பெலரஸிற்கு அனுப்ப பொலிஸ் ரிசேர்வ் படையை உருவாக்கியது ரஷ்யா!

தேவைப்பட்டால் பெலரஸ் பிரச்சினையில் தலையிட ரிசேர்வ் படையை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்தநிலை இன்னும் எட்டப்படவில்லை என அவர் ரஷ்ய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

இதன்போது அவர் கூறுகையில், “பெலரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஒரு குறிப்பிட்ட பொலிஸ் ரிசேர்வ் அமைக்கும்படி என்னிடம் கேட்டார். நான் அவ்வாறு செய்தேன். நிலைமை கட்டுப்பாட்டை மீறும்வரை இது பயன்படுத்தப்படாது என்பதையும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்” எனக் கூறினார்.

சோவியத் ஒன்றியத்திலிருந்து பெலரஸ் பிரிந்தது முதல் அந்த நாட்டை 26 ஆண்டுகளாக ஆண்டுவரும் சர்வாதிகார ஆட்சியாளர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ, அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 80 வீத வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வாக்கு கணிப்புகளின் அடிப்படையில், இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் ஸ்வெட்லானா ஷிகானோஸ்கயாவுக்கு வெறும் 10 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து, இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதாக நடுநிலையாளர்களும், எதிர்க் கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டில் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆசிரியர்