Thursday, May 9, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை பகுதி 2 | சமுதாய அமைப்பில் நீதியின் முன் பெண்களின் நிலை | ஒரு கண்ணோட்டம் பகுதி 2 | சமுதாய அமைப்பில் நீதியின் முன் பெண்களின் நிலை | ஒரு கண்ணோட்டம்

பகுதி 2 | சமுதாய அமைப்பில் நீதியின் முன் பெண்களின் நிலை | ஒரு கண்ணோட்டம் பகுதி 2 | சமுதாய அமைப்பில் நீதியின் முன் பெண்களின் நிலை | ஒரு கண்ணோட்டம்

3 minutes read

சமுதாய அமைப்பிலே பெண் சுதந்திரம், பெண் சமத்துவம், பெண் விடுதலை என்ற சொற்றொடர்கள் பல்வேறு இடங்களிலும் பேசப்படுகின்றன. சமூகத்தில் பெண்கள் முக்கிய அங்கம் வகிப்பவர்கள். பெண்களுக்கான நீதி இன்றைய சமுதாயத்தில் அமையப் பெற்றுள்ளதா? இன்றைய நோக்கில் பெண்ணுக்குரிய உரிமைகள் அளிக்கப்பட்டனவா? என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய விடயமாகும்.

பெண்ணடிமைவாதம் இவ்வாறு பல்வேறு பரிணாமங்களிலும் காணப்படுவதனை அவதானிக்கலாம். பெண் கற்பிழக்கக் காரணமாகும் ஆணுக்கு அளிக்கப்படும் தண்டனை என்ன? பெண் மாத்திரமே ஒழுக்கம் கெடுகிறாள், அவளே விபசாரி. இத்தகைய ஒருதலைப்பட்சமான சமுதாயக் கோட்பாடுகளால் பெண்களுக்காக நீதிக்குரல் எழுப்ப எத்தகைய சாத்திய நிலையும் இல்லை எனலாம்.

மேலும், குடும்பம் என்ற கோயிலில் திருமணம் என்ற பந்தத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் அந்தஸ்தினை நோக்குவோம். மனைவியை இழந்த கணவன் தன் அந்தஸ்தினை இழப்பதில்லை. ‘பெண்சாதி செத்தால் புதுமாப்பிள்ளை’ என்பதற்கொப்ப விரைவிலேயே மறுமணம் புரிகின்றான்.

அவனுக்கு அவதூறு, இழுக்கு எதுவும் இல்லை. இதே சமுதாயம் கணவனை இழந்த மனைவிக்கு அமங்கலி, துக்கிரி, வாழாவெட்டி, பூ-பொட்டிழந்தவள் என்பன போன்ற இழிசொற்களுக்காளாக்கி, சமூகத்தில் நடைபெறும் எந்தவொரு சுபகாரியத்துக்கும் அப்பெண்ணை அழைக்காது ஒதுக்கிவைக்கிறது.

கணவனை இழந்த பெண்ணை சமூகம் ஏன் இத்தகைய வக்கிரசிந்தனையுடன் நோக்குகிறது? உரிய காலத்தில் திருமணம் நடைபெறாவிட்டால் பழிச்சொல், கணவனால் கைவிடப்பட்டால் வாழாவெட்டி மணமுடித்துப் பிள்ளைப் பேறில்லாவிட்டால் மலடி, கணவனை இழந்தால் விதவை இப்படி எத்தனையெத்தனையோ. அத்துடன், பெண் தன் கணவனுடன் வாழ விரும்பாது விவாகரத்துக் கோரி நின்றால் அவள் சார்ந்துள்ளவர்களின் அனுமதியைப் பெற வேண்டிய நிர்ப்பந்தம்.

மொத்தத்தில் பெண்ணின் ஆசாபாசங்கள் அனைத்தும் கணவனையும் பிள்ளைகளையும் சார்ந்தே இருக்க வேண்டுமென சமுதாயம் கட்டுப்படுத்துகின்றது. இதனால், பெண்ணானவள் தன்னலம் மறந்து சுய உரிமையின்றி வாழவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

18ஆம் 19 ஆம் நூற்றாண்டளவில் இந்திய சமுதாயத்தில் மாமியார் கொடுமை, சீதனப் பிரச்சினை, உடன்கட்டையேறுதல் போன்ற அநீதிகள் பெண்ணின்மீது சுமத்தப்பட்டன. இவற்றில் சீதனப் பிரச்சினை இலங்கையிலும் வேரூன்றியது. சீதனக் கொடுமையினால் இடைநடுவில் முறிந்துவிடும் திருமண பந்தங்கள் ஏராளம் ஏராளம்.

அதனால், குடும்ப வாழ்வில் ஈடுபடச் சென்ற பல பெண்களுக்கு கணவன், மாமியார்களால் பல துன்பங்கள் இழைக்கப்பட்டன. மேலும் கணவன் இறந்துவிட்டால் அவனது சிதையிலேயே மனைவியையும் வைத்துத் தீமூட்டும் கொடூர செயலும் இந்தியாவில் இருந்துவந்தது. அடுத்தடுத்து வந்த சட்டங்கள் இதனை அழித்தொழிக்க ஏதுவாயின.

ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு முதலீடு செய்யப்படுவதில்லை. அடக்கியொடுக்கப்பட்ட இனமாகவே பெண்ணினம் கருதப்படுகின்றது. பிள்ளைகளை உற்பத்தி செய்யும் இயந்திரமாகவே பெண் கணிக்கப்படுகின்றாள். கணவனைக் கவனித்தல், சமையல், பிள்ளை வளர்ப்பு என்ற சிறு வட்டத்திற்குள் ஒடுக்கப்படுகின்றாள்.

இந்தக் கட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து பெண்ணானவள் ஆத்மபூர்வமாக நாட்டின் முன்னேற்றத்தில் பங்குகொள்ள வேண்டும். இவ்வகையில், பெண்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்பட வேண்டும். சில மாற்றங்கள் சட்டபூர்வமாக ஏற்பட வேண்டும். இவை இன்றைய அறிவியலாளர் வாதமாகும்.

ஒரு நாட்டில் ஏற்படும் பல்வேறு அபிவிருத்திகளிலும் முயற்சிகளிலும் பெண்களின் பங்கு கணக்கிலெடுக்கப்படுவதில்லை. சமைத்தல், குடும்பத்தைப் பராமரித்தல் போன்ற பெரும் தொழில்கள், சேவைகள் என்றே கணக்கிடப்படுகின்றன. இந்த மனப்பான்மை நீங்கி பெண்ணின் பெரும் சக்திக்கு மதிப்புக்கொடுக்கப்பட வேண்டும். இவையே இன்றைய பெண்ணிலைவாதக் கருத்துக்களாகும்.

பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி பேரறிஞர் லெனினின் கூற்று இங்கு கோடிட்டுக்காட்டத்தக்கது. ‘வீட்டு வேலைகள் பெண்களுடைய ஆக்கத் திறமைகளையோ ஆளுமையையோ வளர்ப்பதில்லை. மாறாக, அவளை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி வீடு எனும் குறுகிய எல்லைக்குள் அடக்கி வைக்கின்றன. அற்ப வீட்டு வேலை நசுக்குகின்றது.

கழுத்தை நெரிக்கின்றது. சோர்வை ஏற்படுத்துகின்றது. சமையலறையுடனும் குழந்தை வளர்ப்புடனும் அவளைத் தளையிடுகின்றது. இந்த நச்சரிக்கும் வீட்டு வேலைகளுக்கெதிராக ஒரு முழு மூச்சான போராட்டம் எங்கு, எப்பொழுது தொடங்கப்படுகினறதோ அங்குதான், அப்பொழுதுதான் மாதர்களின் மெய்யான விடுதலை தொடங்கும்.’ பேரறிஞர் லெனினின் பெண்ணுரிமைக்கான குரல் பெண்ணினத்தின்மீது சமுதாயம் விதித்திருக்கும் பாரம்.

பெண் தொழில் அசமத்துவ நிலை, வாழ்க்கைத் தரம் குறைப்பு, சமூக அடக்குமுறை, அடிப்படை உரிமை இழப்பு, உணவும்கூட பாலடிப்படையில் பகிரப்படல், கல்விச் சமமின்மை, இல்லமில்லாத இல்லக்கிழத்தியாகப் பெண்ணினம் வாழல், சுகாதார வசதிக்குறைவு, பெண்களுக்கான பொழுதுபோக்கு வசதிகள் குறைவு, பெண் தொழிலாளி நலவுரிமை காக்கப்படுவதிலுள்ள குறைபாடு, காப்பகங்களிலுள்ள சௌகரியக் குறைவு, சமூக அமைப்பின் இறுக்கம் என பெண்ணின் உரிமைகள் நசுக்கப்படும் வழிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

எமது நாட்டின் மலையகப் பகுதிகளில் இத்தகைய சீர்கேடுகள் பெண்களைப் பொறுத்தவரையில் பெருமளவினதாய்க் காணலாம். பெண் தொழிலாளிகளுக்குக் குறைந்த வேதனம், கல்வி வசதிக் குறைவு, சுகாதார சௌகரியக் குறைவு, பெண்களின் உடல்நலம் பேணப்படாமை போன்றன பற்றி ஆழமாகக் குறிப்பிடலாம்.

மேலும், இன்றைய நிலையில் இலங்கைப் பெண்களுக்கு அரசு இழைக்கும் அநீதிக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாக சுதந்திர வர்த்தக வலய வேலைத்திட்ட அமைப்பு முறைகளையும் ஆடைத் தொழிற்சாலைகளையும் காட்டலாம். அந்நியச் செலாவணியை அள்ளித்தரும் ஒன்றியமாக சுதந்திர வர்த்தக வலயம் அமைகின்றது.

ஆயிரமாயிரம் பெண்கள் இங்கு தொழில் செய்கின்றனர். அளவுகடந்த தொழிற்பாட்டினால் வெகுவிரைவில் கண்பார்வை இழக்கின்றனர். உடலும் உள்ளமும் துவள்கின்றனர். வேலைத்தளத்தில் பெண்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுகின்றது. அவளது சோர்ந்த உடலும் அபிலாஷைகள் நொறுங்கிய அவளது இதயமுமே அபிவிருத்தியின் பயன்பேறாக அவளுக்குக் கிடைக்க, அந்நியச் செலாவணி தொடர்ந்து அரசுக்குக் கிடைக்கின்றது. இது பெண் சமூகத்துக்கு அரசு இழைக்கும் தொழில் ரீதியான அநீதியாகும்.

 

 

தொடரும்…

 

 

நன்றி : ஷர்மிலா ஜெயினுலாப்டீன் | நீதிமுரசு 1995 | நிலாப்பெண்  இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More