Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சே குவேராவின் இறுதிக் கணங்கள் | எல்லா யுகங்களிலும் ஒளிரும் புரட்சிமுகம் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

சே குவேராவின் இறுதிக் கணங்கள் | எல்லா யுகங்களிலும் ஒளிரும் புரட்சிமுகம் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

4 minutes read

சே குவேராவின் இறுதிக் கணங்கள் :
எக்காலமும் முகிழும் வீரத்தின் வித்து !!
எல்லா யுகங்களிலும் ஒளிரும் புரட்சிமுகம் !!
——————————————————
– – ஐங்கரன் விக்கினேஸ்வரா

(சேகுவேரா 56 வது நினைவு நாளான 09 அக்டோபர் 1967 இக்கட்டுரை பிரசுரமாகிறது)

ஒரு மாவீரனின் இறுதி மூச்சுக்கான வரலாறு எழுதப்பட தயாராகி கொண்டிருக்கின்றது என்பதை எவருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மக்களின் விடிவிற்காக :

இலத்தீன் அமெரிக்க மக்களின் விடிவிற்காக ஒரு புரட்சி வீரனின் இறுதிக்கணங்கள் இங்கே தான் எழுதப்படப் போகிறது என்பதை யாருமே அறியவில்லை.

1966ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கோவை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டதன் பின்னர் மார்ச் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் உருகுவே, பிரேஸில், பராகுவே, அர்ஜெண்டைனா, பொலிவியா நாடுகளில் பயணம் செய்தார் அந்த புரட்சியின் ஒளிர்முகம்.

1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு பொலிவியா நாட்டுக்குள் நுழைந்த அந்த மாவீரன் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . அத்துடன் பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது .

பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்றே அவர் நினைத்தார்.

பொலிவியாவில் புரட்சி :

எதற்காக பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்றால், அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் தீவு நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணமாகும்.

பொலிவியாவில் நடந்த கொரில்லாப் புரட்சியின் போது பொலிவியக் காடுகளில் நீண்ட காலமாக மக்களோடு மக்களாக பதுங்கி இருந்து மக்களுக்காக மரணத்தை மகிழ்வோடு ஏற்ற மாவீரனே ‘சே குவாரா’ !

மிகுந்த மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து ‘சே’யை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்னைகளுடன் ‘சே’ காடுகளில் அலைந்தார். சேயை தேடித் திரிந்த சி.ஐ.ஏ. ஏற்கனவே பொலிவியாவுக்குள்ளும் புகுந்து விட்டது.

புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள் எனும்
சே குவேராவின் கூற்றுக்கிணங்க மக்களின் நலனுக்காக தன்னையே தியாகித்த வீரன் தான் சே குவாரா.

இப்பூமிப் பந்தில் பலர் உதிக்குன்றனர், பலர் மறைகின்றனர். ஆயினும் ஒருசிலரே இன்றுவரை நீடித்து நிலைத்து சாதனை படைக்கிறார்கள். அந்தவகையில் வரலாற்றின் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட்ட பெயரில் ஒன்றே சே குவேரா.

மருத்துவ பட்டதாரி :

1928 ஜூன் 14இல் ஆர்ஜென்டீனா, ரொசாரியோவின் செல்வந்த குடும்பத்தில் பிறந்து,ஒரு மருத்துவராக பட்டம் பெற்ற இவர் நினைத்திருந்தால் தன் காலம் முழுவதும் வசதியான வாழ்க்கையை மேற்கொண்டிருக்க முடியும்.

ஆனால் அனைத்தையும் துறந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதுவும் வேறு நாட்டு மக்களுக்காக போராடிய இவரது போராட்டம் அளப்பரிய ஒன்றாகும்.

பூமியின் நடுவினில் ஆழப்பதிந்த பெயர் பெற்ற சேகுவாரா தனது இறுதிக்கணங்கள் கூட ஒரு பரட்சி வீரனின் உன்னத தியாகத்தை உலகறியச் செயத்து.

‘சே’யின் இறுதிக் கணங்கள் :

1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம்.
காலை 10.30 யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ‘சே’ கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களை பரிசாகத் தருகிறார்.

நண்பகல் 1.30 அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.

பிற்பகல் 3.30 காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ‘‘நான்தான் ‘சே’. நான்இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார். காலில் குண்டு அடிபட்ட நிலையில் சே குவேரா மாலை 5.30அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக சே’வை அழைத்து வருகின்றனர்.

அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் ‘சே’ கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார்.
இரவு 7.00… ‘சே பிடிபட்டார்’ என சி.ஐ.ஏவுக்குத் தகவல் பறக்கிறது.. அதே சமயம், ‘சே’ உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.

தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ‘‘இது என்ன இடம்?’’ என்று ‘சே’ கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ‘‘பள்ளிக்கூடமா… ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?’’ என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் ‘சே’வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.

அக்டோபர் 9 அதிகாலை 6.00 லாஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.

பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக்கிறது. ‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் ‘சே’வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.

கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் ‘சே’வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி.

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமான மாவீரன் :

அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக் கிறது. ‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன.

தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் ‘சே’வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.

காலை 10.00 ‘சே’வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பதால், அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏவிடம் இருந்து தகவல் வருகிறது.

காலை 11.00 ‘சே’வைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. ‘மரியோ ஜேமி’ (Mario Jemy) என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அக்காரியத்துக்காகப் பணியமர்த்தப்படுகிறார்.

மரியோ ஜேமி’ (Mario Jemy) கைகள் கட்டப்பட்ட நிலையில், ‘சே’வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ‘‘முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!’’ என்பார் ‘சே’. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார்.

வீரனாய் வீழ்ந்த சே :

தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு ‘சே’ கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார். ‘‘கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான்!’’ இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!

மணி 1.10 மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி குண்டுகள் பாய்கின்றது. ஒன்பது தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.

சேவின் மார்புகளைத் தோட்டாக்களால் துளைத்தது. ஆனால் அந்த வீரனின் கண் இமைகள் அப்போதுகூட மூடிக்கொள்ளவில்லை. கண்கள் திறந்தபடியேதான் அவர் உயிர் அவரை விட்டுப் பிரிந்தது.

எந்த மண்ணிலோ பிறந்து எந்த மண்ணிற்காகவோ போராடி எந்த மண்ணிலோ துணிச்சலாக மரணத்தை சந்தித்த சே குவேரா இந்த யுகத்தின் ஒப்பற்ற தலைசிறந்த விடுதலைப்போராளி. எக்காலமும் முகிழும் வீரத்தின் வித்தான சே குவேரா, எல்லா யுகங்களிலும் ஒளிரும் புரட்சிமுகமானார்.

(09 அக்டோபர் 1967 சேகுவேரா நினைவு நாளையோட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More