Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை கூட்டமைப்பின் ஏகபோகம் உடையுமா? நிலாந்தன்

கூட்டமைப்பின் ஏகபோகம் உடையுமா? நிலாந்தன்

5 minutes read

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம் கேட்டேன் “இந்தமுறை யாருக்கு வாக்களிப்பீர்கள்?” அவர் சொன்னார் “யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. ஆனால் எல்லாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதாக வாக்குறுதி தருகிறார்கள். “இதில் யாரை நம்புவது?” நான் கேட்டேன், “அப்படி என்றால் யாருக்குமே வாக்களிக்க மாட்டீர்களா”? அவர் சொன்னார் “இல்லை வாக்களிப்பேன் யாருக்கு வாக்களித்தால் நமது எதிர்ப்பைக் கூடுதலாக காட்டலாமோ அவருக்கு வாக்களிப்பேன்” நான் திரும்ப கேட்டேன் “அப்படி நீங்கள் யாரை தமிழ் எதிர்ப்பின் கூர்மையான வடிவம் என்று கருதுகிறீர்கள் ?” என்று. அவர் சொன்னார் “இதுவரையிலும் யாரையும் அப்படி நான் கருதவில்லை” என்று. “முடிவாக என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன். “யாருக்கு வாக்களித்தாலும் யாருமே எங்களுக்கு எதையுமே பெற்றுத் தரப்போவதில்லை” என்று சலிப்போடு சொன்னார்.

அவர் ஒரு சாதாரண விவசாயி அதுபோலத்தான் சாதாரண தமிழ் வாக்காளர்கள் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்களா ? தமிழ் எதிர்ப்பை கூர்மையாக காட்டுவது என்ற ஒரு விடயத்தில் தமிழ் மக்கள் கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு முன்பு மிகத் தெளிவான மக்கள் ஆணை ஓன்றை வழங்கியிருக்கிறார்கள். கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த அரசுத் தலைவரான தேர்தலின் போது தமிழ் மக்கள் முழுக்க முழுக்க இன உணர்வின் பாற்பட்டு வாக்களித்தார்கள். அவர்கள் வாக்களித்தது சிங்கள வேட்பாளரான சஜித்துக்கு என்று ஒரு தர்க்கத்தை சிலர் முன்வைக்கக் கூடும். ஆனால் அது சஜித்துக்கு ஆதரவான வாக்கு என்பதை விடவும் ராஜபக்ஷக்களுக்கு எதிரான இன உணர்வின் திரண்ட வாக்குகள் என்பதே சரி.

இவ்வாறு திரண்ட மக்கள் உள்ளூராட்சி தேர்தல்களின் போதும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போதும் மாகாணசபைத் தேர்தல்களின் போதும் கட்சி சார்ந்து சமூகம் சார்ந்து சமயம் சார்ந்து பிரதேசம் சார்ந்து சலுகை சார்ந்து சிந்தித்து வாக்களித்தார்கள். ஆனால் இந்தச் சாய்வுகள் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஒரு திரளாக உருத் திரண்டார்கள். இவ்வாறு ஏழு மாதங்களுக்கு முன்பு மகத்தான விதத்தில் முன்னுதாரணமாகத் திரண்ட மக்கள் அடுத்த மாதம் ஐந்தாம் திகதி பரிதாபகரமான விதத்தில் சிதறப் போகிறார்களா? அவ்வாறு சிதறுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக தெரிகின்றன.

இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் தமிழ் அரசியலில் ஒரு நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தமிழ் மக்களை அதிகரித்த அளவில் கூறு போடும் ஒரு தேர்தல் களம் இது. சாதி சார்ந்து சமயம் சார்ந்து பிரதேசம் சார்ந்து சுயேச்சைக் குழுக்களும் கட்சிகளும் அதிகளவில் போட்டியிடும் ஒரு தேர்தல் களம் இது. இவ்வாறு தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கு முழுப்பொறுப்பையும் கூட்டமைப்பே ஏற்க வேண்டும்.

ஏனெனில் கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அக்கட்சி தான் ஏகபோக பெரும்பான்மையை அனுபவித்தது. கடந்த 11 ஆண்டுகால தமிழ்த் தேசிய அரசியலின் தோல்வியே இம்முறை தேர்தல் களத்தில் கிழக்கில் பிரதேச உணர்வுகளை முன்னிறுத்தியும் வடக்கில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை முன்னிறுத்தியும் சமயங்களை முன்னிறுத்தியும் சுயேட்சை குழுக்களும் கட்சிகளும் எழுச்சி பெறுவதற்கு காரணம்.

