Sunday, May 5, 2024

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ஈழத் தமிழரை ஏமாற்றி ஸ்ரீலங்கா அரசை காப்பாற்றி நலன்களை அள்ளவா?

ஈழத் தமிழரை ஏமாற்றி ஸ்ரீலங்கா அரசை காப்பாற்றி நலன்களை அள்ளவா?

3 minutes read

சர்வகட்சி கூட்டம் எனும் நாடகம்

சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம்

ஈழத் தமிழ் மக்களை ஏமாற்றி ஸ்ரீலங்கா அரசை காப்பாற்றி, சர்வதேசத்தின் நலன்களை அள்ளவே தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கான சர்வகட்சி கூட்டம் எனும் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம், சர்வதேச தலையீடு வழியாகவே தமிழர்களுக்கான நீதியும் தீர்ப்பும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து அவதானிப்பு மையம் மேலும் கூறியுள்ளதாவது:

நரிகளின் கூட்டம்

“அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் நரி எனப்பட்ட ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தனது நரித் தந்திரங்களை பிரயோகிக்கத் துவங்கியுள்ளார். கடந்த 13ஆம் திகதி ஸ்ரீலங்கா ஜனாதிபதி அலுவலகத்தில் ரணில் தலைமையில் இடம்பெற்ற சர்வ கட்சிக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் பங்கேற்றனர்.

அத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சிவி விக்னேஸ்வரன், சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் உட்பட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொண்ட நிலையில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இக் கூட்டத்தை புறக்கணித்திருந்தனர்.

தீர்வுக்கு இணக்கமாம்

இதேவேளை இச் சந்திப்பின் போது தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்ற விடயத்தில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்களுக்கும் உடனடி தீர்வுகளை வழங்க சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ரணில்மீது தமது அபார நம்பிக்கையை தமிழ் தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் ஜனவரி 31இற்கு முதலில் அடுத்த சந்திப்பு நடைபெறும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரதினத்திற்கு முன்னர் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் ரணில் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தமிழ் தலைவர்கள் கூறியுள்ளனர். மிக முக்கியமாக 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் கோரிக்கையை தமிழ் கட்சிகள் வலியுறுத்தி உள்ளதாக சொல்லப்படுவதே இச் சந்திப்பினால் என்ன விளைவு தமிழர்களுக்கு கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது.

நடப்பது நாடகம்

ஸ்ரீலங்கா அரசு இவ்வாறு தமிழ் கட்சிகளை அழைப்பதும் நாளையே தீர்வை தருகிறோம் என்று சொல்வதும் கடந்த காலத்திலும் நடைபெற்றுள்ளது. இன்னும் கூறினால் இதைவிட படம் காட்டும் சந்திப்புக்களை மகிந்த ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்சவும் நடாத்தியுள்ளனர். அத்துடன் சந்திரிகா முதல் ஜே.ஆர். ஜெயவர்த்தனா காலம் வரையில் இப்படியான சந்திப்புக்கள் நடப்பதும் பின்னர் அவை காற்றில் கரைந்து போவது கடந்த கால வரலாறு.

தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா அரசு சொல்லுகின்ற நிலை ஏற்படுகிறது என்றால் ஸ்ரீலங்கா அரசு கடுமையான நெருக்கடியில் உள்ளது என்று அர்த்தமாகும். அத்துடன் தனது நெருக்கடிகளை நீக்கவும் தவிர்க்கவும் இத்தகைய நாடகங்களை நடாத்துவது வழக்கமானது. தற்போது இந்த நாடகங்களை நடத்துவதில் மிகத் தேர்ந்த நடிகனான ரணில் தமிழ் கட்சிகளை இணைத்து சர்வகட்சி கூட்டம் எனும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

ஏன் இந்த நாடகம்?

ஸ்ரீலங்கா அரசு ஈழத் தமிழ் மக்கள்மீது மேற்கொண்ட கடும் ஒடக்குமுறைகள் மற்றும் இனவழிப்புக்களின் பாவத்தை தற்போது அறுவடை செய்து வருகின்றது. கடந்த இரண்டு வருடங்களாக ஸ்ரீலங்கா பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது. பொருட்களின் தட்டுப்பாடு, பண இருப்பு இல்லாமை, நாட்டில் பஞ்சம் பசியினால் சமூகப் பிரச்சினைகள் என்று ஸ்ரீலங்காவின் இன்றைய நிலை பெரும் பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இனப்படுகொலை குற்றங்களுக்கான விசாரணைகட கோரல்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் இனத்தின் நீதிக்கான குரல்கள் என்பன ஸ்ரீலங்காவை நெருக்கடிக்கு தள்ளுகின்றன. ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைத்தால் பொருளாதார நெருக்கடி தீர்க்க வழி கிடைக்கும் மற்றும் சர்வதேச நாடுகளின் அனுசரனை கிடைக்கும் என சில உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றது. இதனால் தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதுபோலான நாடகத்தை ரணில் அரங்கேற்றியுள்ளார்.

தேவை சுயநிர்ணய உரிமை

தற்போதைய சந்திப்பின் போதும் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழர் தலைமைகள் வலியுறுத்திருப்பது ஈழத் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடியது. 13 நடைமுறையில் உள்ள காலத்தில் தான் ஒன்றரை லட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். 13ஐ கீழே வைத்திருக்கும் ஒற்றையாட்சி என்பது ஸ்ரீலங்கா அரசின் பௌத்த சிங்களப் பேரினவாத்தையும் அதன் வழியாக ஈழத் தமிழ் மக்கள்மீது மேற்கொள்ளப்படும் இனவழிப்பையும் பாதுகாக்க மாத்திரமே பயன்படுத்தப்படும்.

எனவே ஈழத் தமிழ் மக்கள் இறைமையுள்ள சுயநர்ணய ஆட்சி ஒன்றின் கீழ் தம்மை தாம் ஆள்வதே அவர்களுக்கு பாதுகாப்பானது. அத்துடன் கடந்த காலத்தில் சுமார் ஐம்பதாயிரம் போராளிகள் உரிமைக்கும் விடுதலைக்கும் களமாடி மாண்டுள்ளனர். பல லட்சம் ஈழத் தமிழ் மக்கள் போரில் கொன்றழிக்கப்பட்டுள்ளனர்.

எனவே லட்சோப லட்சம் மக்களின் தியாகத்தை ஓரளவேனும் ஈடுசெய்த தமிழர்களின் அபிலாசையான சுயநிர்ணய ஆட்சி கொண்ட மாநிலத்தை உருவாக்க வேண்டும். அதனை சர்வதேசத்தின் தலையீட்டுடன் மேற்கொள்வதே நம்பிக்கைக்கும் பாதுகாப்பிற்கும் உரியது. எனவே தமிழ் தலைமைகள் ரணிலின் தந்திர நாடகங்களுக்கு ஏமாற்றி தமிழ் இனத்தை பலியாக்காமல் சர்வதேசத்தின் துணையுடன் சுயநிர்ணய உரிமையை வெல்லும் வழியில் பயணிக்க வேண்டும்…” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More