Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை தனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும்தனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும்

தனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும்தனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும்

4 minutes read

lonelydr_mk_murugananthan_a

கூட்டுக் குடும்பமாக அம்மா அப்பா பாட்டன் பாட்டி என வாழ்ந்த காலங்கள் மலையேறிப் போய்விட்டன. இப்பொழுதோ பேசுவதற்கும் துயர்களைப் பகிர்வதற்கும், இன்பங்களைக் கூடிக் கொண்டாடுவதற்கும் முடியவில்லை. கோபிப்பதற்கும் திட்டுவதற்கும் கூட ஆளில்லாது துன்பப்படும் பலரை இப்பொழுது காணக் கூடியதாக உள்ளது.

நவீன வாழ்வில் வசதிகளுக்குக் குறைவில்லை. எல்லாமே வீட்டிற்குள் கிட்டும். ஆனால் பேசுவதற்கு ஆள்தான் கிட்டாது. கணவன் மனைவி ஓரிரு பிள்ளைகள். ஓவ்வொருவருக்கும் அவரவரது பாடுகள். கணனி அல்லது தொலைகாட்சிப் பெட்டி முன் உட்காருவதுதான் நாள் முழவதும் வேலை.

உலகையை உள்ளங்கையில் அடக்கும் தொலைபேசிகளும் இப்பொழுது வந்துவிட்டன. உள் அறையில் உலகத்தைச் சுற்றி வரலாம். ஆனால் உள்ளுறையும் உள்ளத்தைத் தொடுவதற்கு யாருமே இல்லாமல் போய்விட்டது. இதுதான் தனிமை.

ஆம்,  தனிமை என்பது கொடுமையானது. அது ஓரிருவருக்கானது மாத்திரமல்ல, ஒரு உலகளாவிய பிரச்சனையாக உருவாகி வருகிறது. தனிமையென்பது எப்பொழுதுமே ஒரே மாதிரியானது அல்ல. ஆளுக்கு ஆள் மாறுபடும். கணவன் இறந்துவிட குழந்தைகளும் வெளிநாடு சென்றுவிட நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் தனிமை ஒருவிதமானது.

அதே நேரம் வகுப்பறை முழுவதும் சகமாணவர்கள் இருந்தாலும் அவர்களுடன் நட்புப் பெற முடியாத நிலையிலுள்ள பாடசாiலை செல்லும் ஒரு பிள்ளையின் தனிமை முற்றிலும் வேறானது.

 

தனிமையும் தனிமையுணர்வும்

ஆம்! தனிமை வேறு. தனிமையுணர்வு வேறு. தனிமை என்பது வெறுமனே உடல் ரீதியாகத் தனித்திருத்தல் எனலாம். மாறாக தனிமையுணர்வு என்பது ஒரு மனநிலையாகும். சுற்றிவரப் பலர் இருக்கலாம், சுவார்ஸமான பல விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் அவை எவற்றோடும் உளமார ஒன்றுபடாத நிலை இது. மற்றொரு விதத்தில் சொன்னால் வெறுமை உணர்வு, சூழலிலிருந்து அந்நியப்பட்ட மனநிலை, அல்லது தனிமைப்பட்டதான உணர்வு எனலாம்.

“I Feel lonely”  என ஆங்கிலத்தில் சொல்வதை அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால் ‘நான் தனிமையாக உணர்கிறேன்’ என்று வெளிப்படையாகவோ அல்லது ‘பேச்சுத் துணைக்குக் கூட யாரும் இல்லை’  என மறைமுகமாகவோ சொல்வது எமது மரபில் மிகவும் குறைவு எனலாம். எமது உணர்வுகளுக்கு சொல்வடிவம் கொடுப்பதில் நாம் பின்தங்கி; நிற்கிறோம்.

அண்மையில் இராணுவத்தில் இணைக்கபட்ட பல பெண்கள் விட்டு வந்ததாகவும் அல்லது நோயென ஆஸ்பத்திரில் படுத்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம். இதற்கான காரணங்களை அரசியல் ரீதியாகவே பலரும் அணுகுகிறார்கள். ஆனால் முற்று முழுதாக மொழி கலாசார ரீதியாக அந்நியப்பட்ட சூழலில் ஏற்பட்ட தனிமையுணர்வும் காரணமாக இருந்திருக்கலாம்.

 

தனிமையுணர்வு ஏற்படக் காரணங்கள் என்ன?

தனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும்பாரம்பரிய அம்சங்கள் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. பல குடும்பங்களில் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுக் கதைப்பதில்லை. மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கி வாழும்.

பழக்கம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். சூழலில் ஏற்படும மாற்றங்களும் நிறையவே காரணமாகின்றன. முற்றிலும் புதிய சூழலுக்கு இடம் மாறுதல் முக்கியமானது. சொந்த வீடு, சொந்த மக்கள், சொந்தப் பாசை, சொந்த உறவுகள் என வாழ்ந்தவர்கள் திடீரென புலம் பெயர்ந்து சென்று அந்நிய தேசத்தில் போடப்படும்போது தனிமையுணர்வு பலருக்கும் ஏற்படுகிறது. புதிய தொழிலில் இணையும்போதும் இந்த உணர்வு ஏற்படலாம்.