தேசிய விடுதலைதான் சமூக விடுதலையும் என்ற நம்பிக்கையை தமிழ் வாக்காளர்கள் மத்தியில் பலப்படுத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் தவறிவிட்டன. வடக்கு கிழக்கு இணைப்பு அதாவது தாயகம் எனப்படுவது ஒரு கோட்பாடு அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை; அது ஒரு நடைமுறை; அது ஒரு பண்பாட்டு; பரிவர்த்தனை; அது ஒரு சமூகப் பரிவர்த்தனை; அது ஒரு சமூக இடை ஊடாட்டம் என்பதனை நடைமுறையில் நிரூபிப்பதற்கு தமிழ் தேசியக் கட்சிகள் தவறிவிட்டன. கூட்டமைப்புக்கு மாற்றாகக் களத்தில் இறங்கிய கட்சிகள் கிழக்கில் தம்மை நிலைநிறுத்த தவறிவிட்டன. அதாவது அவை பெரும்பாகம் வடக்கு மைய கட்சிகளே.

இப்படிப்பட்டதொரு பின்னணியில் தமிழ் பகுதிகளில் அக முரண்பாடுகளை நிறுவனமயப் படுத்தும் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் மேற்கிளம்பியுள்ளன. இங்கு ஒரு உதாரணத்தை சுட்டிக் காட்டலாம் யாழ் தேர்தல் மாவட்டத்தில் பட்டம் சின்னத்தின் கீழ் மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி என்றழைக்கப்படும் சுயேட்சைக் குழு-2 போட்டியிடுகிறது. அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசிக்கும் எவருக்கும் ஒன்று புரியும். அவர்கள் தமிழ் தேசியம் என்ற சொல்லை பிரக்ஞை பூர்வமாக பயன்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் சமூக விடுதலை எனப்படுவது தேசிய விடுதலைக்கு எதிரானது அல்ல என்ற நோக்கு நிலையிலிருந்தே அந்த தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு எதிராக தெற்கு மைய கட்சிகளுடன் கூட்டுச் சேர அச்சுயேச்சைக் குழு தயார் இல்லை என்றுதானே பொருள்? ஆயின் அப்படிப்பட்ட சுயேட்சைக் குழுக்களை அவற்றுக்கு உரிய மதிப்பான இடத்தை கொடுத்து தமக்குள் உள்வாங்குவதற்கு ஏன் மூன்று தமிழத் தேசியக் கட்சிகளாலும் முடியாமல் போயிற்று?

அதாவது சமூக விடுதலையைக் கோரும் சமூகங்களை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகி அவர்களுடைய பயங்களைப் போக்கும் விதத்தில் செயற்பட தவறிய ஒரு வெற்றிடத்தில் தான் இவ்வாறு சுயேச்சை குழுக்கள் தோன்றியுள்ளன. இதுபோலவே மத நோக்கு நிலையில் இருந்து உருவாக்கப்பட்ட சுயேட்சை குழுக்களையும் தமிழ் தேசிய கட்சிகள் உள்வாங்க தவறிவிட்டன. இதை இன்னும் ஆழமான பொருளில் கூறின் மதப் பூசல்கள் தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து தலையிட்டு தீர்த்து வைக்கப்படாத ஒரு வெற்றிடத்தில் தான் இப்பொழுது இரண்டு சுயேட்சைக்குழுக்கள் அரங்கில் இறங்கியுள்ளன.
எனவே இம்முறை தேர்தல் களத்தில் தமிழ் தேசிய வாக்கு வங்கியை சோதனைக்கு ள்ளாக்கும் விதத்தில் உருவாகியிருக்கும் கட்சிகளுக்கும் சுயேற்சைக் குழுக்களுக்கும் தமிழ் தேசிய கட்சிகளே பொறுப்புக்கூற வேண்டும்.

அதற்குரிய விலையை வரவிருக்கும் தேர்தலில் அவர்கள் கொடுக்க வேண்டியும் இருக்கும். ஏழு மாதங்களுக்கு முன்பு இனமாகத் திரண்ட மக்கள் இப்பொழுது சாதி சமயம் பிரதேசம் என்று சிதறிப் போவதற்கு யார் பொறுப்பு ?

