தெலுங்கானா நீர்மின் நிலைய தீ விபத்தில் சிக்கிய 9 பேர் உயிரிழப்பு!

தெலுங்கானாவில் ஸ்ரீசைலத்தில் உள்ள நீர்மின் நிலைய ஆலைக்குள் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்த ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்து நேற்றிரவு ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சிக்கியிருந்த 10 பேரை மீட்டனர்.

எனினும், அங்கு மேலும் ஒன்பது பேர் சிக்கியிருந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றபோதும் அவர்களை உயிருடன் மீட்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் சுந்தர் நாயக், மோகன் குமார் மற்றும் பாத்திமா ஆகிய உதவி பொறியாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீசைலம் மின் நிலைய தீ விபத்துக்கான காரணம் குறித்து தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் குற்ற விசாரணைத் துறைக்கு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், விபத்தில் உயிரிழப்பு குறித்து முதல்வர் கவலை வெளியிட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்