தமிழர்களின் உரிமைக்காக – தமிழீழ இலட்சியத்துக்காகத் தமது இறுதி மூச்சு வரைப் போராடி – களமாடி வீரச்சாவினைத் தழுவிய வீரமறவர்களுக்குத் தமிழினம் திரண்டு அஞ்சலி செலுத்தும் ‘மாவீரர் நாள்’ இன்றாகும்.
இன்று மாலை 6.05 மணிக்குத் தாயகமெங்கிலும், புலம்பெயர் தேசங்களிலும் சுடரேற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும்.
பொலிஸார், படையினர் மற்றும் அரச புலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் தாயகமெங்கும் பேரெழுச்சியுடன் இடம்பெறவுள்ளன.
மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதானம் செய்யப்பட்டு அஞ்சலி நிகழ்வுகளுக்குத் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.
துயிலும் இல்லங்களில் மாவீரர் தினத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நேற்று இரவே பூர்த்தியாகியுள்ளன. துயிலும் இல்லங்களைச் சூழச் சிவப்பு, மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு நடுவில் கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது. இன்று மாலை அங்கு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வுகளில் சரியாக மாலை 6.02 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடரேற்றல் இடம்பெறும். இதன்போது மாவீரர் நாள் பாடல்களும் ஒலிக்கவிடப்படும் என்று மாவீரர் தின ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, புலம்பெயர் தேசங்களிலும் இன்று மாவீரர் தின நிகழ்வுகளைப் பேரெழுச்சியுடன் அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.