கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் 5 மாதங்களுக்கு பின்னர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகின்றது.

இன்று ஆரம்பமாகவுள்ள குறித்த கூட்டத்தொடர் எதிர்வரும்  ஒக்டோபர் 1ஆம் திகதி வரை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மொத்தமாக 18 நாட்கள் கூட்டம் நடைபெறும்.

முதல் நாளான இன்று நடைபெறும் மக்களவை கூட்டம், காலை 9 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் நடைபெறும் கூட்டங்கள்  பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும்.

மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு உள்ளனர். நாட்டில் பெருந்தொற்று பரவல் தீவிரமாக இருந்து வரும் நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற இருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

அனைத்து  நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

இதேபோல் நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் ஆகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொலைப்பேசி செயலி மூலம் தங்கள் வருகையை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கூட்டம் நடத்துவதற்காக இருசபைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. மக்களவை மண்டபத்தில் 257 உறுப்பினர்களும், பார்வையாளர்கள் மாடத்தில் 172 உறுப்பினர்களும் அமர வைக்கப்படுவார்கள்.

இதேபோல் மாநிலங்களவை மண்டபத்தில் 60 உறுப்பினர்களும், பார்வையாளர்கள் மாடத்தில் 51 உறுப்பினர்களும் அமர வைக்கப்படுவார்கள். இவர்கள்  காணொளி மூலம் சபாநாயகரிடம் பேசுவார்கள்.  கதிரைகளுக்கு இடையே எளிதில் பார்க்கக்கூடிய தகடுகள் வைக்கப்பட்டு, சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் சபாநாயகர் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துவார். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்போது அந்த கூட்டம் நடைபெறவில்லை.

ஆசிரியர்