இவ்வாறு சிதறினால் அதன் விளைவாக கூட்டமைப்பு இதுவரையிலும் அனுபவித்து வந்த ஏகபோக பெரும்பான்மையை இழக்க வேண்டியிருக்கும். அப்படி இழந்தால் அது ஐநாவின் நிலைமாறுகால நீதி பொறிமுறைக்கு கீழ் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து கூட்டமைப்பு உருவாக்கிய புதிய யாப்புக்கான வரைவை மேலும் சோதனைக்கு உள்ளாக்கும்.

ஏற்கனவே அந்த வரைவிற்காக கூட்டமைப்பு ஆகக்கூடிய மட்டும் அடியொட்ட வளைந்து சென்று விட்டது. “சம்பந்தரின் காலத்திலேயே ஒரு தீர்வை காண வேண்டும். அவரைப் போல விட்டுக்கொடுக்கும் ஒரு தமிழ் தலைவர் இனி வரமாட்டார்” என்று டிலான் பெரேரா இடைக்கால வரைவின் மீதான விவாதத்தில் பேசினார். ஆனால் ரனில் விக்ரமசிங்கவின் காலத்தில் விட்டுக் கொடுத்ததை விடவும் மேலும் அதிகமாக விட்டுக் கொடுக்க வேண்டிய தேவையே இப்பொழுது கூட்டமைப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் ராஜபக்ச சகோதரர்களின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அவர்கள் நிலைமாறுகால நீதிக்கு எதிராகவே காணப்படுவார்கள். புதிய யாப்பை உருவாக்க ஒத்துக்கொள்வார்களா?

போதாக்குறைக்கு இப்போது மிலிந்த மொறகொட போன்றவர்கள் பதின்மூன்றாவது திருத்தத்தையும் அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். அதாவது மாகாண முறைமையை அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் ஒரு புதிய யாப்பை உருவாக்கத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இனிமேல் எதிர்பார்க்கலாமா? ராஜபக்ச சகோதரர்கள் கட்டியெழுப்பத் திடடமிடும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தனிச்சிங்கள வாக்குகளை அடித்தளமாகக் கொண்டது.

ஆனால் 2015 இல் உருவாக்கப்பட்ட மூன்றிலிரண்டு பெரும்பான்மை எனப்படுவது அரிதானது. எதிரும் புதிருமாக காணப்பட்ட இரண்டு பெரிய சிங்களக் கட்சிகளும் தமிழ் முஸ்லிம் தரப்புகளும் சேர்த்து உருவாக்கிய ஒரு பெரும்பான்மை அது. அதை அடிப்படையாக வைத்து புதிய யாப்புக்கான ஒரு இடைக்கால வரைபு வரை சம்பந்தரால் முன்னேறக் கூடியதாகவிருந்தது. ஆனால் இனி வரக்கூடிய தனிச் சிங்கள வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட ஒரு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு அந்த இடைக்கால வரைவை முன் நகர்த்த முடியுமா?

அதிலும் குறிப்பாக கோட்டாபய ராஜபக்ச காணி அதிகாரத்தையும் பொலிஸ் அதிகாரத்தையும் தரமாட்டார் என்பது தெளிவாக தெரிகிறது. அப்படி என்றால் அந்த வரைவை சிலவேளைகளில் மேற்கொண்டு நகர்த்துவதற்கு சம்பந்தர் முன்னரை விட அதிகமாக விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். (இனி விட்டுக் கொடுக்க எதுவுமேயில்லை) அப்படி விட்டுக் கொடுப்பதற்கும் அவருக்கு ஏகபோக பிரதிநிதித்துவம் வேண்டும். மாறாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் மக்கள் கூட்டணிக்கும் ஆசனங்கள் கிடைத்தால் அந்த ஏகபோகம் சோதனைக்குள்ளாகும்.

சம்பந்தர் விட்டுக் கொடுக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அக்கட்சிகள் அதை எதிர்க்கும். சம்பந்தரால் ஒரு கட்டத்துக்கு மேல் நகர முடியாது. அப்படிப்பார்த்தால் கூட்டமைப்பு கடந்த 11ஆண்டுகால அரசியலில் அதன் சாதனை என்று கருதுகின்ற யாப்பு மாற்றத்துக்கான இடைக்கால வரைவை மேற்கொண்டு நகர்த்துவதற்கு அவர்கள் மேலும் அதிகமாக விட்டுக் கொடுக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் அக்கட்சி அதன் ஏகபோகத்தை இழக்கக் கூடிய நிலைமைகள் வளர்ந்து வருகின்றனவா?

நிலாந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More