Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை பாலஸ்தீன போர் | கட்டாரின் இராஜதந்திரம் வெற்றியளிக்குமா? | ஐங்கரன் விக்கினேஸ்வரா

பாலஸ்தீன போர் | கட்டாரின் இராஜதந்திரம் வெற்றியளிக்குமா? | ஐங்கரன் விக்கினேஸ்வரா

6 minutes read

பாலஸ்தீன போரில் பணயக் கைதிகள் விவகாரம் :

கட்டாரின் இராஜதந்திரம் வெற்றியளிக்குமா ?
இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுதலையாவரா ?
——————————————————
ஐங்கரன் விக்கினேஸ்வரா

(1976இல் ஒபரேஷன் என்டபே பணயக் கைதிகள் விடுவிப்பு நடவடிக்கையில் தளபதியான யோனாதன் நேத்தன்யாஹூம் கொல்லப்பட்டார்.
இவர் வேறு யாறும் அல்ல, இன்றைய இஸ்ரேலின் பிரதம மந்திரியான பெஞ்சமின் நேத்தன்யாஹூவின் அண்ணன் ஆவார்)

கட்டார் அரசின் இராஜதந்திரத்தாலும், மத்தியஸ்தத்தாலும் மேலும் பணயக்கைதிகளை விடுவித்து, முழுமையான போரைத் தடுக்க முடியுமா என்பதனை இனிவரும் நாட்களிலே தான் பார்க்க முடியும்.

