இலங்கையில் குரங்குகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால், சீனாவுக்கு 1 இலட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்ய பரிசீலித்து வருவதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
“டோக் மக்காக்” என்ற குரங்கு வகை, இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டது. அரிய வகையைச் சேர்ந்த இந்தக் குரங்குகளை, சீனாவின் வேண்டுகோளின் பெயரில், அந்நாட்டிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரியல் பூங்காக்களுக்கு அனுப்பவுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் குரங்குகள் எண்ணிக்கை 30 இலட்சத்தைத் தொட்டுள்ள நிலையில், உணவு தேடி கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை அழிப்பதாலும், சில சமயங்களில் மக்களைத் தாக்குவதாலும் சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்ய பரிசீலித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்படும் குரங்கு ஒன்றுக்கு சீனா 50 ஆயிரம் இலங்கை ரூபாயை செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், சீனாவுக்கு இறைச்சிக்காக, மருத்துவ ஆராய்ச்சிக்காக அல்லது வேறு என்ன நோக்கத்திற்காக இலங்கை குரங்குகள் தேவை என கேள்வி தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது.