Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை எச்சரிக்கை, முகாம் உங்களையும் விழுங்கக்கூடும்!

எச்சரிக்கை, முகாம் உங்களையும் விழுங்கக்கூடும்!

6 minutes read

எந்த இடத்திலிருந்து விடுபட வேண்டும் என அங்கு அடைபட்டிருந்த ஒவ்வொரு நொடியும் ஏங்கித் தவித்தாரோ, எந்த இடத்துக்கு இனி ஒருபோதும் திரும்பி வரக் கூடாது என உறுதிண்டாரோ, அதே இடத்துக்கு ஒரு நாள் நடுங்கும் உடலோடு வந்து பார்வையிட்டார் தாமஸ் புயூர்கெந்தல். ஆஷ்விட்ஸ் முகாம் இருந்த இடத்தில் பல வண்ண காட்டுப்பூக்கள் பூத்துக் கிடந்தன. வானில் சத்தமிட்டபடி பறவைகள் பறந்துகொண்டிருந்தன. தாமஸுக்கு திடீரெனத் தோன்றியது, ‘நான் இங்கே கைதியாக அடைபட்டிருந்தபோது ஏன் ஒரு பறவையைக்கூட வானில் பார்த்ததில்லை?’

நிதானமாக யோசித்தபோது விடை கிடைத்தது. இரவு நேரங்களில் ஆஷ்விட்ஸ் கிரமடோரியம் மும்முரமாக இயங்கிக்கொண்டிருக்கும். எரிக்கப்படும் மனித உடல்களிலிருந்து கிளம்பும் புகை, புகைப்போக்கி வழியாக பல மணி நேரத்துக்குக் கசிந்துகொண்டிருக்கும். சிவப்பும் பழுப்பும் கலந்த நிறத்துக்கு வானம் மாறும் வரை புகை கசிவது நிற்காது. வானில் எவ்வளவோ இடம் இருக்க போயும்போயும் இந்த அசாதாரணமான இடத்துக்கு பறவைகள் ஏன் வரவேண்டும்? தாமஸ் மட்டுமல்ல… அவரைப் போன்ற முன்னாள் முகாம்வாசிகள் பலர் ஒவ்வோர் ஆண்டும் போலந்தில் உள்ள ஆஷ்விட்ஸ் முகாமுக்கு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் நூறு வயதை நெருங்கிக்கொண்டிருப்பவர்கள் அல்லது கடந்துவிட்டவர்கள். அவர்கள் அளிக்கும் வாக்குமூலங்கள் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருக்கின்றன.

ஆஷ்விட்ஸ் 75 ஆண்டுகள்
ஆஷ்விட்ஸ் 75 ஆண்டுகள்

‘‘நான் வதைமுகாமைவிட்டு வெளியில் வந்துவிட்டது உண்மைதான். ஆனால், முகாம் என்னைவிட்டு வெளியில் வர மறுக்கிறது. வெளியேற்ற முயலும் ஒவ்வொரு முறையும் அது மேலும் அழுத்தமாக என்னுடன் ஒட்டிக்கொண்டது. என் நாடி நரம்பெல்லாம் தளர்ந்துபோய்விட்ட பிறகும் அது என்னைவிட்டு விலகுவதாக இல்லை. என் மகிழ்ச்சியை, என் நிம்மதியை, என் வாழ்வை, என் உயிரை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்துத் தின்று அது கொழுத்துக்கொண்டேபோகிறது. நான் சாகும் வரை அது என்னைவிட்டு அகலப் போவதில்லை!” – நியூயார்க்கில் வசிக்கும் 101 வயது லியோன் ஷெர்மான், தன் கையில் பதிக்கப்பட்டுள்ள பி2593 என்னும் அடையாள எண்ணைச் சுட்டிக் காட்டுகிறார்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு போலந்தில் நடத்தப்பட்ட நினைவேந் தலில் 1,500 பேர் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு 200 பேர் மட்டுமே இருந்தனர். அவர்களில் பலர் 100 வயதை நெருங்கிக்கொண்டிருப் பவர்கள். ‘‘நாங்கள் கலந்துகொள்ளும் இறுதி நிகழ்வு இதுவாகத்தான் இருக்கும்’’ என்கிறார்கள் அவர்கள். ‘‘நாங்களும் மறைந்துவிட்டால் முகாமைப் பற்றிச் சொல்ல உங்களுக்கு வேறு யாரும் இருக்க மாட்டார்கள்’’ என்கிறார் லியோன். அவர் தன் கதையை, கடந்த வாரங்களில் மீண்டும் ஒருமுறை விவரித்திருக்கிறார்.

