( இன்றைய காலகட்டத்தில் இடதுசாரி பாதையில் பல இலத்தீன் அமெரிக்க நாடுகள் பயணித்து வருகின்றன. ஜனநாயக தேர்தல் முறை மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல இடதுசாரி அரசாங்கங்கள் தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ளன)
இலத்தீன் அமெரிக்காவில் உள்ள 12க்கும் அதிகமான நாடுகளில் ஜனநாயக தேர்தல் முறை மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசாங்கங்கள் தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ளன. எதற்காக இலத்தீன் அமெரிக்க நாடுகள் இடதுசாரி பாதையில் தொடர்ந்து முன்னேறுகின்றன என்பது அமெரிக்காவிற்கு வியப்பாக இருப்பினும், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகள் இவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலத்தீனில் இடதுசாரி அரசு எழுச்சி:
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அரசுகளின் எழுச்சியாக 2018 இல் மெக்சிகோவும், பின்னர் 2019 இல் அர்ஜென்டினாவும் எழுந்தன.மேலும் 2020 இல் பொலிவியாவில் இடதுசாரி அரசு நிறுவப்பட்டது.
அதன்பின் 2021 இல் பெரு, ஹோண்டுராஸ் மற்றும் சிலி, பின்னர் கொலம்பியாவை தொடர்ந்து தற்போது பிரேசில் 2022 இல் இடதுசாரி அரசை அந்நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த மாதம் ஆரம்பத்தில் குவாத்தமாலா நாட்டில் பெர்னார்டோ அரேவலோ ஜனாதிபதித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.
வரலாற்றை திரும்பிப் பார்த்தால், பனிப்போரின் உச்சக்கட்ட காலத்தின்போதும், லத்தீன் அமெரிக்காவில் தொடர்ச்சியான இடதுசாரி அரசாங்கங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த அரசாங்கங்கள் பிராந்தியத்தில் அதன் புவிசார் மூலோபாய ஆர்வத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அரசாங்கத்தால் நிதியுதவி செய்யப்பட்ட எதிர்ப்புரட்சி சதிகளை எதிர்கொண்டன.
வரலாற்று ரீதியாக இவற்றில் 1954 குவாத்தமாலா ஆட்சிக்கவிழ்ப்பு, 1964 பிரேசிலிய ஆட்சிக்கவிழ்ப்பு, 1973 சிலி ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் 1976 அர்ஜென்டினா ஆட்சிக்கவிழ்ப்பு ஆகியவை அமெரிக்க சதித் திட்டங்களால் நிகழ்த்தப்பட்டன என்பதும் உலகறிந்ததே.
1960 – 1970களின் காலகட்டங்களின் போது, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஜனநாயக நடைமுறைகள் மிகவும் பலவீனமாக இருந்தது. மக்களின் தேர்தல் வழிப்பட்ட தீர்ப்புகளுக்கு இலத்தீன் அமெரிக்க நாடுகளின் இராணுவங்கள் மதிப்பு அளித்தது இல்லை என்பதும் வரலாறே.
தற்போது இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் சமூக கட்டமைப்பு மாற்றங்கள் அரசியல் – சித்தாந்த மாற்றங்களுக்கும் இதற்கு வித்திடுகிறது. மக்கள் தொகையில் பெரும்பாலானோர் நகரப் பகுதிகளில் வாழ்ந்து வருவதும், நகரக் கட்டமைப்புகள் அதி வேகமாக வளர்ந்து வருகின்றன.
தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக 20ஆம் நூற்றாண்டு வர்த்தகப் பரிமாணங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் 21ஆம் நூற்றாண்டில் பல புதிய வளர்ச்சிப் பரிமாணங்களின் தோற்றத்திற்கு வித்திட்டுள்ளன. 21ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியில் பொதுவாக, இராணுவம் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதோடு, இடையூறுகள் எதுவும் பாரியளவில் செய்வதில்லை.
ஆபரேஷன் கோண்டர்: (Operation Condor)
இந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கள் அனைத்தும், அமெரிக்க அரசின் ஆபரேஷன் காண்டரின் (Operation Condor) ஒரு பகுதியாக, அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ (CIA) ஆதரவுடன் கடும்போக்கு வலதுசாரி இராணுவ சர்வாதிகாரங்களால் இறையான்மை உள்ள மக்களின் ஆட்சிகள் கைப்பற்றப்பட்டன.
அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ ஆதரவுடைய கடும்போக்கு வலதுசாரி சர்வாதிகார ஆட்சிகளில், சட்டவிரோத அரசியல் கைதுகள், சித்திரவதைகள், அரசியல் காணாமல் போதல் மற்றும் குழந்தை கடத்தல் உட்பட பல மனித உரிமை மீறல்களை செய்தன.
சர்வதேச அழுத்தத்தின் காரணமாக இந்த ஆட்சிகள் பலவும் வீழ்ச்சியடையத் தொடங்கின. இவ் வலதுசாரி அரசுகள் கொடூரமான அட்டூழியங்களில் ஈடுபட்டதன் காரணமாக இலத்தீன் பொது மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக போராடினர். பல இலத்தீன் நாடுகள் மறைமுக போரை எதிர்கொண்டன என்பது வரலாற்று உண்மையாகும்.
கொலம்பியாவில் இடதுசாரி தலைமை:
இலத்தீன் அமெரிக்க கண்டத்தில் உள்ள கொலம்பிய நாட்டின் மக்கள் தொகை 50 மில்லியன் ஆகும். மக்கள் தொகையின் படி இலத்தீன் அமெரிக்க கண்டத்தில் மூன்றாவது பெரிய நாடான கொலம்பியா உள்நாட்டுப் போர்களின் நீண்ட வரலாற்றைக் கொண்ட கொலம்பிய நாட்டில் பெட்ரோவின் வெற்றி அதி முக்கியத்துவம் வாய்ந்தது.
2022 மே 29 அன்று கொலம்பியாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் களத்தில் போட்டியிட்ட ஐந்து வேட்பாளர்களில் ஒருவர் கூட 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை. எனவே, 2022ஜூன் 19 அன்று இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெற்றது.
இந்த இரண்டாவது சுற்றில் இடதுசாரி முற்போக்கு சக்திகளின் கூட்டணி (Historic Pact ) சார்பாக குஸ்தவோ பெட்ரோ (Gustavo Petro) மற்றும் வலதுசாரி வேட்பாளராக ரொடோல்ஃபோ ஹெர்னாண்டஸ் (Rodolfo Hernandez) ஆகிய இருவருக்கும் இடையே போட்டி நிலவியது.
கொலம்பியாவில், M-19 எனும் ஆயுதக்குழுவில் கிளர்ச்சியாளராக செயல்பட்ட பெட்ரோ சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளானவர். பின்னர், மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். ஆயுதப் போராட்ட பாதையை கைவிட்ட அந்தக் குழு 1990ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டது. அதன் நீட்சியாக M-19 ஜனநாயக முன்னணி என்ற அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு, அரசியல் அமைப்பு மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளில் அக்கட்சி பங்கேற்க தொடங்கியது. அந்நாட்டின் அரசியல் அமைப்பையே மாற்றி எழுதியது.
கொலம்பியாவில் விகிதாச்சார தேர்தல் முறை நடைமுறையில் உள்ளது. கொலம்பிய அதிபரின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். பல தசாப்தங்களாக அதி தீவிர இடதுசாரிக் குழுக்கள் மற்றும் ஆயுதப் போராட்ட பாதையை ஏற்றுச் செயல்பட்டுக் கொண்டிருந்த கிளர்ச்சியாளர்களின் தாக்குதலைக் கொலம்பிய நாட்டு அரசாங்கங்கள் எதிர்கொண்டு வந்தன.
கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படைப்பிரிவு ((FARC) 1964ஆம் ஆண்டில் கொலம்பிய கம்யூனிஸ்ட் கட்சியின் படைப்பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டது. நீண்ட ஆயுதப் போராட்டங்கள் மற்றும் மோதல்களுக்குப் பிறகு 2016ஆம் ஆண்டில் ஆயுதப் பாதையை நிராகரித்துவிட்டு அமைதிப் பாதைக்கு திரும்பிட FARC முடிவு செய்து, அரசாங்கத்துடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
குவாத்தமாலா இடதுசாரி வெற்றி:
இம்மாத ஆரம்பத்தில் ஊழல் எதிர்ப்புப் அரசியல்வாதியான பெர்னார்டோ அரேவலோ குவாத்தமாலாவின் ஜனாதிபதித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார். 98 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அரேவலோ 58 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரது போட்டியாளரான சாண்ட்ரா டோரஸ் 36 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.
குவாத்தமாலாவில் அவசரமான மாற்றத்திற்கான நம்பிக்கைகளுக்கு மத்தியில் அரேவலோ வென்றார். ஊழலுக்கு எதிரான பிரச்சாரகர், வன்முறையைச் சமாளிப்பதாக உறுதியளிக்கிறார். பரவலான ஊழலைச் சமாளிக்கத் தவறிய தலைவர்களின் கோபத்தால் வாக்காளர்கள் மாற்றத்திற்கான ஒரு தீர்க்கமான தேர்வை மேற்கொண்டனர்.
64 வயதான முன்னாள் இராஜதந்திரி மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் மகன், வன்முறை மற்றும் பாரிய உணவுப் பற்றாக்குறைக்கு மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளார்.
குவாத்தமாலாவில் 86 தேர்தல் பார்வையாளர்கள் குழுவைக் கொண்ட அமெரிக்க மாநிலங்களின் அமைப்பின் (OAS) முக்கிய பிரதிநிதி ஒருவர், வாக்களிப்பு சுமூகமாக நடந்ததாகக் கூறினார். எலடியோ லோயிசாகா, பணியின் தலைவர், தேர்தல் “அனைத்து கோரும் கடமைகளையும் நிறைவேற்றியுள்ளது” என்றார்.
