Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை இவ்வளவுக்கு மத்தியிலும் ஈழத்தில் பொங்கல்: தீபச்செல்வன்

இவ்வளவுக்கு மத்தியிலும் ஈழத்தில் பொங்கல்: தீபச்செல்வன்

3 minutes read

இராணுவ பொங்கல்க்கான பட முடிவுகள்"

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால், அவர்களின் பண்பாட்டையும் மொழியையும் அழித்தால் போதும் என்பது ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கம். ஈழத் தமிழினம், கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இன அழிப்பை சந்தித்து வருகின்றது. குறிப்பாக பண்பாடு சார்ந்த இன அழிப்புக்களை மிகவும் நுட்பமாகவும் வேகமாகவும் கண்ணுக்கு தெரியாத வகையிலும் இலங்கை அரசு முன்னெடுத்து வருகின்றது. ஈழத் தமிழினம் தமது உயிரையும் உரிமையையும் காத்துக்கொள்ளுவதற்கு மாத்திரம் போராடவில்லை, மாறாக பண்பாட்டு உரிமைகளுக்காகவுமே ஆயுதம் ஏந்தியும் இன்று ஆயுதமற்றும் போராடுகின்றது.

ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், பொங்கல் என்பது மிகவும் முக்கியத்துவம் பாய்ந்த பண்டிகையாகும். தைப்பொங்கலே தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகின்றது. ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையில் நாட்களல் நகர்ந்தாலும் ஈழத்தில் தமிழ் ஆண்டுப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்கின்ற பண்பாடு காணப்படுகின்றது. எத்தகைய போர்க் காலத்திலும் எறிகணைகள், குண்டு மழைக்கு மத்தியிலும் புதிய மண் பானை வைத்து பொங்கி சூரியனுக்கு படைத்துவிட்டு இடம்பெயர்கின்ற மக்கள் எமது மக்கள்.

பொங்கல் என்பது இரண்டு வித்தில் முக்கியத்தும் பெறுகின்றது. அது தமிழ் மக்களின் பண்பாட்டுச் சிறப்பையும் மாண்பையும் எடுத்துரைக்கின்றது. தமிழர்கள் இயற்கையை தெய்வமாக வழிபடுகிறவர்கள். அத்துடன் பசுக்களையும் தெய்வமாக வழிபடுகின்ற கருணை கொண்டவர்கள். தைப் பொங்கலின்போது, பொங்கி சூரியனுக்கு படையல் செய்கிறோம். இந்த உலகம் சிறப்பாக நகர வேண்டும் எனில் இயற்றை சீராக இருக்க வேண்டும். இன்றைக்கு மனிதர்கள் இயற்கைக்கு எதிராக பல்வேறு செயல்களை செய்து, இயற்கை சீற்றங்களுக்கும் பாதிப்புக்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றார்கள். பேரழிவுகள் இதனால் ஏற்படுகின்றன.

இயற்கையை தெய்வமாக வழிபட்டு, இயற்கையை பேணினால் இத்தகைய சிக்கல்கள் ஏற்படாது. தமிழ் மக்களின் பண்பாட்டில் இயற்கையை பேணி வணங்குகின்ற செயற்பாடுகள்தான் நிறைந்திருக்கின்றன. இயற்கையை பேண வேண்டும். பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய எண்ணங்களும் அறிவியலும்தான் தமிழ் மக்களின் வணக்க முறைகளின் பண்பாட்டு அம்சங்கள் எனலாம். அதில் முதன்மையானது தைப்பொங்கல் ஆகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தைப்பொங்கல் பண்பாடு ஆதிகால அம்சங்களில் இருந்து வெகுவாக மாறியிருக்கிறது. நாகரிகம், நவீன வாழ்க்கை முறையால் குக்கர் பொங்கலாக சுருங்கிய நிலமைகளும் காணப்படுகின்றன. அத்துடன் இந்திய அரசு தைப்பொங்கல் திருநாளை விடுமுறையாக அறிவிக்காமையும் தமிழக மக்களுக்கு பெரும் தாக்கத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈழத்தில் பொங்கல் எப்படி? என்பதுதான் தமிழகத்தில் உள்ளவர்களதும் புலம்பெயர்ந்த மக்களதும் முக்கிய விசாரிப்பு. ஈழத்தில் வீட்டுக்கு வீடு இன அழிப்பு போரின் பலவிதமாக பாதிப்புக்கள். போரில் தாய் தந்தையை இழந்த குழந்தைகள், சிறுவர் இல்லங்களிலும் தெருக்களிலுமாக உள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடும் தாய்மார்கள் ஒரு புறத்தில் கண்ணீரும் கம்பலையாகவும் தெருக்களில் இருந்து போராடுகின்றனர். சிறைகளில் அரசியல் கைதிகள். ஒவ்வொரு பொங்கலுக்கும் கணவர் வருவார், அப்பா வருவார் என்று காத்திருக்கும் பெண்களும் குழந்தைகளும் இன்னொரு புறத்தில் துயர வாழ்வு வாழ்கின்றனர்.