ஆஷ்விட்ஸ் 75 ஆண்டுகள்
ஆஷ்விட்ஸ் 75 ஆண்டுகள்

வதைமுகாமாக மாறிய நகரம்!

“நாங்கள் போலந்தைச் சேர்ந்தவர்கள். எல்லோரையும்போல் இயல்பாக வாழ்ந்து வந்தோம். ஒரு நாள் கண்விழித்துப் பார்த்தபோது நகரம் ஒரு வதைமுகாமாக மாற்றப்பட்டிருப்பதை உணர்ந்தேன். ‘லியோன், மாலை 5 மணிக்குமேல் இனி யூதர்கள் வெளியில் இருக்கக் கூடாதாம். இனி என்னைக் கேட்காமல் எங்கும் போகாதே’ என்று என் அம்மா சொன்னபோதுதான் நான் ஒரு யூதன் என்பதையே உணர்ந்தேன். நான் வெளியில் வந்தால் என்ன ஆகிவிடும், இப்படிப்பட்ட விசித்திர சட்டங்களை ஏன் ஓர் அரசு இயற்ற வேண்டும்? அம்மாவுக்கும் தெரியவில்லை’’ என்றார்.

தன் அண்டை வீட்டாரின் வீடுகள் ஆக்கிர மிக்கப்படுவதையும் கொத்துக்கொத்தாகப் பலர் கைதுசெய்யப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதையும் கண்டு உறைந்துபோனார் லியோன். ‘‘மூன்று வயது குழந்தையுடன் வாழும் அண்டை வீட்டுக்காரர், ஒருநாள் நாஜிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாகச் சொன்னார்கள். நல்ல மனிதரான அவர் ஏன் கொல்லப்பட வேண்டும், அவர் இல்லாமல் அந்தக் குழந்தை என்ன செய்யும், யார் இந்த நாஜிகள், அவர்களுக்கு என்னதான் வேண்டும்?’’

1944, மே மாதம் லியோனின் அம்மாவைக் கைதுசெய்து இழுத்துச் சென்றார்கள். பிறகு லியோனையும். ‘‘முகாம் ஒரு மனிதனை என்ன வெல்லாம் செய்யும் என்பதை, அன்றுதான் நான் முதலில் உணர்ந்தேன். ஒரு கரும்பிசாசுபோல் அது என்னைச் சூழ்ந்து கொண்டது” என்கிறார் லியோன்!

11 லட்சம் பேர் கொலை!

வதைமுகாம்களில் மிகப்பெரியதும் மிகக் கொடூரமானதுமான போலந்தின் ஆஷ்விட்ஸ் முகாம் விடுவிக்கப்பட்ட 75-வது ஆண்டு நிகழ்வை, தனக்குத் தெரிந்த வகைகளிலெல்லாம் நினைவுகூர்ந்துகொண்டிருக்கிறது உலகம். ஆஷ்விட்ஸ் என்பது ஒற்றை முகாமல்ல… நாற்பதுக்கும் மேற்பட்ட முகாம்களின் தொகுப்பு. ஒரு மனிதனை இத்தனை விதங்களில் வதைக்க முடியும், இத்தனை வழிகளில் கொல்ல முடியும் என்பதை நாஜி ஜெர்மனியும் உலகமும் முதல் முதலாகக் கண்டுணர்ந்த இடம். கிட்டத்தட்ட 13 லட்சம் பேர் இந்த முகாமுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கின்றனர். அவர்களில் 11 லட்சம் பேர் வெளியே வரவேயில்லை.