ஹமாஸால் பணயக் கைதிகளாக இருந்த அமெரிக்கத் தாய் மற்றும் மகளின் திடீர் விடுதலைக்கு கட்டார் அரசு முக்கிய பங்கு வகித்தது. இப்போது ஹமாஸ் வசமுள்ள சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது, முழு அளவிலான போரைத் தடுக்கும் நோக்கில், கட்டார் அரசு பரந்த உரையாடல் அல்லது மத்தியஸ்தத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இரண்டு பணயக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிப்பது நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையாக இருக்கும் என்று பேச்சுவார்த்தையாளர்கள் ஹமாஸை சமாதானப்படுத்த முடிந்தது.
ஹமாஸ் உடனான வெற்றிகரமான பணயக்கைதிகள் பேச்சுவார்த்தை கட்டாரை இந்த நெருக்கடியில் இராஜதந்திரத்தின் மையமாக காட்ட அனுமதித்தது என்று பிரிட்டிஷ் சிந்தனைக் குழுவான லண்டன் குளோபல் ஸ்ட்ரேடஜி இன்ஸ்டிட்யூட்டின் கூறியுள்ளது.
எண்ணெய் வளம் கொண்ட பாரசீக வளைகுடாவில் உள்ள கட்டார் அரசின் தொடர் இராஜதந்திர முயற்சிகளில் இது சமீபத்திய வெற்றியாகும். கட்டார் அரசால் சமீபத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்றம் நிகழ்ந்தது. மற்றும் ரஷ்யாவிலிருந்து நான்கு உக்ரேனிய குழந்தைகளை விடுவிப்பதற்கு பேச்சுவார்த்தைக்கு உதவியது.
2021 இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கு முன்பு தலிபான்களுடன் சமாதானப் பேச்சுக்களையும் நடத்தியது. ஆனால் ஹமாஸின் அரசியல் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த கட்டாரின் செயலால், இஸ்ரேலுக்கு தன்னை ஒரு மத்தியஸ்தராக முன்வைக்கும் முயற்சியை சிக்கலாக்கி உள்ளது.
ஹமாஸ் பிடித்த பணயக் கைதிகள்:
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் குழு, பணயக் கைதிகள் அனைவரையும் நிபந்தனையுடன் விடுவிக்க முன்வந்தது. காஸா மீதான வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால், அனைத்து பொதுமக்களையும் பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்க தயாராக இருப்பதாக ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக NBC நிறுவனம் செய்தி வெளியிட்டது.
இஸ்ரேலியப் படைகள் காஸா பகுதியில் இராணுவத் தாக்குதலை நிறுத்தினால், ஒரு மணி நேரத்திற்குள் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் அதிகாரி தயாராக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் காஸா நகர மருத்துவமனை மீது இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. எனினும் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலின் இராணுவம் பொறுப்பேற்க மறுத்துவிட்டது. இதன் பின் பாலஸ்தீன மக்கள் வசிக்கும் பகுதிகளில் முன்னறிவிப்பின்றி நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலின் போதும் ஒரு இஸ்ரேலிய பணயக்கைதி கொல்லப்படுவார் என ஹமாஸ் தற்போது அறிவித்துள்ளது.
பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஒவ்வொரு பணயக் கைதிகளாக உயிரிழப்பார்கள் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் மீதான சமீபத்திய தாக்குதலுக்குப் பின்னர் ஹமாஸ் அமைப்பால் பல இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து சென்றுள்ளனர். இவ்வாறு பணய கைதிகளாக கொண்டு செல்லப்பட்ட மக்கள் கொல்லப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பணயக்கைதிகள், உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒன்றான காசா பகுதியில் உள்ள ஹமாஸ் மறைவிடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
இதேவேளை, ஹமாஸுக்கு எதிராகப் போரிடுவதற்காக இஸ்ரேல் இராணுவத்திலிருந்து வெளியேறிய சுமார் 300,000 பேர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யோம் கிப்பூர் போருக்குப் பின் இழப்பு:
யோம் கிப்பூர் போருக்குப் பிறகு இஸ்ரேலில் நடந்த வன்முறையிலேயே, பல பணயக் கைதிகள் எல்லையைத் தாண்டி காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டனர். ஹமாஸின் தரை, வான் மற்றும் கடல்வழி தாக்குதல்களில் பொதுமக்கள், ராணுவத்தினர் என குறைந்தது 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது. 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஏவப்பட்ட 7,000 ராக்கெட்டுகளுடன் கூடுதலாக 5,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலிய எல்லைக்குள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது
இஸ்ரேலும் அமெரிக்காவும் பணயக்கைதிகளை விடுவிக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வதாக சபதம் செய்துள்ளன. தற்போது காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான தரை வழி தாக்குதலை ஆரம்பிக்கும் என்று இஸ்ரேல் அறிவித்ததை அடுத்து, ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் புகலிடம் தேடி தெற்கு காசாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.
ஜெர்மனி முயுனிச் ஒலிம்பிக்ஸ் பணய விவகாரம்:
பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் இஸ்ரேலின் மீது நீண்ட காலமாக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. குண்டு வைப்பது, ராக்கெட்டை ஏவி தாக்குவது என அனைத்தையும் கையாண்டன. இஸ்ரேல் எதற்கும் சளைக்கவில்லை. பாலஸ்தீன தீவிரவாத தாக்குதல்களை திறம்பட எதிர்கொண்டது. உலகிலேயே சிறந்த உளவுப்படை எதுவென்றால் அது இஸ்ரேல் நாட்டின் மொசாட் என நீண்ட காலமாக விளங்கியது.
பாலஸ்தீன அமைப்புகளால் வெளி நாடுகளிலும் இஸ்ரேலியர்களின் மீது தாக்குதல் நடத்தாப்பட்டது.
