Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 42 வயதில் தடகளம், 65 பதக்கங்கள் வென்று அசத்தும் பெண் காவலர்!

42 வயதில் தடகளம், 65 பதக்கங்கள் வென்று அசத்தும் பெண் காவலர்!

4 minutes read

42 வயதில் தடகளம்… 50 வயதில் அதகளம்! – 65 பதக்கங்கள் வென்று அசத்தும் பெண் காவலர்!

58 வயசுக்குப் பிறகு ஓய்வு பெற்றாலும் என்னோட விளையாட்டும் ஓட்டப்பயிற்சியும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். நமக்கு வயசாயிடுச்சோன்னு நினைச்சாதான் பிரச்னை. சாதிப்பதற்கு வயதோ, வேலையோ ஒரு தடையல்ல!

நேரக்கணக்கு இல்லாத பணிகளில் காவல்துறையின் பணியும் ஒன்று. அத்தகைய பணிகளில் இருந்துகொண்டே, 42 வயதில் தன் சொந்த முயற்சியில் பயிற்சியாளர்கள் எவரின் வழிகாட்டுதலும் இல்லாமல் விளையாட ஆரம்பித்து, கடந்த எட்டு ஆண்டுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உட்பட 65 பதக்கங்களை வாங்கிக் குவித்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த ஆயுதப்படைத் தலைமைப் பெண்காவலர் ஶ்ரீரஞ்சனி. ‘வயது என்பது வெறும் நம்பர் மட்டும்தான். அதை நினைத்துப் பார்த்தால் சாதிக்க முடியாது’ என்று சொல்லும் ஶ்ரீ ரஞ்சனியை சந்தித்துப் பேசினோம்.

“திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிதான் எனக்குச் சொந்த ஊர். பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், வாலிபால், ஈட்டி எறிதலென்று தடகளப் போட்டிகளில் முதல் ஆளா ஆர்வத்தோட கலந்துக்குவேன்.

மாவட்ட அளவுல நிறைய பரிசுகளும் வாங்கியிருக்கேன். விளையாட்டுத்துறையில சாதிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, 12-ம் வகுப்பு முடிச்சதுமே மேற்படிப்பு ஏதும் படிக்க வைக்காமல் கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க.

கல்யாணத்துக்குப் பிறகு பகுதிநேரமா கம்ப்யூட்டர், கூட்டுறவு பட்டயப்படிப்பு, கம்ப்யூட்டர் பட்டயப் பயிற்சின்னு படிச்சேன். தொடர்ந்து, தேயிலைத் தோட்டத் தொழிற்சாலை ஒன்றில் அக்கவுன்ட்ஸ் செக்‌ஷன்ல வேலைக்குச் சேர்ந்தேன்.

விளையாட்டுத்துறை என்னோட ஒரு ஆசை என்றால், போலீஸ் வேலைக்குப் போகணுங்கிறது இன்னொரு ஆசை. இரண்டாம் நிலை பெண்காவலர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானதும், உறவினர் ஒருவர் என்னைப் போலீஸ் வேலைக்கு அப்ளை பண்ணச் சொன்னார். போலீஸ் வேலைன்னு சொன்னதும் கணவர், குழந்தைகளுக்குப் பிடிக்கலை.

ஆனா, கனவை நனவாக்க எனக்குக் கிடைச்ச வாய்ப்பா நான் அதை நினைச்சேன். வீட்டுல யாருகிட்டயும் சொல்லாம நானே அப்ளிகேஷனை பூர்த்தி செஞ்சு அனுப்பினேன். மாமனாரோட அனுமதியோட எழுத்துத்தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். உடல்தகுதித் தேர்வுலயும் நல்ல மார்க் வாங்கி 2001-ல் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை காவலரா பணியில் சேர்ந்தேன். இப்போ ஆயுதப்படையில் தலைமைக் காவலரா இருக்கேன்.

கல்யாணமாகி 13 வருசம் கழிச்சு போலீஸ் வேலையில சேர்ந்தப்ப, அதைக் கிண்டல் செஞ்சவங்கதான் அதிகம். ‘இந்த வயசுல குடும்பத்தையும் பார்த்துகிட்டு, வேலையையும் பார்க்க முடியுமா… மத்த வேலைனா பரவாயில்ல.

போலீஸ் வேலை வேற’னு என் காதுபடவே பேசினாங்க. ஆனா, அவங்களோட பேச்சுகள் என்னை இன்னும் உத்வேகப்படுத்தியதுங்கறதுதான் உண்மை. உடல் ஆரோக்கியத்துக்காகத் தினமும் ஓட்டப்பயிற்சி, உடற்பயிற்சிகளைச் செய்வேன். போலீஸ் வேலையில நேரம் கிடைக்காதுங்குறதுக்காக வழக்கமான ஓட்டப்பயிற்சியை நிறுத்தலை. தினமும் காலை 4 மணி முதல் 6 மணி வரைக்கும் ஓட்டப்பயிற்சி, உடற்பயிற்சிக்கான நேரமா ஒதுக்கினேன்.