ஆஷ்விட்ஸ் குறித்து பல லட்சம் பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. பல ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டு விட்டன. தாமஸ், லியோன் உள்ளிட்ட ஏராளமானோரின் நேரடி வாக்கு மூலங்கள் நம்மிடையே இருக்கின்றன. புனைவுகள், கவிதைகள், ஓவியங்கள், ஆய்வுகள் என்று சாத்தியமாகக்கூடிய அத்தனை வடிவங்களிலும் முகாமைப் புரிந்துகொள்ள முயற்சிகள் எடுக்கப் பட்டுவிட்டன. இருந்தும் தீர்க்கப்படாத ஒரு புதிரைப்போல், பழக்கப்படுத்த முடியாத ஒரு காட்டுவிலங்கைப்போல் நமக்கு அகப்படாமல் தள்ளி நின்று கொண்டிருக்கிறது முகாம்.

‘‘இப்போதும் விசில் சத்தம் எங்கே யாவது கேட்டால் யாரோ என்னைத் தேடுகிறார்கள் என்றோ, யாரோ என்னைக் கண்டுபிடித்து விட்டார்கள் என்றோ நினைத்துப் பதற ஆரம்பித்துவிடுகிறேன். என்னை எங்கே ஒளித்துக்கொள்வதெனத் தெரியாமல் அழுகிறேன்” என்கிறார் ஆஷ்விட் ஸிலிருந்து விடுவிக்கப்பட்ட மற்றொரு யூதர்.

95 வயது மூதாட்டியான பாட்ஷே வாடாகனை நெருங்கிச் சென்று, ‘‘உங்கள் முகாம் வாழ்க்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ என்று கேட்டபோது அவர் விழித்திருக்கிறார். “என்ன சொல்வதெனத் தெரியவில்லை. என்னிடம் சொற்கள் ஏதும் மிச்சமில்லை. கண்ணீர் மட்டும்தான் இருக்கிறது.”

1944-45 குளிர்காலத்தில் சோவியத் யூனியனின் செம்படை, போலந்துக்குள் நுழைந்தது. லியோன், மரணத்தின் விளிம்புக்குச் சென்றிருந்தார். ‘‘இனியும் முகாம்களை நடத்த முடியாது என்பது தெரிந்துவிட்டதால் நடமாடக்கூடிய எங்களைப் போன்ற சிலரை மட்டும் துப்பாக்கிமுனையில் வெளியில் இழுத்துச் சென்றனர். பசியோடும் குளிரோடும் பயத்தோடும் கிட்டத்தட்ட பத்து நாள்கள் நடந்துகொண்டே இருந்தோம். தப்பி ஓட முயன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்” என்று பதிவுசெய்கிறார் லியோன்.

1945, ஜனவரி 27 அன்று செம்படைகள் ஆஷ்விட்ஸ் முகாமுக்குள் நுழைந்தபோது, காய்ந்த சருகுகள்போல் எலும்பும் தோலுமாக பல மனித உடல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்களில் பலர் உயிருடன் இருப்பதை உணர்ந்தபோது அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். கை – காலை அசைக்க முடியாமல், இமைக்கக்கூட முடியாமல் விரித்த கண்களுடன் கிட்டத்தட்ட 7,000 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்! ஆஷ்விட்ஸ் முகாம் மீட்கப்பட்ட அதிகாரபூர்வமான தினமாக வரலாறு இதைக் குறித்துவைத்திருக்கிறது. விடுவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து லியோன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். ‘‘என்னோடு ஒட்டிக்கொண்டு ஆஷ்விட்ஸும் வந்துவிட்டது” என்கிறார் லியோன்.

இந்த 75 ஆண்டுகளில் என்னவெல்லாம் மாறியிருக்கிறது, என்னவெல்லாம் மாறவில்லை? ஆஷ்விட்ஸ் இருந்த இடத்தில் இன்று மலர் செடிகள் அசைந்தாடிக்கொண்டிருக்கின்றன. ஒருவராலும் வெல்ல முடியாதவராகக் கருதப்பட்ட ஹிட்லர் இறுதியில் தற்கொலை செய்துகொண்டார். தூய ஆரிய நிலத்தைக் கட்டமைக்க வேண்டும் என்னும் அவரது பெருங்கனவு சிதைந்துபோனது.’ உலகமே கண்டு அஞ்சிய ஜெர்மனியின் படைகள் பொடிப்பொடியாக உதிர்ந்து மறைந்தன. நாஜி ஜெர்மனியைக் கசக்கிக் குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டது வரலாறு. சந்தேகமில்லாமல் இது ஒரு பெரும்மாற்றம்.

