Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை எரிக்கப்பட்ட நூலகமும் எரிக்கப்பட முடியாத அறிவும் | நிலாந்தன்

எரிக்கப்பட்ட நூலகமும் எரிக்கப்பட முடியாத அறிவும் | நிலாந்தன்

8 minutes read
எரிக்கப்பட்ட நூலகமும்  எரிக்கப்பட முடியாத அறிவும்

கடந்த 31ஆம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டதன் நாற்பதாவது நினைவு நாளை தமிழ் மக்கள் அனுஷ்டித்தார்கள். நூலக எரிப்புக்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளில் ஒரு பலமான கருத்துருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திற்கு எதிரான கருத்துருவாக்கத்தில் அது மிகவும் முக்கியமான ஒரு பகுதி. கடந்த 40 ஆண்டுகளையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது ஒரு தமிழனாக ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.எரிக்கப்பட்ட நூலகத்தை தமிழ் மக்கள் எப்படி நினைவுகூர வேண்டும்?

ஈராக்-மௌசுல் நூலகத்தின் நூல்கள் 

கடந்த 31ஆம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டதன் நாற்பதாவது நினைவு நாளை தமிழ் மக்கள் அனுஷ்டித்தார்கள். நூலக எரிப்புக்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளில் ஒரு பலமான கருத்துருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திற்கு எதிரான கருத்துருவாக்கத்தில் அது மிகவும் முக்கியமான ஒரு பகுதி. கடந்த 40 ஆண்டுகளையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது ஒரு தமிழனாக ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.எரிக்கப்பட்ட நூலகத்தை தமிழ் மக்கள் எப்படி நினைவுகூர வேண்டும்?

முதலாவதாக அதை எரித்த சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை உலக அளவில் அம்பலப்படுத்த வேண்டும். அது அதன் தர்க்க பூர்வமாக விளைவாக தமிழ் மக்களுடைய நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும். கடந்த 40 ஆண்டுகளாக சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை அம்பல படுத்துவதற்கான மிக வாய்ப்பான ஒரு சந்தர்ப்பமாக அதை தமிழ் தரப்பு பயன்படுத்தி வருகிறது. நூலக எரிப்பு எனப்படுவது உலகில் மிக அரிதாகவே நிகழ்ந்திருக்கிறது. அது ஒரு பண்பாட்டு இனப்படுகொலை. ஒரு மக்கள் கூட்டத்தின் பிரதான பலம் கல்வி என்று கருதி அந்தக் கல்வியை அழிப்பதாக கற்பனை செய்து கொண்டு எரிக்கப்பட்டதே யாழ் நூலகம் ஆகும். இது காரணமாக நூலக எரிப்புக்கு எதிராக உலகம் முழுவதிலும் ஒரு பலமான கருத்துருவாக்கம் கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கிறது. எனவே இது விடயத்தில் தமிழ் மக்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். இது முதலாவது.

இரண்டாவது எரிக்கப்பட்ட நூலகத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் எரிக்கப்பட முடியாத ஒரு நூலகத்தை தமிழர்கள் கட்டி எழுப்பி இருக்கிறார்கள். அதுதான் நூலகம் பவுண்டேஷன் என்று அழைக்கப்படும் ஒரு டிஜிட்டல் நூலகம் ஆகும். அந்த மெய்நிகர் நூலகத்தை யாருமே எரிக்க முடியாது. இக்கட்டுரை எழுதப்படும் காலத்தில் நூலகம் மெய்நிகர் சேமிப்பகத்தில் ஒரு லட்சத்து ஒராயிரத்து 700க்கும் அதிகமான நூல்களும் ஆவணங்களும் சேமிக்கப்பட்டிருக்கின்றன.ஈழத்தமிழர்கள் மத்தியில் இதுவரையிலும் வெளிவந்த பெரும்பாலான ஆவணங்களை நூலகம் சேமித்து வருகிறது.இது ஒரு மகத்தான சாதனை. எரிக்கப்பட முடியாத ஒரு நூலகத்தை ஈழத்தமிழர்கள் உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள். சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் எதை எரித்தாலும் அழித்தாலும் இடித்தாலும் அதன் சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவை போல ஈழத்தமிழர்கள் மீண்டு எழுவார்கள் என்பதற்கான ஒரு மெய்நிகர் குறியீடு நூலகம் பவுண்டேஷன் எனலாம்.இந்த ஏரிக்கப்பட முடியாத மெய்நிகர் நூலகம்தான் மெய்யான பொருளில் எரிக்கப்பட்ட நூலகத்திற்கான மிகச் சரியான நினைவு கூர்தல் ஆகும்.