இவர்களின் வீடுகளில் பொங்கல் எப்படி இருக்கும்? இந்த மக்களின் பொங்கல் துயரப் பொங்கல்தான். இவ்வளவுக்கு மத்தியிலும் ஒரு வாழ்வை ஈழ மக்கள் வாழ்ந்துதான் ஆக வேண்டும். இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் ஒரு பூ மலர்வதைப் போலவே ஈழ மக்கள் தமதது பண்பாட்டு பண்டிகைகளும் அனுசரித்துச் செல்கின்றனர். 2009இற்கு முன்னரான காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க்களத்திலும் பொங்கல் செய்வார்கள். விடுதலைக்கான பொங்கலாக போராட்டம் நடந்த காலத்தில் புலிக் கோலமிட்டு, புதிய பானை வைத்து போர்க்களத்தில் பொங்கி தமிழ் பண்பாட்டை தாத்தனர் விடுதலைப் புலிகள்.

போர் முடிந்து இந்தப் பத்தாண்டுகளளில் எத்தனையோ பண்பாட்டு தாக்குதல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஈழத் தமிழ் மக்கள் முகம் கொடுத்து விட்டனர். ஈழ மக்களின் புனித ஆலயங்கள்மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. ஈழத்து சைவ சுவாமிகள்மீது தாக்குதல்களை சிங்கள காடையர்கள் செய்துள்ளனர். நிலத்தை பிடிப்பதும் புத்தர் சிலைகளை குடியேற்றுவதாக ஒரு போர் நடந்து கொண்டே இருக்கின்றது. நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பொங்கல் செய்வதற்கு சிங்களப் பேரினவாதிகள் ஏற்படுத்திய தடைகளையும் இடையூறுகளையும் ஈழ மக்கள் மறந்திரார்.

அதைப்போல, முல்லைத்தீவு செம்மலை பிள்ளையார் ஆலயத்தில், ஆயிரம் பானை வைத்து பொங்கல் செய்தபோது, அங்கு ஆலய வாளகத்தில் அடாத்தாக குடியேறி விகாரை காட்டிய சிங்கள பிக்கு பொங்கல் பானைகளை தூக்கி எறிந்து அட்டாசகம் செய்தமை, ஒரு பண்பாட்டு மீறலும் அழிப்புமாகும். இன்றைக்கு சைவ ஆலயங்களை இலக்கு வைத்து, விகாரைகளை கட்டுவது, புத்தர் சிலையை குடியேற்றுவது என்று ஈழத் தமிழ் இனத்தின் பண்பாடு மீது போர் தொடுக்கப்படுகின்றது. ஒரு புறத்தில் இராணுவமும் இராணுவ முகாங்களும். மறுபறத்தில் சிங்கள பிக்குகளும் புத்தர் சிலைகளும் என்று ஈழம் இன்று பண்பாடு போரை எதிர்கொள்கிறது.

இனியாவது தமிழர்களின் வாழ்வில் இன்னல்கள் அகல வேண்டும் என்று வேண்டியபடி பொங்குவோம். ஈழ மண்மீது உண்மையான வெளிச்சம் படர வேண்டும் என்று பொங்கி சூரியனுக்கு படையல் இடுவோம். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீள வீடு திரும்ப வேண்டும் என்றும் அரசியல் கைதிகளாய் சிறையில் வாழ்பவர்களுக்கு விடுதலை வேண்டும் என்றும் இறைஞ்சி பொங்குவோம். பசுக்களுக்குகூட பொங்கி, வழிபட்டு, உணவுட்டும் பண்பாட்டை கொண்ட தமிழ் இனம், இன்று சிறைகளிலும் தெருக்களிலும் வாடிக் கொண்டிருக்கின்றது. உரிமையை இழந்து, பண்பாட்டுக்காகவும் விடுதலைக்காகவும் போராடுகின்றது.

விடுதலையை வென்றெடுக்கும் போராட்டத்தையும் இனியெமது பண்பாடு ஆக்குவாம். அழிவுகளின் மத்தியிலும் பண்பாட்டுக் கூறுகளை கைவிடாதவர்களாய் வாழ்வோம். எமது இனத்தின் மொழி, பண்பாடு, நிலம், உயிரினங்கள் என்று அனைத்தையும் எத்தகைய சூழலிலும் பாதுகாத்து விடுதலையை வென்றெடுப்போம். பண்பாட்டு வழியிலும் போராட வேண்டிய நிலைக்கு ஈழத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது. அப்படிப் பார்க்கையில், பொங்கலைக்கூட ஒரு ஆயுதமாக பண்பாட்டு எழுச்சியாக பொங்க வேண்டும். குமுறும் எமது மனங்கள் போல எத்தனை துயரத்தின் மத்தியிலும் பொங்கல் பானையும் பொங்கட்டும்.

தீபச்செல்வன்க்கான பட முடிவுகள்"

-தீபச்செல்வன். கட்டுரையாளர் கவிஞர் மற்றும் பத்திரிகையாளர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More