May 31, 2023 5:23 pm

இந்தியா உதவியுடன் நேபாளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நேபாள நாட்டின் சௌலுகும்புவில் கழிவுநீர் சுத்திகரிப்பு முகாமைத்துவ நிலையத்தை அமைப்பதற்காக அந்நாட்டின் மத்திய விவகாரங்கள், பொதுநிர்வாக அமைச்சு மற்றும் கும்பு பசங் லமு கிராமிய மாநகர சபையுடன்  காத்மாண்டுவிலுள்ள இந்தியத் தூதரகம் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது.

இந்திய  – நேபாள ஒத்துழைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இந்திய அரசாங்க நிதியுதவியில் சமூக அபிவிருத்தித் திட்டமாக நிர்மாணிக்கப்பட உள்ள இக்கழிவுநீர் சுத்திகரிப்பு முகாமைத்துவ திட்டம் 41.13 மில்லியன் நேபாள ரூபா செலவில் அமைக்கப்பட உள்ளது என்று காத்மண்டுவிலுள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ‘இத் திட்டத்தின் ஊடாக கும்ஜங் கிராமத்தில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரம்  முன்னேற்றமடையும். பொதுசுகாதாரத்தை மேம்படுத்துவதன் தேவையைக் கருத்தில் கொண்டு சௌலுகும்பு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக சுத்தமான குடிநீரும் முன்னேற்றகரமான அடிப்படை சுகாதார வசதிகளும் வழங்கப்படும்.

இந்தியா 2003 ஆம் ஆண்டு முதல் அதிக பயன்மிக்க 523  அபிவிருத்தித் திட்டங்களை நேபாளத்தில் முன்னெடுத்துள்ளது. அவற்றில் 467 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.  நேபாளத்தின் ஏழு மாகாணங்களிலும் கிராம மட்டத்தில் சுகாதாரம், கல்வி, குடிநீர், இணைப்பு, சுகாதாரம் மற்றும் பிற பொதுப் பயன்பாடுகளை உருவாக்குதல் என்றபடி அபிவிருத்தித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.  அவற்றில் சௌலுகும்பு மாவட்டத்தின் இரு அபிவிருத்தித் திட்டங்கள் அடங்கலாக 78 திட்டங்கள் நேபாளத்தின் மாகாணம் -1ல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவும் நேபாளமும் மிக நெருங்கிய அண்டை நாடுகளாக இருப்பதால் பல் துறைகளிலும் பரந்தடிப்படையில்  ஒத்துழைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. இத்திட்டத்தை முன்னெடுப்பதன் ஊடாக நேபாள அரசினதும் மக்களினதும் முன்னேற்றத்திற்கான முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதில் இந்திய அரசின் தொடர்ச்சியான ஆதரவு வெளிப்படுத்தப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்