Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சமூக மாற்றத்துக்கான படைப்பாளி கி. பி. அரவிந்தன் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

சமூக மாற்றத்துக்கான படைப்பாளி கி. பி. அரவிந்தன் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

3 minutes read

மரணத்தை அடிக்கடி முத்தமிட்ட தோழர் சுந்தர் !
சமூக மாற்றத்துக்கான படைப்பாளி கி. பி. அரவிந்தன் !!
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
(ஈழப் போராளியும், சமூக மாற்றத்துக்கான படைப்பாளியாக விளங்கிய கி. பி. அரவிந்தனின் 70வது (17/9/1953) அகவை நாளையோட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது)

அரசியலை மானுட முகம் கொண்டதாக மாற்றிக்கொள்வதற்குக் கவிதையை ஆயுதமாகத் தேர்வு செய்து கொண்டவர்தான் கி.பி. அரவிந்தன். அவரின் ‘ஓர் உறைபனிக் காலக் கட்டியக் காரன்’ ‘Le messager de l’hiver’ (லே மெசேசர் டி எல் ஹிவர்)
என்னும் கவிதை நூல் பிரஞ்சு மொழியில் ‘றிவநெவ்’ என்னும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, பாரிஸ் நகரில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

சமூக மாற்றத்துக்கான படைப்பாளி:

அரசியல் அனுபவத்தை இலக்கிய அனுபவமாக மாற்ற, சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. இலத்தீன் அமெரிக்கப் பெருவெளியில், இவ்வாறான தனித்துவங்களைக் காண முடியும். அரசியல் செயல்பாடு, இலக்கியச் செயல்பாடாக மாறி, அரசியல் விடுதலைக்கான விதைகள் அங்கு உற்பத்தியாகின்றன. கி. பி. அரவிந்தன் 17 செப்டம்பர் 1953 இல் பிறந்தவர். 8 மார்ச் 2015 மரணிக்கும் வரை அவரின் எழுத்து வலிமையானதாக இருந்தது.

ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளரும், கவிஞரும், மூத்த அரசியல் செயற்பாட்டாளருமான
கிபி.அரவிந்தனும் அர்ப்பணிப்புக்குப் பின்னர், அரசியல் கதவுகளைத் திறந்து, இலக்கியப் பெருவழியைச் சென்றடைந்து, விடுதலை முழங்கங்களைக் கடைசி நாள் வரை முழங்கி, தனித்துவத்தை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.

கிபி.அரவிந்தனின் எழுத்துகள் ஈழத்தின் ஏக்கங்களையும் மண்ணின் மணத்தையும் இயல்பாகவே பெற்றுள்ளன. சமூக மாற்றத்துக்கான விடுதலையை நோக்கிய இவரது படைப்புகள், ஆழத்தையும் விரிவையும் உள்ளடக்கியவை. குறி தவறாமல் இலக்குகளை நோக்கிப் பாய்ந்து செல்லும் எழுத்தின் வீரியம் இவருக்கு வாய்த்திருக்கிறது.

இன்றைய காலத்தில் மறைந்துபோன ஈழத்துப் பழமொழிகள் பல இயல்பாகவே இவரது எழுத்தில் வந்துகொண்டேயிருக்கும்.
‘இனியொரு வைகறை’, ‘முகங்கொள்’, ‘கனவின் மீதி’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் இதில் மிகவும் புகழ் பெற்றவை. பல்வேறு காலப் பின்னணிகளைக் கொண்ட இவரது பேட்டிகள் ‘இருப்பும் விருப்பும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.

மரணத்தை அடிக்கடி முத்தமிட்டவர்:

மார்க்சியத்தின் மீது தீராத ஈடுபாடு கொண்ட பல்கலைக்கழக மாணவப் பருவத்திலிருந்து, ஈழ விடுதலை நோக்கித் தனது பயணத்தை வேகப்படுத்திக் கொண்டார் அரவிந்தன். இதன் பின்னர் அமைந்த இவரது போராட்ட அரசியல் வாழ்க்கை, யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அதிபயங்கரங்களைக் கொண்டிருந்தது. மரணத்துக்கு அருகில் அடிக்கடி சென்று திரும்பினார். சயனைட் அருந்தி முதலில் உயிர் தியாகம் செய்த, விடுதலைப் போராளி சிவகுமாரனுடன் தனது போராட்டப் பயணத்தைத் தொடங்கியவர்தான் அரவிந்தன்
கிறிஸ்தோபர் பிரான்சிஸ் என்னும் இயற்பெயரை கொண்ட எழுத்தாளரும் போராளியுமான கி.பி. அரவிந்தன்.

