேருக்கு எமது முதுமக்கள் தாழி பற்றிய வரலாற்று செய்திகள் தெரியும்? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்த நேரத்தில் பாரதியாரின் ஒரு கவிதை ஞாபகம் வருகின்றது.
“மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமையில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டார்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்”
என்று எமது மகிமைகளை வெளிக் கொண்டு வரவேண்டும் எனப் பாரதியார் பாடுகிறார்.
ஆக, புலம்பெயர்ந்து எத்தனையோ நாடுகளில் வசிக்கும் நாம், அந்தந்த நாட்டு மொழிகளில் எமது பழம்பெரும் மரபுகளை, மகிமைகளை வெளிக் கொண்டு வரவேண்டும்.
இந்த முதுமக்கள் தாழி பற்றிய செய்திகளை உலக வெளியில் கொண்டு வர வழி செய்ய வேண்டும்.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்