Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை உங்கள் மனைவி காணாமல் ஆக்கப்பட்டால் எப்படி இருக்கும்?

உங்கள் மனைவி காணாமல் ஆக்கப்பட்டால் எப்படி இருக்கும்?

4 minutes read

ரணிலிடம் அவதானிப்பு மையம் கேள்வி

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என்று ஸ்ரீலங்கா அரசு தெரிவித்திருப்பது இனப்படுகொலைக்கான ஒப்புதல் வாக்குமூலம் என்று தெரிவித்துள்ள அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம், இது குறித்து பன்னாட்டு நீதிப் பொறிமுறைகளுக்கு அமைவாக ஸ்ரீலங்கா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அவதானிப்பு மையம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஒப்புதல் வாக்குமூலம்

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்த போராளிகள் உயிருடன் இல்லை என்பது இனப்படுகொலைக்கான ஒப்புதல் வாக்குமூலமாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் குறைவு என்றும் அதனாலேயே இரண்டு லட்சம் இழப்பீடு தர தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை போராளிகள் எவரும் தம்மிடம் சரணடையவில்லை என்று ஸ்ரீலங்கா இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் ஆணைக்குழு முன்பாக ஸ்ரீலங்கா இராணுவம் சாட்சியம் அளிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளது. “போர் இடம்பெற்ற பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் புலிகளா? பொதுமக்களா? என்பது எமக்குத் தெரியாது. நாம் பொறுப்பேற்று கொண்டபோது பதிவுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை” என்றும் இராணுவம் கூறியுள்ளது.

காணாமல் ஆக்குதல்

முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரின் போது சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் ஒரு லட்சம் பேரளவில் இறுதிப்போரில் இனவழிப்பு செய்யப்பட்டவர்களாக கருதப்படுகின்றது. இப்போரில் சுமார் ஐம்பதாயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டதுடன் இவர்களில் 21ஆயிரம் பேர் சரணடைந்தும் கையளிக்கப்பட்ட நிலையிலேயே சரணடைந்தவர்கள் குறித்து ஸ்ரீலங்கா அரசு கைவிரிப்பை மேற்கொண்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதையே இன்று ஈழத் தமிழ் மக்கள் கோரி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சரணடைந்தவர்கள் மற்றும் கையளிக்கப்பட்டவர்கள் எவ்வாறு இல்லாமல் போக முடியும்? எனவே இதுகுறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் உண்மை நிலையை இந்த உலகத்திற்கு அறிவிக்க வேண்டும்? அவர்கள் எப்படி இல்லாமல் செய்யப்பட்டார்கள் என்றும் இவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் சிங்கள அரசு அறிவிக்க வேண்டும்.

சரணடைந்த குழந்தைகள்

ஈழ இறுதிப் போரில் 59 குழந்தைகள் ஸ்ரீலங்கா அரசிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். பல நூற்றுக் கணக்கான குழந்தைகள் முள்ளிவாய்க்காலில் கொன்றழிக்கப்பட்ட நிலையில் 21ஆயிரம் பேருடன் 59 குழந்தைகள் சரணடைந்துள்ளனர். இவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை சொல்ல வேண்டும் என்றே ஈழத் தமிழ் இனம் போராடுகிறது.

59 குழந்தைகளை காணாமல் ஆக்குவதன் வாயிலாக உலகில் குழந்தைகளை காணாமல் ஆக்குவதில் முதல் தர நாடு என்ற பெருமையை சிங்கள தேசம் பெற்றுள்ளது. குழந்தைகளின் உரிமை தொடர்பிலும் இனவழிப்பு தொடர்பிலும் வரைவிலக்கணங்களை கூறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையும் இன்ன பிற நிறுவனங்களும் சிங்கள இனவழிப்பு அரசை மயிலிறகால் தடவுவதே உலக மக்களுக்கு வேதனை தருகின்ற விடயமாகும்.

