மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 3-வது அலை காரணமாக தினசரி பாதிப்பு அதிவேகத்தில் உயர்ந்து வருகிறது.


கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 1.5 லட்சத்துக்கு மேல் இருந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் 2.47 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 63 லட்சத்தை தாண்டியது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை தொட்டு உள்ளது.


தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் உருமாறிய வைரஸ் காரணமாகத்தான் தற்போது கொரோனா அதிகரித்து 3-வது அலையில் புதிய உச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒமைக்ரான் பாதிப்பு 5,488 ஆக உயர்ந்து உள்ளது.


இதில் 2,162 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3,326 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மராட் டிய மாநிலத்தில்தான் அதிகப்படியான பாதிப்பு இருக்கிறது.
டெல்டா மற்றும் ஒமைக்ரான் ஆகிய 2 வகை வைரசால் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது.


கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது.


அதன்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரி மூடல், 50 சதவீத பயனாளிகளுக்கு அனுமதி, உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்தி கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.


கொரோனா தடுப்பு குறித்து மாநில சுகாதார துறை செயலாளருடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஏற்கனவே ஆலோசனை நடத்தி இருந்தார்.

இதற்கிடையே நாட்டில் நிலவும் கொரோனா சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். காணொலி வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில் அரசின் உயர் அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் பங்கேற்றனர்.


இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாநில முதல்-மந்திரிகளுடன் விரைவில் ஆலோசனை மேற்கொள்ளப்படும். மாவட்ட அளவில் சுகாதார உள்கட்டமைப்பை உறுதி செய்யவேண்டும். அவசரகால கொரோனா நிதி உள்ளிட்ட உதவிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும். போர்க்கால அடிப்படையில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும்’’ என்று கூறினார்.

இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக இந்த ஆலோசனை நடைபெற்றது.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமித் ஷா, மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆசிரியர்