தமிழர் பண்பாடு இல்லாமல் இந்தியா முழுமையடையாது | பிரதமருக்கு கடிதம்

தமிழ் மொழி, பண்பாடு ஆகியவற்றை இணைக்காமல் இந்திய வரலாறு முழுமையடையாது என்றும் தமிழக அறிஞர்களைக் இந்தியப் பண்பாட்டின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவில் சேர்க்காதது வியப்பளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, குறித்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களையும் இணைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அந்த கடிதத்தில், இந்தியப் பண்பாட்டின் தோற்றம், வளர்ச்சி, உலகின் ஏனைய பண்பாடுகளுடன் அதற்குள்ள தொடர்பு குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளார்.

மேலும் பழமையான நாகரிகத்தின் தாயகமாக விளங்கும் தென்மாநிலங்களைச் சேர்ந்த, குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட வல்லுநர் குழுவில் இல்லாததது குறித்துத் தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.

கீழடியில் நடைபெற்ற அகழாய்வால் கிறிஸ்த்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் இருந்தது தெரியவந்துள்ளதாகவும் தமிழ் மொழியும் பண்பாடும் உலகின் பழைமையானவை, இன்னும் நீடித்து நிலைத்து நிற்பவை என்பதை அது காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மொழி, பண்பாடு ஆகியவற்றைச் சேர்க்காமல் இந்திய வரலாறு முழுமையடையாது என்றும் தமிழக அறிஞர்களைக் குழுவில் சேர்க்காதது வியப்பளிப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த அறிஞர்களை வல்லுநர் குழுவில் சேர்க்கப் பண்பாட்டு அமைச்சகத்துக்குப் பிரதமர் அறிவுறுத்த வேண்டும் எனத் தமிழக மக்களின் சார்பில் கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்