1972 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் முயுனிச் (Munich) நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்ளச் சென்ற 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை Black September என்ற பாலஸ்தீனிய இயக்கதைச் சேர்ந்தவர்கள் பணயமாக பிடித்து பின்னர் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேலிய உளவு நிறுவனம் ஒலிம்பிக் வீரர்களைக் கொன்ற 11 பாலஸ்தீன தீவிரவாதிகளை உலகம் முழுவதும் சுமார் 20 ஆண்டுகள் தேடி வேட்டையாடிக் கொன்றது. முயுனிச் சம்பவத்தையும் அதன் தொடர்ச்சியாக தீவிரவாதிகளை இஸ்ரேல் இராணுவம் வேட்டையாடுவதையும் மையமாக வைத்து ஸ்டீபன் ஸ்பீல்பர்க் ”முயுனிச்” என்ற பெயரில் திரைப்படம் எடுத்து 2005 ஆம் ஆண்டு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
ஏர் பிரான்ஸ் விமான கடத்தல்:
1976 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 27இல் இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ்விலிருந்து பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானம் ஏதன்ஸ் நகரில் தரை இறங்கிய போது, பாப்புலர் ஃப்ரண்ட் (PFLP) என்ற பாலஸ்தீனிய அமைப்பைச் சேர்ந்தவர்களும், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு தீவிரவாத அமைப்பும் சேர்ந்து விமானத்தைக் கடத்தினார்கள்.
கடத்தப்பட்ட விமானம் உகாண்டா நாட்டில் உள்ள எண்டபி விமானத் தளத்திற்கு கடத்திச் செல்லப்பட்டது. விமானத்தில் 304 பயணிகள் மற்றும் 12 சிப்பந்திகள் உட்பட 316 பயணம் செய்தனர்.
இஸ்ரேலிய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்ட பாலஸ்தீன
தீவிரவாதிகளின் கோரிக்கையாக இஸ்ரேலில் உள்ள 40 தீவிரவாதிகளையும், கென்யா நாட்டில் உள்ள 13 தீவிரவாதிகளையும் விடுதலை செய்யவேண்டும்.
இஸ்ரேலிலிருந்து எண்டபி நகரம் சுமார் 4000 கி.மீ தொலைவில் இருந்தது. இஸ்ரேல் காரியத்தில் இறங்கியது.
ஒபரேஷன் தண்டர்போல்ட் – Operation Thunderbolt:
பதிலடியாக இஸ்ரேலில் ஆபரேஷன் தண்டர்போல்ட்க்கு (Operation Thunderbolt) ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஜுலை 3 ஆம் தேதி இரவு, நான்கு கனரக விமானங்கள் (ஹெர்குளிஸ் சி 130) தயாராகின. உருவில் பெரியதாக இருக்கக்கூடிய விமானங்கள். 100 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் விமானங்களில் ஏறிக்கொண்டனர்.
இராணுவத் தளவாடங்களும், ஆயுதங்களும் ஏற்றப்பட்டன. மருத்தவர்களும், செவிலியர்களும் ஏற்றப்பட்டனர். விமானங்கள் எண்டபிக்கான 4000 கி.மீ பயணத்தை தொடங்கின. கடல் மார்க்கமாகவே விமானங்கள் ஓட்டிச் செல்லப்பட்டன.
நான்கு விமானங்களும் எண்டபி விமான நிலையத்தில் சத்தமில்லாமல் தரை இறங்கின.
விமானத்திலிருந்து இராணுவ பீரங்கிகள் மற்றும் ஜீப்புகளுடன் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் இறங்கினர். திடீர் அதிரடியால் பணயக் கைதிகளை விடுவித்து இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கூட்டிச் செல்லும் வழியில், தீவிரவாதிகள் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் உகாண்டா இராணுவமும் சேர்ந்துகொண்டு, மீட்புக் குழுவினருக்கும், தீவிரவாதிகளுக்கும்/உகாண்டா இராணுவ வீரர்களுக்கும் நடந்த இந்தச் சண்டையில் மேலும் இரண்டு பணயக் கைதிகளும் ஒரு இஸ்ரேலிய தளபதியான யோனாதன் நேத்தன்யாஹூம் கொல்லப்பட்டனர்.
பிரதமர் நேத்தன்யாஹூவின் அண்ணன் களப்பலி:
இவர் வேறுயாறும் அல்ல, இன்றைய இஸ்ரேலின் பிரதம மந்திரியான பெஞ்சமின் நேத்தன்யாஹூவின் தமையனார். கடத்தல்காரர்கள் தரப்பில் அனைத்து கடத்தல்காரர்களும் உயிரிழந்தனர். உகாண்டா இராணுவத்தைச் சேர்ந்த 40 வீரர்களும் நடந்த சண்டையில் கொல்லப்பட்டனர். மீட்பு முயற்சி சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்றது.
ஏனைய பணயக் கைதிகளும், இஸ்ரேலிய இராணுவ வீரர்களும் இஸ்ரேல் நாடு திரும்பினர்.
ஒபரேஷன் தண்டர்போல்ட் வெற்றிகரமான நடவடிக்கை யாவும் 90 Minutes at Entebee என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இந்தச் சம்பவங்களை வைத்து ஹாலிவுட்டில் பல திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் The Delta Force எனும் படம் குறிப்பிடத்தக்கது
போர் நிறுத்தம் வாய்ப்பு இல்லை?
ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பு இல்லை என தற்போது இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளஆர். ஹமாஸ் அமைப்பிடம் 199 பேர் பிணை கைதிகளாக உள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது. தற்போது 199 பேர் பிணைய கைதிகள விடுவிக்கும் வரை போரை நிறுத்துவது பற்றியோ, அல்லது படைகளுடைய எண்ணிக்கையை குறைப்பது பற்றியோ எந்த முடிவுக்கும் வர முடியாது என இஸ்ரேல் ராணுவம் தெளிவாக கூறியுள்ளது.
காசா பகுதிகளில் உள்ள நிலத்தடி சுரங்க பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் இவர்களை பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்களை மீட்பதற்காகத்தான் வடக்கு நோக்கி முற்றுகை தொடர்வதாக கூறப்படுகிறது. இஸ்ரேலில் ஏற்கனவே அவசர நிலை பிரகனப்படுத்தப்பட்ட நிலையில், பதட்டமான சூழல் இன்னமும் நிலவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தப் போரால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் விநியோகம் தெற்கு காசா பகுதியில் விநியோகிக்கப்பட்டாலும் அங்கு குழாய்கள் உடைக்கப்பட்டதன் காரணமாக மக்களுக்கு போதிய அளவில் கிடைக்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது.
இந்தப் போரை நிறுத்த எங்களுக்கு என்ன வழி செய்வது என்று தெரியவில்லை என வெளிப்படையாகவே ஐநாவின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார். எங்களுக்கு உதவி தேவை, பாதுகாப்பான இடங்கள் பற்றிய தெளிவு தெரியவில்லை. குறிப்பாக மக்களை வெளியேற்றுவதற்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆயினும் தற்போது ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பு இல்லை என இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More