தேசிய மற்றும் பல்கலைக்கழக நூலகம் போஸ்னியா, ஹெர்சகோவினா

எனினும்,இதற்கும் அப்பால் ஈழத்தமிழர்கள் போக வேண்டும் என்பதே இக்கட்டுரையின் பேராசை ஆகும்.ஆம். அதை பேராசை என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கடந்த 40 ஆண்டுகளில் குறிப்பாக கடந்த சில தசாப்தங்களில் தாயகத்தில் இருக்கக்கூடிய நூலகங்களில் வாசிப்பவர்களின் எண்ணிக்கை;அவர்கள் எதை வாசிக்கிறார்கள்;எதற்காக வாசிக்கிறார்கள் போன்றவற்றைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு பலவீனமான சித்திரம் நமக்குக் கிடைக்கும். அது என்னவெனில் வாசிப்புப்பழக்கம் தமிழ் மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது என்பதுதான்.

வளர்ந்தோருக்கான ஒரு கல்வி நிறுவனத்தில் ஆண்டுதோறும் இருபது பேர்களை எடுத்து நடத்தப்படும் ஒரு கணக்கெடுப்பின்படி அந்த இருபதுபேரில் நான்கு பேர்கள்தான் வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்த நான்கு பேர்களும் பொதுவாக அன்றாட பத்திரிகைகளை வாசிக்கிறார்கள். அதிலும் இருவர்தான் பாடப் புத்தகங்களுக்கு வெளியே அறிவைத் தேடி அல்லது குறைந்தபட்சம் வாசிப்பதால் கிடைக்கும் இன்பத்திற்காகவாவது வாசிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த நான்கு பேர்களும் யார் என்று பார்த்தால் ஏற்கனவே அரசியலில் அல்லது சமூக செயற்பாடுகளில் ஈடுபட்ட குடும்பங்களில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள்.அல்லது சில ஆசிரியர்களால் அல்லது அரசியல் சமூக செயற்பாட்டாளர்களால் தூண்டப்பட்ட வர்களாக இருப்பார்கள். இதைத் தவிர ஏனைய 16 பேரும் பாடப் புத்தகங்களுக்கு வெளியே வாசிப்பது அரிது என்பதுதான் பரிதாபகரமான ஒரு உண்மையாகும்.

எரிக்கப்பட்ட பின் இப்பொழுது மீளக்கட்டி வெள்ளையடிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு போய்ப் பார்த்தால் தெரியும். அங்கேயும் சாதாரண நாட்களில் வாசிப்பு பகுதியில் அமைந்திருக்கும் பலரும் பரீட்சையை மையமாகக்கொண்டு படிக்கும் மாணவர்களே.அமைதியான சூழலில் படிப்பதற்காக அவர்கள் நூலகத்தை நாடி வருகிறார்கள். அல்லது தனியார் கல்வி நிறுவனங்களில் இடைவேளையின்போது நேரத்தை வீணடிக்காமல் படிக்க கூடியதை பாடத்தைப் படிக்கலாம் என்று கருதி நூலகத்திற்கு வருகிறார்கள்.இது எரிக்கப்பட்டு பின்னர் மீளக் கட்டி எழுப்பப்பட்ட யாழ் நூலகத்தின் நிலை.

