Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை “தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் -6 | வதிலைபிரபா

“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் -6 | வதிலைபிரபா

2 minutes read

கட்டுரையாளர் – வதிலைபிரபா

“மகாகவி” இதழில் மௌன தீபன் எழுதும் “சிற்றிதழ் மோசடிகள்” பெரும் கண்டனத்தைப் பெற்றது என்பதைவிட அந்தக் கட்டுரை இதழுக்கு வன்மையான கண்டனத்தையும் தந்தது. கட்டுரையானது துட்டிலக்கியம்” சொல்லாடல் குறித்து பல்வேறு கேள்விகளையும், கண்டனங்களையும் பதிவு செய்திருந்தது. “குமுதம், விகடன் போன்ற பேரிதழ்களினால் உந்தப்பட்ட ஒருசில சிற்றிதழாளர்கள் தம்மையும் அவ்வாறே நினைத்து இதழ் நடத்துவதும் பின்னர் காணாமல் போனதும் தொடர்கதைதான்” என்பதைத் தம் கட்டுரையின் வழி ஆமோதித்தும் இருந்தார்.. தொடர்ந்து அவர்,

“துட்டை (பணத்தை) செலவழித்து, புகழுக்காக ஏன் இதழை நடத்தவேண்டும்? சிற்றிதழ்களெனும் பெயரில் வருகிற இதழ்களை ‘வெகுஜன இதழ்கள்’ மிகுந்த மரியாதையோடு அங்கீகரிக்கின்றன. இதற்குப் போன தலைமுறையின் உதாரணங்கள் உண்டு. மார்க்சிய சார்புடைய ‘ஜனசக்தி’ லிருந்து ஜெயகாந்தனும், ஞானக்கூத்தனுடைய ‘கடசதபற’லிருந்து பாலகுமாரனும் வெகுஜன இதழில் எழுதி பெரும் பிரபலம் பெற்றார்கள்”. என்றெழுதினார். மேலும் அவர்,

“சிற்றிதழ்கள் என்று சில ஆயிரக் கணக்கான (2,000 மேல்) பெயர்கள் தாங்கி வெளியாகின்றன. தற்போது தொடர்ச்சியாக சில நூறு இதழ்கள் மட்டுமே வருகின்றன. இதில் சிலவைகள் தவிர, மற்றவைகள் சிற்றிதழ்களாகத் தேறாது. அதாவது, அவற்றைத் தமிழில் ஒரு சிற்றிதழ் தோன்றுவதற்குரிய அடிப்படைக் கேள்விகள் கேட்டதற்கான தடயங்களோ, வெகுஜன, வியாபார இதழ்களுக்கெதிரான முக்கியமான மதிப்பீடுகளோ, நிலைப்பாடுகளோ எதுவுமில்லை” என்றார் காட்டமாக.

மகாகவியின் தொடர் கட்டுரைகளால் உந்தப்பட்டு பலரும் கடிதங்களை அனுப்பித் தந்தார்கள்.

“துட்டிலக்கியம்?” இதென்ன புதுக்கேள்வி. காலந்தோறும் இலக்கியத்தின் பெரும்பான்மை பணம் பண்ணவே (பிழைக்க) பயன்பட்டுள்ளது! ஆனால் நிசமான இலக்கியம் தன்னகத்தே கலக குரலை / விமர்சனக் குரலைக் கொண்டிருக்கும். அது மாதிரி இலக்கியத்தைத்தான் (அசல்) வரலாறு ஏற்கும். எனவே பக்கங்களை வீணடிப்பதைவிட நல்ல இலக்கியங்களைப் படித்தல், பரப்புதல் என்ற கோட்பாட்டோடு இயங்கலாம்”. என்றார் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம். இது காட்டமான பதில்தான்.

மகாகவி எந்தக் கருத்தையும் ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. பின்வாங்குவதில்லை என்கிற மூடத்தனமான பழக்கமும் இல்லை. எதிர்க் கருத்து ஏற்புடையதே என்கிற பட்சத்தில் அதை ஆமோதித்து ஏற்றுக்கொள்வதில் மகாகவிக்கு ஒருபோதும் கண்ணியம் குறைந்துபோகப் போவதில்லை என்பதில் தெளிவாக இருந்தது. அரசியலில் வேண்டுமானால் இது இல்லாமல் இருக்கலாம். சிற்றிதழ்களில் இது நிறையவே இருக்கிறது.

“துட்டிலக்கியம்’ அருமையான குறியீடு. பசிக்காகப் புல்லைத் தின்பதற்குத் தயாராய் இருக்கும் சில இலக்கியப்புலி(!)களை இனம் காண அற்புதமான பெயர். அடைமொழிப்படுத்த பெயரில்லையே என்று தவித்துக்கொண்டிருக்க இதழாளர்கள் அருமையான நாமகரணம் சூட்டிவிட்டார்கள் என்று அவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம். துட்டிலக்கியர்கள் சொரணையில் துடிப்பானவர்கள். எது எப்படியோ, இந்தப் பெயர் துட்டிலக்கியர்களின் மனசாட்சியைக் கண்ணி வெடி அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், ஊசி வெடி அளவுக்காகவாவது மனசாட்சியைத் தட்டி எழுப்பும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை” என்ற ராசி. தங்கத்துரையின் இந்தப் பதிவு இலக்குமிகுமார ஞானதிரவியத்தின் கருத்துக்கு நேர் எதிராக இருந்தது.

“நீங்கள் ஆரம்பித்த துட்டிலக்கிய விவாதம் சூடுபிடிப்பதோடு பலத்த கண்டனத்திற்குள்ளாயிருப்பதும் தெரிகிறது. என்னைப் பொருத்த வரையில் சிறு பத்திரிகைகள் இன்று அரசியல் கருத்தாக்கங்களை வலியுறுத்தும் வகைகளாக ஆகிக்கொண்டிருக்கின்றன. துட்டிலக்கியம் பற்றிய விவாதம் காலப் பொருத்தமற்றது என நினைக்கிறேன்.” யவனிகா ஸ்ரீராம் சற்று நுட்பமான கருத்தொன்றைப் பதிவு செய்திருந்தார். சிற்றிதழ்களின் நகர்வு குறித்த ஓர் ஐயத்திற்கு இவர் விடை அளிக்கிறாரோ என்கிற எண்ணம் எழாமல் இல்லை.

‘துட்டிலக்கியம்’ குறித்த ஆக்கப் பூர்வமான விவாதம் தொடரட்டும். ‘சிற்றிதழ் மோசடிகள்’ என்கிற தலைப்பே உறுத்தலாய் உள்ளது என்று மு. முருகேஷ் கருத்து நமக்கும் உறுத்தியது. சிற்றிதழ்களின் மனசாட்சியாய் ஒற்றை வரியில் மு. முருகேஷ் எழுதியிருந்தார். மனசாட்சியுள்ள சிற்றிதழாளன் என்ன செய்வான்? மகாகவி மௌனதீபனுக்கு இன்னுமொரு வாய்ப்பு தந்தது. “சிற்றிதழ்கள் மோசடிகள்” கட்டுரைக்கு இன்னுமொரு வாய்ப்பு தந்தது. மீண்டும் எழுதினார்.. “சிற்றிதழ்கள் மோசடிகள் -2” ம் வெளிவந்தது.

அந்தக் கட்டுரையின் இறுதி வரிகளை இப்படி முடித்திருப்பார்…

“தமுஎச, கலை இலக்கியப் பெருமன்றத்தின் ‘ஜால்ரா’ இதழ்களோடு ‘மகாகவி’யையும் சேர்க்கலாமா?”

வதிலைபிரபா, தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் சிற்றிதழ் ஆசிரியர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More