இலங்கையின் வரலாற்றுப் புகழ் மிக்க நெடுந்தீவில் பிறந்த இவர், 62 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருக்கிறார்.
ஆனால், நூறாண்டுகள் வாழ்ந்திருந்தால்கூட பெற முடியாத அனுபவத்தை 62 ஆண்டுகளிலேயே இவர் பெற்றுவிட்டார். அவர் வாழ்ந்த அன்றைய நாட்களில் ஈழத்துச் சூழல், ரத்தத்தை சிந்த வைத்து, ஆழ்ந்த அனுபவத்தைக் கற்றுத்தந்திருக்கிறது.

இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். அத்துடன் ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். அப்பால் தமிழ் எனும் இணையத் தளத்தினை நடத்தி வந்தார். புதினப்பலகை இணையத்தளத்தின் முக்கிய பங்காளரும் ஆவார்.

ஈரோஸ் விடுதலைப் போராளி:

1972 ஆம் ஆண்டில் 1972 அரசமைப்புச் சட்டம் தமிழருக்கு ஏற்றதல்ல என்ற துண்டறிக்கை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதான மூன்று இளைஞர்களில் அரவிந்தனும் ஒருவர். 1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார்.
இவர் தோழர் சுந்தர் என்றும் ஈரோஸ் இயக்கத்தின் விடுதலைப் போராளியாக அறியப்பட்டவர்.

1990களில் இலங்கையை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தார். இவரது படைப்புக்களில் ஈழவிடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழரின் புகலிட வாழ்வியலும் முனைப்புடன் காணப்படுகின்றன.

பிரான்சிலிருந்து மௌனம் காலாண்டிதழ்:

இருபத்தைந்து ஆண்டுக் காலம் பிரான்ஸ் தேசத்தில் வாழ்ந்த அகதி வாழ்க்கை முறையில் இலக்கிய ஆளுமையாக, கலை ஆர்வலராக கி.பி.அரவிந்தன் உச்சம் பெற்றார். தாயகமான ஈழத்தின் நிகழ்வுகள் பற்றியும் மொழியால் ஒன்றுபட்ட தமிழக நிகழ்வுகள் பற்றியும் மிகுந்த அக்கறை செலுத்தி வந்தார்.

பிரான்சிலிருந்து மௌனம் எனும் காலாண்டிதழை கி.பி.அரவிந்தன் ஆசிரியராக இருந்து நடத்திவந்தார். ஓசை, சுவடு, ஈழமுரசு ஆகிய இதழ்களிலும் பங்களிப்புச் செய்துள்ளார். இனியொரு வைகறை, முகங்கொள், கனவின் மீதி மூன்று கவிதைத் தொகுப்புகள் தனித்தனியாக வெளிவந்துள்ளன. இம்மூன்று நூல்களும் ஒருசேரத் தொகுக்கப்பட்டு ‘மிச்சமென்ன சொல்லுங்கப்பா’ எனும் பெயரில் 2015-ம் ஆண்டு வெளிவந்துள்ளது.

கி.பி.அரவிந்தனின் தன் வரலாறு, நேர்காணல்கள் கட்டுரைகள் அடங்கிய ‘இருப்பும் விருப்பும்’ எனும் நூலும் தற்போது வெளிவந்துள்ளது.

அரசியலை மானுட முகம் கொண்டதாக மாற்றிக்கொள்வதற்குக் கவிதையை ஆயுதமாகத் தேர்வு செய்து கொண்டவர்தான் அரவிந்தன்.
மானுடத்தை நேசித்த கி. பி. அரவிந்தன், உறைபனிக் கால கட்டியக்காரனின் மரணம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பாரிசில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2015 மார்ச் 8 அன்று காலமானார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More