ஆயிரம் ஆஷ்விட்ஸ்கள்!

அதேசமயம் முழு மாற்றம் இன்னும் ஏற்படவில்லை. வெறுப்புதான் முகாமை உருவாக்கியது என்றால், அந்த வெறுப்பு இன்னமும் செழிப்புடன் இருக்கிறது. நிறத்தின் பெயரால், இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், சித்தாந்தத்தின் பெயரால் மனிதர்கள் அடையாளம் காணப் படுவதும் பிரிக்கப்படுவதும் தாக்கப்படுவதும் உலகெங்கும் தொடர்கிறது. ஒரு ஆஷ்விட்ஸ் அழிந்துவிட்டாலும் குட்டிக் குட்டியாக ஆயிரம் ஆஷ்விட்ஸ்கள் நம் கண்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இன்னமும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. ஒரு ஹிட்லர் அழிந்துவிட்டாலும் பல ஹிட்லர்கள் உருவாவதற்கான சாத்தியங்கள் இன்னமும் உயிர்த்திருக்கின்றன.

மறந்துவிடவேண்டாம். தேர்தல் அரசியல் பாதையில் அடியெடுத்து வைத்துதான் ஒரு சர்வாதிகாரியாக மாறினார் ஹிட்லர். சட்டத்தின் உதவியுடன்தான் மக்களில் ஒரு பிரிவினரை தேசத்துரோகிகள் என்றார். அவர்களுடைய குடியுரிமையையும் பறித்து முகாமில் தள்ளினார். சட்டத்தின் உதவியுடன் தான் ஆஷ்விட்ஸும் இன்னபிற முகாம்களும் கட்டமைக்கப்பட்டன. இன்னொரு ஆஷ்விட்ஸ் உருவாவதைத் தடுக்கும் வலிமை சட்டத்துக்கு இல்லை.

எனில், இன்னொரு ஹிட்லர் உருவாவதை, இன்னொரு ஆஷ்விட்ஸ் உருவாவதை யாராலும் தடுக்கவே முடியாதா? ‘‘முடியும். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துக்கொண்டே இருங்கள்’’ என்கிறார் 93 வயது மூதாட்டியான மரியன் டர்ஸ்கி. ‘‘சகமனிதர்களை யாரேனும் வெறுக்கச் சொல்கிறார் களா, உங்களை இன்னொருவரி டமிருந்து யாராவது பிளவுபடுத்துகி றார்களா, அரசியல் காரணங்களுக் காக யாரேனும் வரலாற்றை வளைக்கிறார்களா, ‘இன்னொரு வரின் அழிவுதான் உங்களை உயர்த்தும்; அவர்களை வீழ்த்தினால்தான் நீங்கள் நிமிர முடியும்’ என்று யாரேனும் உங்களை நம்பவைக்க முயல்கிறார் களா, உங்களுக்கான எதிரிகளை முடிவில்லாமல் யாரேனும் உருவாக்கிக்கொண்டே போகிறார் களா? அவர்களைக் கவனியுங்கள். அவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக இருந்தாலும் சரி… சாமானியர்களாக இருந்தாலும் சரி. அவர்களிடமிருந்து தான் அடுத்த முகாம் தோன்றப்போகிறது. அவர்களிடமிருந்து பிரிந்து நில்லுங்கள். அவர்களுக்கு எதிராக நில்லுங்கள். உங்கள் குரல் அவர்களுக்கு எதிராக ஒலிக்கட்டும்’’ என்கிறார் மரியன்.

“மிக முக்கியமான ஒன்றை மறந்து விடாதீர்கள்” என்கிறார் மரியன். ‘‘சிறுபான்மையினர் பாதிக்கப்படும்போது அமைதியாக இருக்காதீர்கள். `உங்களுக்கு ஏன் வீண் கவலை… முகாம் அவர்களுக்காகத்தானே!’ என்று யாராவது நம்பிக்கையூட்டினால் கேட்காதீர்கள். சிறியதிலிருந்துதான் பெரியது உருவாகும். அதே முகாம் உங்களையும் ஒரு நாள் விழுங்கும். அதை நீங்கள் உணரும்போது நீங்கள் முகாமின் வயிற்றில் இருப்பீர்கள்!”

 

நன்றி : மருதன் | விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More