வெளியே பார்த்தால் எல்லா ஊர்களிலும் சனசமூக நிலையங்கள் உண்டு.ஆனால் இந்த சனசமூக நிலையங்கள் பலவற்றில் இப்பொழுது அன்றாட பத்திரிகைகள் மட்டுமே வருகின்றன. சஞ்சிகைகள் நூல்களின் வரத்துக்குறைவு. ஏனென்றால் வாசிப்பவர்கள் குறைவு. சில சனசமுக நிலையங்களில் சிலவேளைகளில் ஆடுகளும் மாடுகளும் இளைப்பாற காணலாம். பெரும்பாலான சனசமுக நிலையங்களில் இளையோரை விட நடுத்தர வயதைக் கடந்தவர்கள்தான் பத்திரிகைகளை வாசிப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது.

அப்படியென்றால் இளையோர் வாசிப்பதில்லையா?இல்லை. வாசிக்கிறார்கள்.பெரும்பாலும் இணையத்தில் வாசிக்கிறார்கள். முகநூலில் வாசிக்கிறார்கள். வாட்ஸப்பில் போன்ற கைபேசிச் செயலிகளில் வாசிக்கிறார்கள். கண்ணுக்கும் மனதுக்கும் வேதனையில்லாமல் மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்து கடந்து போய்விட விரும்புகிறார்கள். ஆழமாக வாசிக்க விரும்புவோரின் தொகை மிகக் குறைவு.தொகுத்துப் பார்த்தால் தமிழ்ப்பரப்பில் வாசிப்பவர்களின் தொகை குறைந்து வருகிறதா?. ஒருபுறம் சில தன்னார்வ நிறுவனங்கள் ஊர்கள் தோறும் நூலங்களை நிறுவ முயற்சிக்கின்றன. தாயகத்திலிருந்து நூல்களை வெளியிடும் முயற்சிகளும் ஆங்காங்கே முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் பொதுவான கவலை என்னவெனில் ஆழமாக வாசிப்போரின் தொகை அருகிவருகிறதா? என்பதுதான்.

எல்லாவற்றையுமே “ஸ்குரோல்” பண்ணி கடந்துவிட முடியாது. ஆழமாக தியானம் போல தொடர்ச்சியாக வாசித்தால்தான் தொகுத்து ஆராய்ச்சி செய்யலாம்;சமூகத்திற்கு புதியனவற்றை கூறலாம்.
நமது கல்விமுறை பாடப் புத்தகங்களுக்கு வெளியே வாசிப்பதை  ஊக்குவிக்கவில்லை. இன்னொரு விதமாக சொன்னால் அவ்வாறு வாசிப்பதற்கு நேரமும் இல்லை. பரீட்சைமையக் கல்வியானது பாடப் புத்தகங்களுக்கு வெளியே வாசிப்பதற்கான தேவையை கொன்றுவிட்டது. அது மட்டுமல்ல அது பாடப் புத்தகங்களை வாசிப்பதை விடவும் பாஸ் பேப்பர்களைப் பயில்வது அதிகம் பிரயோசனமானது என்ற நம்பிக்கையை பலப்படுத்துகிறது. ஒருபுறம் மாணவர்கள் பாஸ் பேப்பர்களில் கவனத்தைக் குவிக்கிறார்கள். ஆசிரியர்களோ மாக்கிங் ஸ்கீமின்படி அதாவது புள்ளியிடும் திட்டத்தின்படி படிப்பிக்கிறார்கள். அதன்மூலம் பரீட்சைகளில் அதிகரித்த அடைவு மட்டத்தை காட்டலாம் என்று நம்புகிறார்கள் என்று சுட்டிக்காட்டினார் கிழக்கு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புலமையாளரான ஒரு நண்பர்.இதுதான் நாட்டில் கற்றல் கற்பித்தலின் நிலை.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாசிப்பை எப்படி ஊக்குவிப்பது ?நாட்டில் எல்லா வீடுகளிலும் கைபேசிகள் உண்டு. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் உண்டு. இன்டர்நெட் இணைப்பு உண்டு. ரப்கள் உண்டு.மடிக்கணினிகள் உண்டு. எல்லாவற்றையும் விட முக்கியமாக தட்டையான தொலைக்காட்சிகள் உண்டு.அவற்றுக்கு கேபிள் இணைப்புகள் உண்டு. ஆனால் எத்தனை வீடுகளில் நூலகங்கள் உண்டு ? எல்லா தமிழ் வீடுகளிலும் எவர்சில்வர் சாமான்களையும் பொம்மைகளையும் காட்சிக்கு வைக்கும் ஷோகேஸ்கள் உண்டு. ஆனால் எத்தனை வீடுகளில் பாடப் புத்தகங்களுக்கு வெளியே வாசிக்கப்படும் புத்தகங்களுக்கான அலமாரிகள் உண்டு?