ஈக்வடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக் கொலை?
ஈக்வடார் தேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிபர் வேட்பாளரான பெர்னாண்டோ விளாவிசென்ஷியோ என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை அதிர செய்துள்ளது. தென் அமெரிக்காவில் சுமார் ஒன்றே முக்கால் கோடி மக்கள் தொகை கொண்ட ஈக்வடார் தேசத்தில் போதைக் கடத்தல் மற்றும் ஆயுத மோதல்களால் இறந்தோர் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் மட்டும் 4,800 பேர்.
இம்மாதம் ஆகஸ்ட் 20ம் திகதி தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்திருக்கும் குடியரசு தேசம் ஈக்வடார் நாட்டின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது.
அதிபர் வேட்பாளர்களில் முன்னாள் பத்திரிகையாளரான பெர்னாண்டோ விளாவிசென்ஷியோ முக்கியமானவர். இவர் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்த போது, மக்கள் திரளின் மத்தியில் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
போதைக் கடத்தல் மற்றும் ஆயுதக் குழுக்களின் மோதலுக்கு பிரசித்தி பெற்றது ஈக்வடார். அயல் நாடுகளான பெரு மற்றும் கொலம்பியா தேசங்களுக்கு இணையாக, ஈக்வடாரில் போதை மாஃபியாக்களின் அதிகாரம் உச்சத்தில் உள்ளது. பத்திரிகையாளராக இருந்த காலம் தொட்டே, போதை அதிகாரங்களுக்கு எதிராக போராடி வரும் பெர்னாண்டாவுக்கு இந்த வகையில் எதிரிகள் அதிகம்.
தங்களுக்கு எதிரான ஆட்சியாளர்களை சகித்துக் கொள்ளாத போதை மாஃபியாக்கள் கூட்டணி வைத்துக் கொண்டு, அவர்களை தீர்த்து கட்டுவது வழக்கம்.
பெர்னாண்டோவை கொன்றவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என நிகழ்கால அதிபர் குயிலர்மோ லஸ்ஸோ உத்திரவாதம் அளித்திருக்கும் சூழலில், கூடுதல் வன்முறைகளைத் தடுக்க அதிபர் தேர்தலை ஒத்திப்போடுமாறும் மக்கள் மத்தியிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
பிரேசில் இடதுசாரித் தலைவர்
பிரேசில் இடதுசாரித் தலைவர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இவ்வருட ஜனவரியில் அதிபராகப் பதவியேற்றார். பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்கையில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஜனவரி 2003 முதல் டிசம்பர் 2010 வரை அதிபராக இருந்த லூலா, 31 அக்டோபர் 2022 அன்று நடந்த தேர்தலில் முன்னைய போல்சனாரோவை தோற்கடித்தார். அவர் பதவியேற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு, பிரேசில் நாட்டில் கலவரங்கள் தீவிரமாக வெடித்தன.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை எதிர்க்கும் வகையில், போல்சனாரோவின் ஆதரவாளர்கள் நாட்டின் தலைநகரான பிரேசிலியாவில் உள்ள அரசு கட்டிடங்களை சேதப்படுத்தியுள்ளனர். பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், அதிபர் மாளிகை மற்றும் உச்ச நீதிமன்ற கட்டிடங்களை சேதப்படுத்தின. தங்கள் தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து வருகின்றனர்.
இலத்தீன் அமெரிக்க சமூக கட்டமைப்பு மாற்றங்கள்
தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக 20ஆம் நூற்றாண்டு வர்த்தகப் பரிமாணங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் 21ஆம் நூற்றாண்டில் பல புதிய தொழில்நுட்ப பரிமாணங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன.
முன்பு 1960 – 1970களின் காலகட்டங்களின் போது, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஜனநாயக நடைமுறைகள் மிகவும் பலவீனமாக இருந்தது. மக்களின் தேர்தல் வழிப்பட்ட தீர்ப்புகளுக்கு இலத்தீன் அமெரிக்க நாடுகளின் இராணுவங்கள் மதிப்பு அளித்தது இல்லை என்பதும் வரலாறே.
21ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியில் பொதுவாக, இராணுவம் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதோடு, இடையூறுகள் எதுவும் பாரியளவில் செய்வதில்லை.
தற்போது இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் சமூக கட்டமைப்பு மாற்றங்கள் அரசியல் – சித்தாந்த மாற்றங்களுக்கும் வித்திடுகிறது. மக்கள் தொகையில் பெரும்பாலோர் நகரப் பகுதிகளில் வாழ்ந்து வருவதும், நகரக் கட்டமைப்புகள் அதி வேகமாக வளர்ந்து வருகின்றன.
-ஐங்கரன் விக்கினேஸ்வரா