சரணடைந்த போராளிகள்

பல ஆயிரம் போராளிகள் அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளாரின் தலைமையில் ஸ்ரீலங்கா அரச படைகளிடம் கையளிக்கப்பட்டனர். அவர்களை பேருந்துகளில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் ஏற்றிச் சென்றதை அப் போராளிகளின் குடும்ப உறவுகள் ஸ்ரீலங்கா அரசின் ஆணைக்குழுக்களின் முன்பாக சாட்சியங்களின் போது பதிவு செய்துள்ளனர் என்பதை அவதானிப்பு மையம் நினைவுபடுத்துகிறது. அவ்வாறு கையளிக்கப்பட்டவர்களும் போர் முடிந்த பிறகு சரணடைந்தவர்களும் எவ்வாறு உயிரிழக்க முடியும்?

அவர்களை ஸ்ரீலங்கா அரசும் அதன் படைகளும் கொன்றிருந்தால் அது மாபெரும் இனப்படுகொலையாக கருதப்படும். ஏற்கனவே போர்க்களத்தில் இனப்படுகொலையை செய்த ஸ்ரீலங்கா அரச படைகள் போர்க்களத்திற்கு வெளியிலும் இனப்படுகொலையை புரிந்ததுவா என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். உயிருடன் கொடுக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழை வழங்குவது என்பது மாபெரும் இனப்படுகொலையாகும். இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து சர்வதேச விசாரணை மற்றும் பொறிமுறையின் கீழ் வெளிக்கொணரப்பட வேண்டும்.

சர்வதேச விசாரணை வேண்டும்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என்றும் போராளிகள் தம்மிடம் சரணடையவில்லை என்றும் ஸ்ரீலங்கா அரசு மற்றும் ஸ்ரீலங்கா இராணுவம் தெரிவித்துள்ள நிலையில் சரணடைந்தவர்கள் மற்றும் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலையை கண்டறிய சர்வதேச விசாரணை நடாத்த வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது. ஸ்ரீலங்கா அரசு இந்த விடயத்தில் கள்ளத்தனமாக செயற்படுவதுடன் உண்மைகளை மறைத்து தமிழ் மக்களை பாரிய உளப் போருக்குள் தள்ளி வருகிறது.

மழைவிட்டும் தூவனம் விடாத கதையாக போர் முடிந்தும் ஈழத் தமிழ் மக்கள்மீதான இனப்படுகொலையை ஸ்ரீலங்கா அரசு இன்னமும் நிறுத்தவில்லை. 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு காலத்திற்கு காலம் பதவி ஏற்கும் ஸ்ரீலங்கா அரசுகள் இந்த விடயத்தில் கள்ள மௌனம் சாதித்து வருவதுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துக்கள் வாயிலாகவும் ஈழ மக்களை இனவழிப்பு செய்து பழி தீர்த்து வருகின்றமையை சர்வதேசம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ரணில் ஆட்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இல்லை என்ற கைவிரிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. 2017இல் யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என்று ஸ்ரீலங்கா பாராளுமன்றத்திலும் அப்போது பிரதமராக இருந்து ரணில் இதனைக் கூறியதுடன் தற்போது ஜனாதிபதியாகவும் மீண்டும் அதனை கூறியுள்ளமை முக்கிய சாட்சியமாகும். உயிருடன் கையளிக்கப்பட்டவர்கள் எப்படி காணமல் போக முடியும்? ரணில் அவர்களே, உங்கள் மனைவி காணாமல் போனால் எப்படி இருக்கும்? இதே பதிலை சொல்வீர்களா?

வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு வீடுகளும் ஸ்ரீலங்கா அரசு மற்றும் இராணுவத்தின் இச் செயற்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசு மற்றும் இராணுவம் தெரிவித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தை சர்வதேச நீதிப் பொறிமுறைகளுக்குள் உள்வாங்கி விசவாரணையை நடாத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்பதை அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் வலியுறுத்தி நிற்கிறது…” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More