ஒரு சிலருக்கு சுற்றிவர நண்பர்கள், குடும்ப உறவினர் இருந்தும் தனிமையுணர்வு ஏற்படக் கூடும். அவர்களில் ஓரிருவராவது நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லாதபோதே தனிமை உணர்வு ஏற்பட வாய்ப்பு அதிகமாகிறது.

மணமுறிவு, விவாகரத்து, துணைவரின் மரணம் போன்ற குடும்பப் பிரிவுகள் தனிமையை ஏற்படுத்தவே செய்யும். நெருங்கிய நண்பரின், உறவினரின் பிரிவு,மரணம் போன்றவையும் அவ்வாறே தனிமை உணர்விற்குக் காரணமாகலாம்.

ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றிய சுயமதிப்பு உயர்வாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் தனது உடலைப் பற்றி, அழகைப் பற்றி, தொழிலைப் பற்றி அல்லது வேறு ஏதாவது விடயம் பற்றிய தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களும் சற்று ஒதுங்கியிருக்க முயல்வார்கள். இதனால் தனிமை உணர்வும் ஏற்படலாம்.

வேறு உள நோய்களும் காரணமாவதுண்டு.

 

எத்தகைய பாதிப்புகள் எற்படலாம்.

தனிமையாக உணரும் ஒருவருக்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பது தெரிந்ததே. நாம் உணராத அளவிற்கு பலவிதமானவையாக அவை இருக்கலாம்.

இவை யாவும் நேரடியாக தனிமையுணர்வுடன் மட்டுமே தொடர்புடையன அல்ல என்றபோதும் ஏனைய காரணங்களுடன் சேர்ந்து இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

மன அழுத்தம் அதிகரிக்கும். உணர்வுகளை மற்றவர்களுடன் பகிரப் பின்நிற்பதால் தனக்குள்தானே உழன்று இந்நிலை வரக் கூடும். எரிச்சல், மன அமைதியின்மை, மனவிரக்தி போன்றவை வரலாம். அவை தீவிரமடைந்து தற்கொலை பற்றிய எண்ணங்களுக்கும் அடிப்படையாகலாம். தூக்கக் குறைபாடு ஏற்படலாம். அதன் தொடர்ச்சியாக பகல் நேரச் சோம்பலும் ஏற்படுகிறது.

மறதி அதிகரிக்கலாம். இதனால் கற்கைச் செயற்பாடுகள் பாதிப்புறலாம். சரியான தருணத்தில் சரியான தீர்மானங்களை எடுப்பதில் தாமதமும் சிரமங்களும் ஏற்படலாம். சமூகவிரோத செயற்பாடுகளில் இவர்கள் இறங்குவது அதிகம். இதைக் கள ஆய்வுகள் நிருபித்துள்ளன.

மது, போதைப் பொருட்கள், புகைத்தல் போன்றவற்றிற்கு அடிமையாகும் சாத்தியம் அதிகம். பக்கவாதம், மாரடைப்பு போன்றவை வருவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். அல்ஜிமர் நோய் பிற்காலத்தில் வருவதற்கு இதுவும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது.

 

தடுப்பது  எப்படி

தனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும்முதலாவதாக ஒருவர் தனக்கு தனிமை உணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் தானே புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொண்டால் அதை மாற்றுவதற்கு தனது வாழ்வில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமில்லை.

தனிமையுணர்வால் தனது வாழ்க்கையில் என்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதையிட்டு சிந்திக்க வேண்டும். பாதிப்புகள் உள நலம் சார்ந்ததாகவோ உடல் ஆரோக்கியம் கெடுவதாகவோ இருக்கலாம். உங்களோடு ஒத்த சிந்தனைகளும் உணர்வுகளும் உள்ளவர்களோடு உறவுகளை ஏற்படுத்துங்கள். ஏற்கனவே உள்ளவற்றை வலுப்படுத்துங்கள்.

உங்களைப் பற்றிய சிந்தனைகளுக்கு அப்பால் மற்றவர்களது துன்பங்களையும் போதாமைகளையும் கவனத்தில் எடுங்கள். அவர்களுக்கு உதவும் ஏதாவது சமூக சேவையில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் மனம் விரிவடையும். சமூக ஊடாட்டம் அதிகரிக்கும். நல்லது நடக்கும் என நம்புங்கள். தாங்கள் மற்றவர்களால் நிராகரிக்கப்பட்டதான உணர்வு பாதிப்பை ஏற்படுத்தும்.

மாறாக நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதன் மூலம் சுற்றுச் சூழலில் உள்ளவர்களுடன் உறவை வளர்த்துக் கொள்ள முடியும். உடல் ரீதியான தனிமை தவிர்க்க முடியாதிருந்தால் தொலைபேசி, இணையம், ஸ்கைப், பேஸ்புக் போன்ற இன்றைய நவீன வசதிகளைப் பயன்படுத்தி வெறுமையிலிருந்து விடுபடுங்கள்.

தனிமையுணர்வு வாழ்க்கைத் தரத்தையே நரகமாக்கிவிடும். திடமிருந்தால் அதிலிருந்து விடுபடமுடியும். அப்பொழுது நீங்கள் மாத்திரமின்றி சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக நம்பிக்கையோட வாழ வழிபிறக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

 

நன்றி : ‘டொக்டர்’ எம்.கே.முருகானந்தன். MBBS(Cey), DFM (Col), FCGP (SL) குடும்ப மருத்துவர் | பதிவுகள் இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More