இது ஒரு பாரதூரமான கேள்வி. எரிக்கப்பட்ட நூலகத்தை ஆண்டுதோறும் நினைவுகூரும் தமிழர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. எரிக்கப்பட முடியாத ஒரு மெய்நிகர் நூலகத்தை கட்டியெழுப்பிய பெருமைக்குரிய மக்கள் அதன் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டாமா? எல்லா வீடுகளையும் சிறு நூலகங்களாக மாற்ற வேண்டாமா? மாணவர்களை நடமாடும் நூலகங்களாக மாற்ற வேண்டாமா? இதை யார் பொறுப்பேற்பது?

வாசிப்பில் ஆர்வத்தை தூண்டும் வாசிப்பு வட்டங்களை உருவாக்க வேண்டும். பாடப் புத்தகங்களுக்கு வெளியே வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தவேண்டும்.நல்லநாள் பெரிய நாட்களுக்கோ அல்லது சாதனைகளுக்கோ வழங்கப்படும் பரிசுகள் புத்தகங்களாக அமையட்டும். எல்லாவற்றையும் விட முக்கியமாக பெற்றோர் நூல்களின் பெருமையை உணர வேண்டும். வாசிப்பின் பெருமையை உணர வேண்டும். பெற்றோர் முன்னுதாரணமாக வாசிக்கத் தொடங்கினால் வீடுகளில் பிள்ளைகள் அதை பின்பற்றுவார்கள். இது உலகம் முழுவதிலும் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை. பெற்றோர் நூல்களை ஆராதிக்க வேண்டும்.அதுதான் எரிக்கப்பட்ட நூலகத்திற்கான நினைவு கூர்தலின் அடுத்தகட்ட வளர்ச்சியாகும்.

ஒருபுறம் 40 ஆண்டுகளாக எரிக்கப்பட்ட நூலகத்தை நினைவுகூரும் ஒரு மக்கள்கூட்டம் இன்னொரு பக்கம் மெய்யாகவே நூல்களை ஆதரிக்கின்றதா என்ற கேள்விக்கு விடைகாண வேண்டும். அவ்வாறு நூல்களை நேசிக்காமல் வாசிப்பை பெருக்காமல் வீடுகளில் சிறு நூலகங்களை கட்டி எழுப்பாமல் நூலகத்தை நினைவு கூர்வது என்பது ஒரு அகமுரண். தமிழ் மக்களின் அடிப்படைப்பலம் அறிவு என்று நம்பி நூலகத்தை எரித்தவர்களுக்கு சரியானதும் பொருத்தமானதுமான பதிலடி என்ன தெரியுமா? தமிழ் மக்கள் தங்களுடைய வாழ்வின் எல்லா தளங்ககளுக்கும் அறிவினால் ஒளி பாய்ச்சுவதுதான். அறிவுக்கும் செயலுக்கும் இடையே இருக்கக்கூடிய இடைவெளியை ஆகக் கூடிய பட்சம் குறைப்பதுதான்.தமிழ் அறிவியலுக்கும் தமிழ் அரசியலுக்கும் இடையில் இருக்கக்கூடிய இடைவெளியை ஆகக் கூடிய பட்சம் குறைப்பதுதான். எரிக்கப்பட்ட நூலகத்தை நினைவு கூர்வது என்பது இங்குதான் முழுமை அடைகிறது. அறிவே பலம்:அறிவே ஆயுதம்:அறிவே சக்தி என்று நம்பும் ஒரு தலைமுறையை கட்டியெழுப்ப வேண்டும்.

நிலாந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More