காவலர் பயிற்சிக் கல்லூரி மைதானத்துல தொடர்ந்த என்னோட பயிற்சியைக் கவனிச்சிட்டு வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சாமிதாஸ் என்பவர், ‘நானும் ரொம்ப நாளா கவனிச்சுட்டு வர்றேன். தினமும் காலையில கிரவுண்டுக்கு வந்துடுறே. நல்லா பயிற்சி செய்யுற. ஏன் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கக் கூடாது? கோவை மாவட்ட மூத்தோர் தடகள விளையாட்டுச் சங்கம் ஒண்ணு இருக்கு. நானும் அதுல உறுப்பினர்தான். 40 வயசுக்கு மேற்பட்டவர்களுக்கான எல்லா விளையாட்டுப் போட்டிகளும் நடக்கும். நீயும் கலந்துக்கோ. ஆர்வம் இருக்குறதுனால உனக்கு வெற்றி நிச்சயம்’ எனச் சொல்லி உற்சாகப்படுத்தினார்.

பள்ளிக்கூடத்தோட முடிஞ்சு போச்சுன்னு நினைச்ச விளையாட்டை விளையாட இப்போ, இரண்டாவதா இன்னொரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதைத் தவற விட்டுடக் கூடாதுன்னு முடிவு பண்ணினேன். அப்போ எனக்கு வயசு 42. அடுத்த நாளில் இருந்து விளையாட்டுப் போட்டிக்காகக் கடுமையா பயிற்சி செய்ய ஆரம்பிச்சேன்.

அப்போதும்கூட, ‘இந்த வயசுல என்ன விளையாட்டு விளையாடப்போற?’ன்னு கிண்டலாத்தான் பேசுனாங்க. ஆனா, நான் அதைப்பொருட்படுத்தலை. அந்த வருசம் நடந்த கோவை மாவட்ட அளவில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடகள விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகிட்டேன். இதில், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகிய மூணு விளையாட்டுப் போட்டிகளிலுமே தங்கப் பதக்கம் வென்றேன்.

மீண்டும் விளையாட்டில் களமிறங்கிய முதல் முயற்சியிலேயே வென்றதை எல்லாருமே பாராட்டினாங்க. தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் இதே மூன்று பிரிவு போட்டிகளிலும் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றேன்.

தொடர்ந்து, பெங்களூரு, கோவா, மைசூர், ஹைதராபாத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நடந்த போட்டிகளிலும், காவல்துறையினருக்காக நடத்தப்படும் போட்டிகளிலும் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றேன்” என்றவர் சிறிது இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தொடர்ந்தார்.

“இப்ப என் வயது 50. கடந்த 8 ஆண்டுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என இதுவரை 65 பதக்கங்களையும், கோப்பைகளையும் வென்றுள்ளேன். ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 4 முறை கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தும் போதுமான பயிற்சி இல்லாததுனால கலந்துகொள்ள முடியலை.

என்னோட கணவர் தட்சிணாமூர்த்தி ஒரு விவசாயி. எனக்கு தட்சண்யான்னு ஒருமகளும் அருண் பிரசன்னான்னு ஒரு மகனும் இருக்காங்க. ரெண்டு பேருக்குமே கல்யாணமாயிடுச்சு.

பேரக் குழந்தைகளும் இருக்காங்க. என் மகளுக்குக் கல்யாணம் முடிச்சுக் கொடுத்த பிறகுதான் முதல் போட்டியில் கலந்துகொண்டேன். இப்போ, பேரக் குழந்தைகள் பிறந்த நிலையிலும் என்னால் விளையாட்டுகளில் சாதிக்க முடியுதுன்னா அதுக்குக் காரணம் என்னோட தன்னம்பிக்கைதான். உடற்பயிற்சி, விளையாட்டுகளால் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன் மருத்துவமனை வாசலில் நிற்பதையும், வீண் மருத்துவச் செலவுகளையும் தவிர்க்கலாம்.

58 வயசுக்குப் பிறகு ஓய்வு பெற்றாலும் என்னோட விளையாட்டும் ஓட்டப்பயிற்சியும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். நமக்கு வயசாயிடுச்சோன்னு நினைச்சாதான் பிரச்னை. சாதிப்பதற்கு வயதோ, வேலையோ ஒரு தடையல்ல!” எனத் தன்னம்பிக்கையுடன் முடித்தார் ஸ்ரீரஞ்சனி.

நன்றி – இ.கார்த்திகேயன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More